அவிட்டம் நட்சத்திர பலன்கள்

தன்னுடைய முயற்சியாலும், உழைப்பாலும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.

தவிடு கூட தங்கம் ஆகும் அளவுக்கு அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்று கூறுவதுண்டு. மற்றவர்களை சார்ந்து வாழாமல், தனித்து இயங்கும் தன்மை கொண்டவர்கள் அவிட்ட நட்சத்திரக்காரர்கள்.

க. கி. கு. கே போன்ற எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்துக்களாக கொண்டவர்களும், அவிட்ட நட்சத்திர ஆதிக்கம் கொண்டவர்கள் ஆவர்.

செவ்வாயின் நட்சத்திரமான அவிட்டத்தின் முதல் இரண்டு பாதம் மகரத்திலும், எஞ்சிய இரண்டு பாதம் கும்பத்திலும் இடம்பெற்றுள்ளன. இரண்டும் சனியின் ராசி வீடுகள் என்பதால், வேகமும், விடா முயற்சியும், கொண்ட கொள்கையில் உறுதியும் இவர்களின் செயல்களில் பளிச்சிடும்.

அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கூர்மையான அறிவுத்திறன் மிக்கவர்கள். அனைத்தையும் திறமையுடன் செய்து முடிக்கும் திறமைசாலி. மனம், வாக்கு, செய்கையால் மற்றவர்களுக்கு தீங்கு இழைக்காதவர்கள்.

எப்போதும் மற்றவர்களை சார்ந்து வாழாமல், தனது திறமை, மற்றும் உழைப்பால் தனித்து வாழ விரும்புவார்கள். பிறர் சொல்வதை அப்படியே கேட்டு  நடக்காமல்,. தனது சுய சிந்தனைப்படியே வாழ விரும்புவார்கள்.

இவர்கள் யாருக்கும் இடையூறு செய்ய விரும்புவதில்லை. ஆனால் இவர்களுக்கு இடையூறு செய்து விட்டால், சந்தர்ப்பம் வரும் வரை காத்திருந்து, பதிலடி கொடுப்பார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், ஆசைகள் நிறைந்தவர்கள். தாராள மனப்பான்மையும், ஊதாரித்தனமான செலவும் அதிகம் செய்பவர்கள். கஷ்டப்படுபவர்களுக்கு இறக்கப்பட்டு உதவி செய்பவர்கள். ஆனாலும், அனைவரும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

அவிட்ட நட்சத்திரத்தில் நின்ற கிரகம்  சொத்து பிரச்சினை, காது பிரச்சினை பற்றி சொல்லும். மருத்துவம், பொறியியல் துறைகளில் சிறந்து விளங்கும்.

அவிட்ட நட்சத்திரமானது, மிருதங்கம் மற்றும் உடுக்கை போன்ற வடிவத்தில் இருப்பதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இவற்றை தங்கள் தொழிலுக்கான லோகோவாக பயன்படுத்தலாம்.

அவிட்ட நட்சத்திரத்திற்கு அதிதேவதை, அனந்த சயன பெருமாள் மற்றும் அஷ்ட வசுக்கள்.  பரிகார தெய்வம் முருகன். சிதம்பரத்தில் உள்ள ஸ்ரீ திருமூலர் ஜீவ சமாதியையும் வணங்கலாம். உகந்த மலர் செண்பக மலர்.

ராட்சத கணம் கொண்ட இந்த நட்சத்திரத்தின் விருட்சம் வன்னி மரம். எனவே கோவில் மற்றும் பிற இடங்களில் உள்ள வன்னி மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவது நல்லது.

அவிட்ட நட்சத்திரத்திற்கான மிருகம் பெண் சிங்கம். பறவை வண்டு.எனவே இவற்றுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது.

கும்பகோணம் அருகே உள்ள கீழ் கொருக்கை பிரம்மஞானபுரீஸ்வரர் உடனுறை புஷ்பவல்லி ஆலயமே, அவிட்ட நட்சத்திரத்திற்கு உரிய கோயிலாகும்.

அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று, இந்த ஆலயம் சென்று வழிபடுவது நல்லது.

அவிட்ட நட்சத்திர காரர்கள், தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள, வஸ்திரதானம் செய்வது நல்லது.

=====================================

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.