அஸ்தம் நட்சத்திர பலன்கள்

தங்கள் செயலால், அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வசீகர தன்மை கொண்டவர்கள் அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.

கணங்களுக்கெல்லாம் அதிபதியான கணபதி அதாவது வினாயகர் பிறந்த நட்சத்திரம் என்ற பெருமைக்கு உரியது அஸ்தம்.

அஸ்த நட்சத்திரம் கன்னி ராசியில் இடம் பெற்றுள்ள, சந்திரனின் நட்சத்திரம் ஆகும். அதனால், சந்திரனுக்கு உரிய கற்பனை திறனும், புதனுக்கு உரிய சாதுரியமும் இவர்களுக்கு நிறைந்து காணப்படும்.

அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அனைவரையும் கவர்ந்து இழுக்கும் ஒரு வித வசீகர தன்மையை கொண்டு இருப்பார்கள். மரியாதையும், கௌரவமும் எளிதில் இவர்களுக்கு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனோ நிலை இருக்கும்.

மற்றவர்களை ஏமாற்றும் எண்ணம் இவர்களுக்கு கொஞ்சம் கூட இருக்காது. ஆனால் பிறரால் ஏமாற்றப்பட்டால், அவர்களை பழி வாங்க துடிப்பது உண்டு.

எந்த வித ஆதாயமும், பிரதி பலனும் எதிர்பார்க்காமல், மற்றவர்களுக்கு ஓடோடி உதவும் குணம் இவர்களுக்கு அதிகம் உண்டு. அதனால், மன உளைச்சலுக்கு ஆளாவதும் உண்டு.

இவர்களுடைய வாழ்க்கை ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். அதிர்ஷ்டமும், துரதிர்ஷ்டமும் மாறி, மாறி வரும். ஏதோ ஒரு மறைமுக சாபம் இவர்களை துரத்திக் கொண்டே இருக்கும்.

எதிரிகளை பழிவாங்க துடிப்பதும், சில நேரங்களில் மன்னிக்கும் குணமும் இருக்கும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் கூச்சம் நிறைந்தவர்கள். பெரியோர்களை மதிக்கும் குணம் உண்டு. அதே சமயம், மற்றவர்கள் தங்களை அடிமை படுத்துவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள். சில நேரங்களில், எந்த வித எதிர் விளைவுகளையும் கவனத்தில் கொள்ளாமல், தமது கருத்தை தைரியமாக சொல்லி விடுவதால்,உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பகையை சம்பாதிக்க நேரும்.

அஸ்த நட்சத்திரத்தை பொறுத்த வரை ஆண்களை விட பெண்களுக்கே சிறப்பான பலனை தருவதாக கூறப்படுவதும் உண்டு.

அஸ்த நட்சத்திரத்தில் நின்ற கிரகம், புத்திர தோஷம். தாமதமாக குழந்தை பிறத்தல், உறவில் திருமணம் செய்தவர்கள், இரண்டு திருமணம் முடித்தவர்கள், போன்றவற்றை சொல்லும்.

அஸ்த நட்சத்திரத்திற்கு உரிய அதிதேவதை ஸ்ரீ காயத்ரி தேவி. ஆதித்யன் என்றும் கூறப்படுகிறது. பரிகார தெய்வம் பெருமாள். கரூரில் உள்ள கருவூரார் ஜீவ சமாதியையும் வழிபடலாம். உகந்த மலர் வெண்தாமரை.

அஸ்த நட்சத்திரம் கை அல்லது உள்ளங்கை போன்ற வடிவம் கொண்டதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்த வடிவத்தை தங்கள் தொழில் மற்றும் வணிகத்திற்கு லோகோவாக பயன்படுத்தலாம்.

இந்த நட்சத்திரத்திற்கு உரிய விருட்சம் அத்தி மரம். எனவே அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அத்தி மரத்திற்கு தண்ணீர் ஊற்றலாம்.

அஸ்த நட்சத்திரத்திற்கு உரிய மிருகம் பெண் எருமை. பறவை பருந்து. எனவே இவற்றுக்கு தொந்தரவோ, இடையூறோ கொடுக்காமல் இருப்பது நல்லது.

மயிலாடுதுறையை அடுத்த குத்தாலத்திற்கு அருகே உள்ள கோமல் என்ற ஊரில் எழுந்தருளியுள்ள, கிருபா கூபாரேஸ்வரர் உடனுறை அன்னபூரணி ஆலயமே, அஸ்த நட்சத்திரத்திற்கு உரிய ஆலயமாகும்.

ஜென்ம நட்சத்திரம் அன்று அஸ்த நட்சத்திர காரர்கள், இந்த ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது நன்மையை தரும்.

அஸ்த நட்சத்திர காரர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள வாகன தானம் செய்வது நல்லது.

=====================================

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.