ஆயில்ய நட்சத்திர பலன்கள்

மற்றவர்களை பாதுகாத்து அவர்களை வழிநடத்தும் திறன் படைத்தவர்கள் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.

ஆயில்யம் என்பது ஆதிசேஷனை குறிக்கும் நட்சத்திரமாகும். கண்டிப்புக்குக்கும் தியாகத்திற்கும் பெர்யர் பெற்ற ஸ்ரீ ராமரின் சகோதரன்  லட்சுமணனின் நட்சத்திரம் ஆயில்யம்.

சந்திரனுக்கு உரிய கடக ராசியில் அமைந்துள்ள ஆயில்ய நட்சத்திரம், புதனின் ஆதிக்கம் கொண்டதாகும். அதனால், சந்திரனுக்கு உரிய கிரியேட்டிவிட்டியும், புதனுக்கு உரிய சாதுர்யமும் இவர்களிடம் மிகுந்து காணப்படும்.

இவர்கள் வெளிப்படையாக எப்படி நடந்து கொண்டாலும், இவர்களின் உள் மனதில் வேறொன்று ஓடிக்கொண்டிருக்கும். அது யாருக்கும் தெரியாது. தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் அது வெளிப்படும். குறிப்பாக சொல்லுக்கும், செயலுக்கும் வேறுபாடு இருக்கும்.

இவர்களுடைய பேச்சு திறனும், சாதுர்யமும் மற்றவர்களை கவர்ந்து இழுக்கும் தன்மை கொண்டது. சிலரது பேச்சும், செயல்பாடும் முரட்டுத்தனமாகவும் இருக்கும்.

நம்பி வந்தவர்களை காப்பாற்றும் மனோ பாவம் இவர்களிடம் இருப்பதால், இவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்.

அதேபோல், மற்றவர்களை வழி நடத்தும் திறன் மிக்கவர்களாக இருப்பதால், அரசியல் மற்றும் அரசாங்க உயர் பதவிகளில் ஜோலிப்பவர்கள் அதிகம்.

எப்போதும் துரு துருவென இருக்கும் பல பேர் ஆயில்ய நட்சத்திரமாக இருப்பார்கள். அதேபோல், ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களும், பெண்களும், சுயையாக சமைக்க தெரிந்தவர்களாகவும், சுவையாக சாப்பிட கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். இவர்களை கட்டுப்படுத்த நினைத்தால், அவர்களுக்குதான் பாதிப்பு.

மேலும், தன்னுடைய பேச்சை கேட்பவர்களை மட்டுமே இவர்கள் அருகில் வைத்து கொள்வார்கள். மாற்று கருத்து சொல்பவர்களை அருகில் சேர்க்க மாட்டார்கள்.

இவர்கள் செய்யும் உதவி தகுதியான பயனாளிகளுக்கு போய் சேராது. தேவை இல்லாத பலருக்கே இவர்கள் உதவி செய்வார்கள். எவ்வளவு குறைகள் இருந்தாலும், இவர்கள் அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள், பிரபலம் ஆவார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், எதற்கும் கவலைப்பட மாட்டார்கள், ஆனால் தன்னை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். நாணமும், ஒழுக்கமும் நிறைந்திருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களை மதிப்பு மரியாதையுடன் நடத்துவார்கள்.

ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், யார் வீட்டுக்கு சென்றாலும், கூச்சப்படாமல், தேவையானதை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்

இவர்கள் இருக்கும் இடம் எப்போது கலகலப்பாக இருக்கும். ஆனால், கோபம் வந்தால் பாம்பை போல சீறுவார்கள். சுய முயற்சியால் முன்னேறுவார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பலர், பூர்வீக சொத்துக்களை அனுபவிப்பதில்லை.

ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண், வீட்டின் வரவு, செலவு கணக்குகளையும், சமையல் விவகாரங்களையும் கண்ணும் கருத்துமாக நிர்வாகம் செய்வார்கள்.

உரிமையை தாமாக கையில் எடுத்து கொள்வார்கள். அதனால், மாமியாருக்கு ஆகாது என்று சொல்லப்படுகிறது. உண்மையில், ஆயில்ய நட்சத்திர மருமகளை, அனுசரித்து செல்வதற்கு மாமியார்  பழகிக்கொண்டால், அவருக்கு ராஜ உபசாரம் கிடைக்கும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் நின்ற கிரகம், சுவையான சமையலையும், சமையல் திறனையும், இரண்டு திருமணம் முடித்தவர்களையும் சொல்லும்.

ஆயில்ய நட்சத்திரம், பாம்பு மற்றும் அம்மி போன்ற வடிவம் கொண்டிருப்பதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இவற்றை, தங்கள் தொழில் மற்றும் வணிகத்திற்கான லோகாவாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆயில்ய நட்சத்திரத்தின் அதிதேவதை ஸ்ரீ ஆதிசேஷன். பரிகார தெய்வம் பெருமாள். நாகப்பட்டினம் அருகே வடக்கு பொய்கை நல்லூரில் உள்ள கோரக்கர் சமாதியையும் வணங்கலாம். உகந்த மலர்  செவ்வரளி.

ஆயில்ய நட்சத்திரத்திற்கான விருட்சம் புன்னை மரம். எனவே புன்னை மரக்கன்றுகளை நட்டு அவற்றுக்கு நீர் ஊற்றலாம். அல்லது கோவில் உள்ளிட்ட பிற இடங்களில் உள்ள புன்னை மரங்களுக்கும் நீர் ஊற்றலாம்.

ஆயில்யம், ராட்சத கணம் கொண்ட நட்சத்திரம் ஆகும். இதன் மிருகம் ஆண் பூனை, பறவை கிச்சிலி எனவே இவற்றுக்கு தொந்தரவோ, இடையூறோ கொடுக்க கூடாது.

கும்பகோணம் அருகே, திருந்துதேவன்குடி என்ற ஊரில் அமைந்துள்ள கர்கடேஸ்வரர் சமேத  அருமருந்து நாயகி, அபூர்வ நாயகி ஆலயமே, ஆயில்ய நட்சத்திரத்திற்கு உரிய கோயிலாகும். ஜென்ம நட்சத்திரத்தன்று, இந்த ஆலயம் சென்று வழிபடுவது ஆயில்ய நட்சத்திர காரர்களுக்கு நல்லது.

ஆயில்ய நட்சத்திர காரர்கள், தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக் கொள்ள, காளை மாடு தானம் செய்வது நல்லது.

=====================================

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.