ரோகிணி நட்சத்திர பலன்கள்

நம்பி வந்தவர்களுக்காக எந்த வித தியாகத்தையும் செய்யும் குணம் கொண்டவர்கள் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.

இருபத்தி ஏழு நட்சத்திரங்களையும் சுற்றி வரும் சந்திரனுக்கு மிகவும் பிடித்த நட்சத்திரம் ரோகிணியாகும். ஒ, வ, வி, உ என்ற எழுத்தை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களும் ரோகிணி நட்சத்திரத்தின் ஆதிக்கம் கொண்டவர்கள் ஆவர்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒளிவீசும் கண்களையும், கவர்ச்சியான தோற்றமும் கொண்டவர்களாக இருப்பார்கள். தாம்  நேசிப்பவர்களுக்காக எந்தவித தியாகத்தையும் செய்ய தயங்க மாட்டார்கள்.

அனைவரையும் அரவணைத்து வழிகாட்டும் திறன் மிக்கவர்கள். யாரையாவது எதிரியாக நினைத்து விட்டால், அவர்களை திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள்.

உண்மை விரும்பிகளாக இருக்கும், ரோகிணி நட்சத்திரக்காரர்கள், சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட, மன மகிழ்ச்சிக்காக மற்றவர்களுக்கு செலவு செய்வதிலேயே ஆர்வம் காட்டுவார்கள்.

சுதந்திரமாக இருக்க விரும்பும் இவர்கள், யாரிடமும் கைகட்டி வேலை செய்ய விரும்புவது அரிது. அனைத்து துறைகளை பற்றிய ஞானம் இவர்களுக்கு அதிகம் இருக்கும்.

இவர்கள் மற்றவர்களை வழி நடத்துவதற்காக பிறந்தவர்கள். இவர்களை போன்ற ஆசான்கள் கிடைப்பது மிகவும் அரிது.

ரோகிணியில் பிறந்த பெண்கள், அழகும் அறிவும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். வயது ஆனாலும் இளமையாகவே இருப்பார்கள். சிலருக்கு பலவீனமான மனமும், முன் கோபமும் அதிகம் இருக்கும். இவர்களை தூண்டி விட்டால் சண்டை போட தயங்க மாட்டார்கள். பொதுவாக ரோகிணி  நட்சத்திரத்தில் பிறந்த பெண், கூட்டு குடும்பத்தை விட, தனி குடித்தனத்தையே விரும்புவாள்.

ரோகிணியில் பிறந்த ஆண்களை சுற்றி பெண்களும், பெண்களை சுற்றி ஆண்களும் அதிகம் இருப்பார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த அனைவரும் கிருஷ்ணரை போல சாதுர்யம் நிறைந்தவர்களாக இருப்பார்கள்..

அடுத்தவர்களை உருவாக்குவதில், அடுத்தவர்களுக்கு வழிகாட்டுவதில் இவர்கள் முதன்மையாகவும், ஏணியாகவும் இருப்பார்கள். மற்றவர்களை எடை போடுவதில் இவர்களுக்கு நிகர் யாரும் இருக்க முடியாது.

மற்றவர்களின் வாகனங்கள், ரோகிணி நட்சத்திர காரர்களுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படும்.

ரோகிணி நட்சத்திரத்தில் நின்ற கிரகம், வளர்ப்பு தாயிடம் வளர்ந்தவர்கள், காதல் திருமணம் செய்தவர்கள், கல்வியில் தடையை சந்தித்தவர்கள், நரம்பு மற்றும் தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்களை சொல்லும்.

ரோகிணி நட்சத்திரம் தேர், வண்டி, கோவில், சக்கரம், ஆலமரம் போன்ற  வடிவம் கொண்டதால், தொழில் செய்பவர்கள் இவற்றை லோகோவாகப் பயன்படுத்தலாம்.

ரோகிணி  மனுஷ கண நட்சத்திரம் ஆகும். இதன் அதிதேவதை பிரம்மா. பிரஜாபதி. பரிகார தெய்வம் அம்மன். திருப்பரங்குன்றத்தில் உள்ள மச்ச முனி ஜீவ சமாதியிலும், ரோகிணி நட்சத்திரத்திற்கு உரிய பாரிஜாத மலர்களை கொண்டு வழிபடலாம்.

ரோகிணிக்கு உரிய விருட்சம் நாவல் மரம் என்பதால், நாவல் மரக்கன்றுகளை நட்டு நீரூற்றுவது நல்லது. அல்லது, கோயில் மற்றும் பிற இடங்களில் உள்ள நாவல் மரங்களுக்கும் தண்ணீர் ஊற்றலாம்.

இதன் மிருகம் நல்ல பாம்பு. பறவை ஆந்தை. எனவே இவற்றுக்கு இடையூறு செய்யாமல் இருப்பது நல்லது.

ரோகிணி நட்சத்திரத்திற்கு உரிய திருத்தலம் காஞ்சிபுரத்தில் உள்ள பாண்டவ தூத பெருமாள் கோவில் ஆகும். ரோகிணி நட்சத்திர தினத்தன்று, இந்த ஆலயத்திற்கு சென்று வழிபடுவது சிறப்பு.

ரோகிணி நட்சத்திர காரர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள, பால் தானம் செய்வது நல்லது.

=====================================

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.