ஜோதிடத்தில் 12 கட்டம் 9 கிரகம் வைத்து எப்படி பலன் சொல்வது

ஜாதகத்தில் "" என்று போடப்பட்ட வீடுதான் முதல் வீடு. அதுதான் இலக்கினம்.

அடுத்த வீடு 2-ம் வீடு.

அதாவது எந்த ஜாதகத்தை எடுத்தாலும் இலக்கினத்தை முதல் வீடாகக் கொண்டு எண்ண வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் சில காரகத்துவம் உண்டு. அவைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் பலன் சொல்ல முடியும்.

நமது உடலில் பஞ்சபூதங்களும் அடக்கம், நவகிரகங்களும் அடக்கம்,

சூரியன்- உடலில் உள்ள எலும்பு, முதுகெலும்பு, இதயம், வலதுகண் இவற்றைக் குறிக்கும்.

சந்திரன்- உடலில் உள்ள ரத்த ஓட்டத்தைக் குறிக்கும்..ரத்தம் அல்ல, ரத்த ஓட்டம்.மனம், எண்ணம், நீர்ச்சத்து, இடது கண்.

செவ்வாய் — ரத்தம், ரத்தம் உற்பத்தியாகும் எலும்பு மஜ்ஜை, பற்கள், நகம், புருவம்.

புதன்- தோல்,பச்சை நரம்புகள்.

குரு - மூளை, வயிறு

சுக்கிரன் - உடலில் உள்ள சுரப்பிகள், கணையம், விந்து மற்றும் கருப்பை

சனி - ஜீரண உறுப்புகள், முதுகு, மூட்டுக்கள்

ராகு - நவ துவாரங்கள், ( பிளந்த அமைப்புகள்)

கேது - குடல், ஆசனவாய்,

முதல் வீடு :

1.       ஜாதகருடைய நிறம், உருவம், உயரம், குணாதிசயங்கள் முதலியவற்றை அறியலாம். ஜாதகர் ஒல்லியானவரா, இல்லை பருமனானவரா, கோபம் உள்ளவரா, இல்லை சாந்தமானவரா என்றும் அறியலாம்.

2.       உடல் நலத்தைப் பற்றியும் அறியலாம். அவர் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குப் போவாரா இல்லை தாழ்ந்த நிலைக்குப் போவாரா, என்பது பற்றியும் அறியலாம். உடல் பாகத்தில் தலையைக் குறிப்பது முதல் வீடு தான். ஒருவர் சொந்த ஊரில் வாழ்வாரா அல்லது அந்நிய தேசத்தில் வாழ்வாரா என்பது பற்றியும் முதல் வீட்டை வைத்துத்தான் சொல்ல வேண்டும்.

3.       முதல் வீட்டில் யார், யார் இருக்கிறார்கள், முதல் வீட்டின் அதிபதி எங்கு இருக்கிறார் அதாவது இலக்கினாதிபதி எங்கு இருக்கிறார், முதல் வீட்டை எந்தெந்த கிரகங்கள் பார்க்கின்றன என்பதை வைத்தும் பலன் சொல்ல வேண்டும்.

இரண்டாவது வீடு :

1.       குடும்பத்தைக் குறிக்கிறது. பணவரவு, செலவு போன்ற பொருளாதாரத்தையும் இது குறிக்கிறது. அதைத்தவிர நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், போன்ற சொத்துக்களையும் கூறலாம். ஆடை, அணிகலன்களையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம்.

2.       இரண்டாம் வீட்டை வாக்குஸ்தானம் என்றும் அழைப்பார்கள். ஒருவர் கனிவாகப் பேசுவாறா, அல்லது கடினமாகப் பேசுவாறா, நன்றாகப் பேசுவாறா அல்லது திக்கிதிக்கிப் பேசுவாறாஎன்றும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம்.

3.       கண்பார்வையையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். ஒருவர் கண்ணாடி அணிபவரா அல்லது இல்லையா என்பதையும் இந்த வீட்டை வைத்து கூறலாம். பொதுவாக எந்த வீடாக இருந்தாலும் அந்த வீட்டில் நல்ல கிரகங்கள் இருந்தால் அந்த வீட்டைக் குறிப்பன நல்லதையே செய்யும்.

4.       தீய கிரகங்கள் இருந்தால் அந்த வீட்டைக் குறிக்கும் காரகத்துவங்கள் கெட்டு விடும்.

5.       உதாரணமாக 2-ம் வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள். 2-ம் வீடு குடும்பத்தைக் குறிக்கிறது. அதில் சனி இருக்கிறது எனக் கொள்வோம். சனி ஒரு பாவ கிரகம் அல்லவா! சனி எதையும் குறைவாகவும், தாமதமாகவும் கொடுப்பார். குடும்பம் சிறியதாக இருக்கும். பணவரவு குறைவாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதியும் குறைவாகவும் இருக்கும். என்ன- புரிகிறதா?

மூன்றாம் வீடு :

1.       இந்த வீட்டைக் கொண்டு ஒருவரின் இளைய சகோதரம், ஒருவரின் தைரியம், அண்டை வீட்டிலுள்ளவர்கள், குறுகிய பயணம், ஆகியவற்றையும் கூறலாம். கடிதப் போக்கு வரத்துக்கள், தகவல் பரிவர்த்தனைகள், வீடு மாறுதல் ஆகியவற்றையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம்.

2.       இந்த வீட்டில் கேது இருப்பாரேயாகில் அவர் கலகங்களை விளைவிப்பவை என்றும் கூறலாம். இன்னும் நகைச்சுவையாகக் கூறப்போனால் அவரைக் "கலியுக நாரதர்" எனவும் கூறலாம்.

3.       உடல் பாகங்களில் காதுகள், தொண்டை, கைகள், நரம்பு மண்டலம், ஆகியவற்றை இந்த 3-ம் வீடு குறிக்கிறது. இந்த வீட்டை தைரிய ஸ்தானம் என்றும் கூறுவார்கள். இந்த வீட்டில் செவ்வாய் இருந்தால் அவர் மிக்க தைரியசாலியாக இருப்பார். ஏனெனில் செவ்வாயானவர் வீரமிக்க கிரகம். ஒருவருக்கு வீரத்தைக் கொடுப்பவர் செவ்வாய் தான். அங்கே சனி இருந்தால் அவர் அவசரப் படாமல் நிதானத்துடன் செயல் படுவர். யோஜனை செய்து தான் முடிவு எடுப்பார். அவசரப் பட மாட்டார்.

நான்காம் வீடு :

1.       இது தாயாரைக் குறிக்கும் வீடு. கல்லூரிவரையிலான படிப்பு, வீடு, வாசல் போன்ற ஸ்திர சொத்துக்கள், பூமிக்குள் இருக்கும் புதையல், கால்நடைகள், பசுக்கள், விளைநிலங்கள், அதிலிருந்து கிடைக்கும் தான்யங்கள் ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த நாலாவது வீடுதான்.

2.       ஒருவருக்கு 4-ம் வீட்டில் செவ்வாய் இருக்கிறார் என்க் கொள்ளுங்கள். அவர் நிச்சயமாக வீடு கட்டுவர். ஏனெனில் செவ்வாய் பூமிகாரகன். பூமிகார கனான செவ்வாய் 4-ம் வீட்டுடன் சம்பந்தப் பட்டதால் அவர் நிச்சயம் வீடு கட்டுவர்.

3.       இதே செவ்வாய் 9-ம் வீட்டு அதிபதி எனக் கொள்வோம். இவருக்கு தகப்பனாரின் வீடு கிடைக்கும். ஏன்? 9-ம் வீடு தகப்பனாரைக் குறிக்கிறது. செவ்வாய் பூமிகாரகனாகி, 9-ம் வீட்டையும் குறித்து , ஸ்திரசொத்துக்களைக் குறிக்கும் வீடான 4-ம் வீட்டில் இருக்கிறார். ஆக இவருக்கு தகப்பனாரின் வீடு கிடைக்கும் எனக் கூறலாம். என்ன புரிகிறதா?

5-ம் வீடு :

1.       இதை புத்திர ஸ்தானம் என்று அழைப்பார்கள். இதைப் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் அழைக்கல்லாம். அதாவது போன ஜென்மத்தில் ஒருவர் நல்லது செய்தவரா இல்லையா என்று இந்த வீட்டைக் கொண்டு முடிவு செய்யலாம்.

2.       ஒருவருக்குக் குழந்தைகள் உண்டா அல்லது இல்லயா என்றும் முடிவு செய்யலாம். ஒருவருக்குக் கலைத்துறையில் நாட்டம் இருக்கிறதா அல்லது இல்லயா என்பது பற்றியும் இந்த வீட்டைக்கொண்டு முடிவு செய்யலாம். அதே போன்று, சினிமா, டிராமா, லாட்டரி, குதிரைப்பந்தயம், ஆகியவற்றையும் இந்த வீடுதான் குறிக்கும்.

3.       ஒருவர் காதலித்துத் திருமணம் செய்வாரா இல்லையா என்பது பற்றியும் இந்த வீட்டைக் கொண்டு முடிவு செய்யலாம். ஆன்மீக வாழ்க்கையையும் இந்த வீட்டைக் கொண்டு தீர்மானம் செய்யலாம். வேதங்கள், மந்திரங்கள் ஆகியவற்றையும் இந்த வீட்டைக் கொண்டு தீர்மானம் செய்யலாம்.

6-ம் வீடு :

1.       கடன், வியாதி, உண்ணும் உணவு , வேலை செய்யும் இடம், ஒருவருடைய வேலைக்காரர்கள் ஆகிய வற்றையும் இந்த வீட்டைக் கொண்டு சொல்லலாம். கவலைகள், துக்கங்கள் தாய் மாமன் ஆகியவற்றைக் குறிப்பது இந்த வீடு தான்.

2.       உதாரணமாக ஒருவருக்குக் கன்னியா இலக்கினம் எனக் கொள்ளுங்கள். இலக்கினாதிபதி புதன் 6-ம் வீடான கும்பத்தில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். புதன் 1-ம் வீட்டிற்கு அதிபத்யாகி 6-ம் வீட்டில் இருக்கிறார். அவர் உடல் நிலையில் நிச்சயமாகக் கோளாறு இருக்கும். ஏனெனில் புதன் 1-ம் வீட்டையும் 6-ம் வீட்டையும் குறிக்கிறார். ஆக இவர் உடலில் ஏதோகோளாரு இருக்கிறது எனக் கொள்ள வேண்டும்.

3.       2-ம் வீட்டின் அதிபதி சுக்கிரன் 6-ம் வீட்டில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். 6-ம் வீடு Employment என்று சொல்லுகின்ற வேலையைக் குறிக்கிறது. 2-ம் வீடு தனத்தைக் குறிக்கிறது. ஆகவே இவர் வேலைக்குச் சென்று பணம் சம்பாதிப்பர் எனக் கொள்ளலாம். இவ்வாறாக 6-ம் வீட்டிலுள்ள கிரகம் மற்ற எந்த வீட்டுடன் சம்மந்தம் கொண்டுள்ளதோ அதை வைத்துப் பலன் சொல்ல வேண்டும்.

7-ம் வீடு :

1.       திருமணத்தைக் குறிக்கும் வீடு இதுதான். வியாபாரத்தைக் குறிக்கும் வீடும் இது தான். ஒருவர் மரணத்தைக் குறிக்கும் வீடும் இது தான். பிரயாணத்தைக் குறிக்கும் வீடும் இது தான். ஒருவர் ஜாதகத்தில் 7-ம் வீட்டில் சனி இருக்கிறது எனக் கொள்ளுங்கள்.

2.       சனிதான் எதையும் தாமதப் படுத்துபவர் ஆயிற்றே! ஆக இவருக்குத் திருமணம் தாமதம் ஆகும் எனக் கூறலாம். உதாரணமாக கடக இலக்கினக்காரர் ஒருவருக்கு 7-ம் இடமான மகரத்தில் சனி இருக்கிறது எனக் கொள்வோம். சனியானவர் 7-ம் வீட்டிற்கும், 8-ம் வீட்டிற்கும் அதிபதி. 7-ல் இருக்கிறார். அவர் திருமணத்தைத் தாமதப் படுத்துவதோடு சில சங்கடங்களையும் திருமணத்திற்குப் பிறகு கொடுப்பார். ஏனெனில் சனி 8-ம் வீட்டிற்கும் அதிபதியல்லவா! சரி! சனிக்குப் பதிலாக 6-ம் வீடு, 9-ம் வீட்டிற்கு அதிபதியாகிய குரு இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். திருமண வாழ்வு எப்படி இருக்கும்? 6-ம் வீடு என்பது 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு அல்லவா! திருமண வாழ்வு சுகப்படாது. பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும்.

8-ம் வீடு :

1.       ஒருவரின் ஆயுளைக் குறிக்கும் வீடு இது தான். பிதுரார்ஜித சொத்துக்கள், உயில்கள், இன்ஷ்ஷரன்ஸ், கிராட்டுவிட்டி, போனஸ் ஆகியவைகளைக் குறிக்கும் வீடு இதுதான். ஒருவர் மரணம் இயற்கையானதா அல்லது துர்மரணமா என்பதையும் இந்த வீட்டைக் கொண்டு அறியலாம்.

2.       துன்பம், துக்கம், தோல்வி, தண்டனை, தடைகள், ஜெயில் தண்டனை, இவைகளையும் அறியும் வீடு இதுதான். இந்த வீட்டை "துஸ்தானம்" எனக் கூறுவர்கள்.

3.       8-ம் வீட்டில் சனி இருந்தால் ஒருவருக்கு தீர்க்காயுசு எனக் கொள்ளலாம். குரு இருந்தாலும் தீர்க்காயுசு எனக் கொள்ளலாம். பொதுவாக 8-ம் வீட்டில் உள்ள கிரகங்களோ, அல்லது 8-ம் வீட்டிற்கு அதிபதியோ தங்கள் தசா, புக்திகளில் நல்லதைச் செய்யாதென்பது பலரின் அபிப்பிராயம்.

9-ம் வீடு :

1.       தகப்பனர், போன ஜென்மத்தில் ஒருவர் செய்த பூர்வ ஜென்ம புண்ணியங்கள், பாபங்கள், நீண்ட பயணம், தெய்வ தரிசனம் செய்தல், உயர்கல்வி, முன்பின் தெரியாதவர்கள், ஆகியவற்றைக் குறிப்பது இந்த வீடு தான்.

2.       உதாரணமாக 9-ம் வீட்டில் ஒருவருக்கு சனி, செவ்வாய் போன்ற பாப கிரகங்கள் இருக்கிறது எனக் கொள்ளுவோம். நிச்சயமாக அவருக்குத் தகப்பனார் அனுசரணையாக இருக்க மாட்டார். 9-ம் வீட்டைத் தவிர சூரியனின் நிலையையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சூரியன் பிதுர்காரகனல்லவா? 9-ம் வீட்டில் பாப கிரகங்கள் இருக்குமேயாகில் அந்த வீட்டின் காரகத்துவங்கள் எல்லாம் கெட்டு விடும்.

10-ம் வீடு :

1.       ஒருவரின் ஜீவனம், கெளரவம், சபைகளில் முக்கியத்துவம் ஆகியவற்றை 10-ம் வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு ஆகியவற்றையும் இதைக் கொண்டேதான் சொல்ல வேண்டும். ஒருவருக்கு அரசியல் நல்லபடியாக இருக்குமா அல்லது இருக்காதா என்றும் இந்த வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். இதைக் கர்மஸ்தானம் என்றும் கூறுவார்கள்.

2.       தாயார், தகப்பனாருக்குச் செய்யும் கர்மங்களையும் இந்த வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். ஒருவரின் எஜமானர், அரசாங்கம் இவைகளையும் இந்த வீடுதான் குறிக்கிறது.

11-வது வீடு :

1.       லாபஸ்தானம் நமக்கு வரக்கூடிய லாபங்களையும், சுகங்களையும் அளிக்கக் கூடியது இந்த வீடுதான். மூத்த சகோதரத்தைப் பற்றியும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். நண்பர்களையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். நல்ல கிரகங்கள் இந்த வீட்டில் இருந்தால் நல்ல வைத்துத்தான் கூற வேண்டும். நல்ல கிரகங்கள் இந்த வீட்டில் இருந்தால் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

2.       பொதுவாக வாழ்க்கையில் என்ன மிச்சம் என்பதை இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். 11-ம் வீட்டிற்குடைய கிரகம் 5-ம் வீட்டில் இருந்தால் புத்திரத்தால் லாபம் எனக் கொள்ளலாம். அதே 11-ம் வீட்டிற்குடைய கிரகம் 10-ல் இருந்தால் நல்ல ஜீவனம் எனக் கொள்ளலாம். அதே போல் 11-க்குடைய கிரகம் எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டிற்கு நல்லது எனக் கொள்ள வேண்டும்.

12-வது வீடு:

மோட்ச ஸ்தானம் இதை விரய ஸ்தானம் என்றும் சொல்லுவார்கள். நமக்கு வரக்கூடிய செலவுகள், நஷ்டங்கள் எல்லாவற்றையும் இந்த வீட்டை வைத்தே சொல்லவேண்டும். துன்பம், பாவங்கள், வறுமை, துரதிஷ்டம், ஆகியவையும் இந்த வீட்டை வைத்தே சொல்ல வேண்டும். மறைமுக எதிரிகளையும் இந்த வீட்டை வைத்தே சொல்ல வேண்டும்.

1.       ஒருவருக்கு ஜெயில் வாசம், உள்ளதா அல்லது இல்லையா என்பதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். கடனைத் திருப்பிக் கொடுத்தலையும், முதலீடு செய்வதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும்.

நாம் மேலே 12 வீடுகளின் முக்கியமான காரகத்துவங்களை மட்டும் பார்த்தோம். இது ஜோதிடத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்குப் பயன் படும். இந்த ஆரம்ப கட்டத்தைக் கடந்தவர்கள் "பிருஹத் ஜாதகம்", "பலதீபிகை", "உத்திரகாலாம்ருதம்" ஆகிய நூல்களைப் படிக்க வேண்டும். அப்போதுதான் ஜோதிட அறிவு விருத்தியாகும்.

12 பாவங்கள்:

முதல் பாவம்:

உடல் தோற்றம், பொலிவு, குணங்கள், வாழ்க்கையின் நிலை, செல்வம், செல்வாக்கு ஆகியவற்றை முதல் பாவத்தின் வலிமை, அதில் தங்கியிருக்கும் கிரகங்கள் அவற்றின் சிறப்பு முதலியவற்றைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்.

உடல்வாகு, நிறம், கவர்ந்திடும் செல்வம், உடலில் உள்ள அழகு. இரத்தத்தின் தன்மை, அழகிய உள் பாகங்களும் தலைப்பகுதியும், புகழ், வாழ்க்கையில் அனுபவிக்கும் அனைத்து சுகங்களையும், சுப நிகழ்ச்சிகளையும், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கப் பெறும் ஆயுளையும் குறிக்கும் பாவமாகும். அடித்தளம் பலமாக அமைந்தால்தான் கட்டிடமும் உறுதியாக ஆண்டாண்டு காலத்திற்கு நிலைத்திருக்க இயலும். அதே போன்று லக்னமும் பலமாக அமைந்தால்தான் அனைத்தும் அனுபவிக்கும் யோகத்தை நீண்ட ஆயுளைத் தரும். வாழ்க்கை வசதிகளை அனுபவிக்க செல்வம் இருந்தால் மட்டும் போதாது. அதை அனுபவிக்க உடல் நலமும் தேவைதான். உடல் நலத்தோடு அனுபவிக்க ஆயுளையும் பெற வேண்டும். இதற்கு இலக்கின பாவமும் லக்கினாதிபதியும் பலமாக அமைய வேண்டும்.

இரண்டாம் பாவம்:

குடும்ப சூழ்நிலை, செல்வம், கலை, பேச்சுத் திறமை, கல்வி ஆகியவற்றிக்கு உரியது

கல்வி, தனம், வாக்கு, குடும்ப நிலை, வலது கண், அதிர்ஷ்டம், சகல சாஸ்திரப்புலமை, மறுத்துப் பேசுதல், எதிர்வாதம் செய்தல், வீண் பேச்சு பேசுதல், நண்பரால் வருமானம், அந்நியரை அண்டிப் பிழைத்தல், ஆடை அலங்காரம், தங்கம், நவரத்தினம், உண்ணும் உணவு, கோபம், வஞ்சனை முதலியவை இரண்டாம் பாவகத்தின் காரகங்கள் ஆகும். இதனை தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் என்றும் அழைக்கின்றோம்.

மூன்றாம் பாவம்:

இளைய சகோதரி, சகோதரர்கள், பணியாள்கள், வாகன வசதி, சங்கீத ஞானம், அரசின் ஆதரவு, துணிவு, வீர தீரச் செயல்கள், உறவினர். நண்பர்கள் உதவி முதலியவற்றிற்கு முக்கியமானது.

எதிரியை வெற்றி கொள்ளும் திறமை, வேலையாட்கள், இசை, இசையில் ஆர்வம், அதில் தொழில் அமையும் நிலை, வீரியம், அதாவது ஆண்மை சக்தி, தைரியம், எதையும் துணிவுடன் பயமின்றி செயலாற்றுதல், போகம், உடல் உறவில் தணியாத தாகம், இளைய உடன்பிறப்புகள், காதில் ஏற்படும் நோய், காது கேளாத நிலை, ஆபரணங்கள் அணியும் யோகம், தங்கம், வெள்ளி, வயிர ஆபரணங்களை பெறும் யோகம், உணவு அருந்தும் பாத்திரங்கள், மற்றவர்களிடம் பணியாற்றும் நிலை, அதனால் பெறும் நன்மைகள், இவைகளை குறிக்கும். குறிப்பாக சகோதர ஸ்தானம் எனப்படும்.

நான்காம் பாவம்:

கல்வி, நில புலன்கள், செல்வம், கால் நடைகள், முன்னோர் சொத்து. நண்பர்கள் ஆதரவு, உதவி முதலியவற்றுடன் தாயாரின் சுக சௌகரியங்களையும் அறிய முக்கியமானது. இந்த பாவத்தை மாத்ரு பாவம் என்று கூறுவர்.

உயர் கல்வி, வாகனம் வீட்டில் நடைபெறுகின்ற சுப நிகழ்ச்சிகள், வசிக்கும் வீடு, வியாபாரம், தாய் நலம், தாயின் உறவு, அவர்களுடன் ஏற்படும் உறவு, உறவினர்களின் நிலை, புகழ்பெறும் நிலை, புதையல் கிடைக்கும் யோகம், தாயின் ஒழுக்கம், பால் பால் பொருட்கள், பசு பண்ணை, தல தரிசனம், சிறுதூர பிரயாணம், அதனால் ஏற்படும் நன்மை, ஆலோசனை பெரும் வாய்ப்பு, கனவுகள், மருந்துகள், அதிகாரம் செய்யும் தகுதி இவைகளையும் பொதுவாக வீட்டை பற்றி சுகத்தை பற்றி தெரிவிக்கும் பாவமாகும்.

ஐந்தாம் பாவம்:

இதைப் புத்திரஸ்தானம் என்று அழைப்பர். ஒருவருக்குச் சந்ததி விருத்தி – குழந்தைகள் பிறப்பது – எப்படியிருக்கிறது என்பதை அறிய ஐந்தாம் பாவம் முக்கியமானது. இந்த பாவத்தின் வலிமையைக் கொண்டுதான் ஒருவருக்கு மழலைச் செல்வம், உண்டா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டும். மற்றும் ஜாதகர் ஒருவரின் பூர்வ புண்ய பாவம், புகழ், பாவம், செல்வம், செல்வாக்கு, மதி நுட்பம் ஆகியவற்றையும் இந்த ஐந்தாம் பாவமே எடுத்துக் கூறக் கூடியது.

மாமன்மார்களின் உறவு, தந்தை வழி உறவுகள், குழந்தை செல்வம் பூர்வ புண்ணியம், சென்ற பிறவியில் பெற்ற நன்மை தீமைகளை அதன் அளவை தெரிவிக்கும் பாவம், தமிழ் மொழியில் தேர்ச்சி, மந்திரங்களை அறியும் திறமை, உயர் கல்வி பெரும் தகுதி, அறிவாற்றல், அனுபவ அறிவு, சொற்பொழிவு செய்யும் திறமை, பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் தகுதி, தாத்தாவின் நிலை, மந்திர உபதேசம், இவற்றை குறிக்கும். குறிப்பாக புத்திர பாவம், பூர்வ புண்ணிய பாவம் எனப்படும்.

ஆறாவது பாவம்:

தாய் மாமன் குணம், உடல் ஆரோக்கியம், உதவி முதலியவற்றைக் கண்டறிய முக்கியமான பாவம், ஜாதகரின் உடல் ஆரோக்கியம், விரோதிகள் தன்மை, கடன், பொருள் சேதம், விபத்துகள் முதலியவற்றையும் எடுத்துக் கூறுவது இந்த பாவம்.

ஒருவருக்கு ஏற்படும் வியாதி அதனால் ஏற்படும் பாதிப்பு, பகைவர்களால் ஏற்படும் துன்பம், ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்து, காயங்கள், தாயின் உறவினர்களுடன் ஏற்படும் வழக்குகள், சண்டையிடுதல் யுத்தம் செய்தல். வீண் வம்பிற்கு செல்லுதல், திருடர்களால் ஆபத்து, பொருட்கள் களவாடப்படுதல், தண்ணீரால் ஆபத்து, பெண்களால் உண்டாகும் வீண் வம்புகள், அதனால் அடையும் துன்பம், பாம்புகளால்- விஷத்தால் ஆபத்து, சந்தேகம், சோம்பேறித்தனம், ஒருவரை தூசித்தல், பாவமான காரியங்களை செய்தல், நோய்,. சிறைபடுதல், உயர் பதவி பெறுதல், கால்நடைகளை பற்றி அறிதல் இவை ஆறாம் பாவம் குறிக்கும் காரகங்களாகும்.

ஏழாவது பாவம்:

காதல் திருமணம், மனைவி உறவு முறை, நொருங்கிய உறவினர், சகோதர சகோதரிகள் ஆதரவு. உதவி, வழக்குகள், அரசு ஆதரவு. சமுகத்தில் செல்வாக்கு. விரோதம் முதலியவற்றைக் குறிக்கக் கூடியது. இதை களத்திர-மனைவி-பாவம் என்று பொதுவாகச் செல்வார்கள்.

திருமணத்தைக் குறிக்கும் பாவம். ஆண்களுக்கு மனைவியை பற்றியும், பெண்களுக்கு கணவரை அறிவிக்கும் பாவம். பற்றியும் திருமணம் நடைபெறும் காலம், மனைவி, கணவன், ஆயுள் சுற்றுப்புற சூழ்நிலை, கூட்டு வியாபாரம், திருமணத்தால் ஏற்படும் சுகம், மகிழ்ச்சி,சிற்றின்பம், துணி வியாபாரம், அரசாங்கத்தில் ஏற்படும் கவுரவம், பட்டம், பதவி, சன்மானம், தறி நெய்தல், பவர் லூம், சிறிய பஞ்சு மில், எந்த பொருளையும் வாங்கி விற்கும் கமிஷன் தொழில், தரகர் தொழில் இவற்றை குறிக்கும். களத்திர ஸ்தானம் எனப்படும்.

எட்டாவது பாவம்:

ஆயுள் பாவம் பெண்களுக்கு தாலி பலத்தைக் குறிக்கும் பாவமும் இதுவே. உடல் கோளாறு, விபத்துகள். பொருள் இழப்பு, நோய்கள், மனைவியுடன்-கணவனுடன்-உறவு முறை முதலியவற்றையும் இந்த பாவத்தைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.

ஒருவரது ஆயுளை தெரிவிக்கும் பாவம். யுத்தத்தில் ஆயுதங்களால் காயம் ஏற்படுதல், உயர்வான இடத்தில இருந்து விழுவதால் ஏற்படும் ஆபத்து, மலை மீள் இருந்து விழுதல், நீங்காத வியாதிகளால் ஏற்படும் துன்பம், இடையூறுகள், அவைகளால் ஏற்படும் மனசஞ்சலம், நீங்காத பகையால் ஏற்படும் ஆபத்துகள், வீண் அலைச்சல், செய்ய தகாத காரியங்களை செய்தல், அதனால் ஏற்படும் துயரம், கருத்து மோதல்கள், அஞ்ஞான வாசம், அதிகமாக ஏற்படும் வீண் செலவுகள், மரணம் இவைகளை தெரிவிக்கும் பாவம். இது 10 ஆம் பாவத்திற்கு (ஜீவன பாவம்) 11 ஆம் பாவமாகும் (லாப ஸ்தானம்). இதில் உள்ள கிரகங்களில் தசா புக்தி அந்தரங்களில் தொழில் முறையில் யோகத்தை, லாபத்தை தரும்.

ஒன்பதாம் பாவம்:

பித்ருஸ்தானம்-தந்தை-அதிர்ஷ்டம், பொன், பொருள், தான தர்ம குணம். தூர தேசப் பயணம், பிறவிப் பயன், தெய்வ பக்தி, பேரன் பேத்திகள், முன்னோரின் தர்ம சிந்தை முதலியவற்றை அறிய ஒன்பதாம் பாவம் உதவுகிறது.

இந்த பாவம் பாக்கிய ஸ்தானம் எனப்படும். சென்ற பிறவியில் செய்த புண்ணியத்தை அனுபவிக்கும் பாவம். பாவாதி பாவம் என்ற விதிப்படி 5 ஆம் பாவத்திற்கு 5 ஆம் பாவமே 9 ஆம் பாவம். தான தர்மம் செய்யும் குணம், திருகோவில்களை கட்டும் பணியில் ஈடுபடுதல், கும்பாபிஷேகம் திருப்பணிகளில் செய்தல், போன்ற ஈடுபடும் யோகம். ஆன்மீக உணர்வு, அயல்நாடு செல்லும் வாய்ப்பு, அங்கு பெறும் பணி,தொழில்கள், அவைகளால் பெறும் லாப-நஷ்டம், நன்றியுணர்வு இவைகளை தெரிவிக்கும் பாவம். தர்மம் என்பது கேட்டு கொடுப்பது தானம் என்பது கேட்காமல் கொடுப்பது, 32 அறம் என்பதை செய்யலாம் வகைகளில் என கூறியுள்ளார்கள்.

பத்தாம் பாவம்:

இதை, கர்ம ஸ்தானம், தொழில் ஸ்தானம் என்றும் அழைப்பார்கள். வாணிபம், அரசாங்கப்பதவி, செல்வம், வெளி நாட்டுப் பயணங்கள், தெய்வபக்தி முதலியவற்றைக் கண்டறியலாம். ஜாதகருக்குக் கர்மம்-ஈமக்கடன்-செய்ய பிள்ளைகள் உண்டா என்பதை அறியவும் இந்த பாவம் முக்கியமானது.

பணியாற்றுதல், தொழிலால் பெறும் லாபம், அதனால் பெறும் புகழ் உயர் பதவி, அரசாங்க கவுரவம், புகழ், பட்டம், பதவி, அரசியலில் ஈடுபாடு, அதில் பெறும் புகழ், அரசாளும் யோகம், தெய்வ வழிபாடு, உணவில் ஏற்படும் ஆர்வம், சுவையான உணவு கிடைக்க பெறும் தகுதி, இரவாபுகழ் பெறும் தகுதி, இவைகளை உணர்த்தும் பாவம். சுவை, தொழில் ஸ்தானம், கர்ம ஸ்தானம், ஜீவன ஸ்தானம் எனப்படும்.

பதினொன்றாம் பாவம்:

லாபஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானம், சகோதர சகோதரிகள் உறவு முறை, கல்வி, நகைகள், உடை, வீடு, மன மகிழ்ச்சி முதலியவற்றை பதினொன்றாம் பாவம் எடுத்துக் காட்டுகிறது.

மூத்த உடன்பிறப்புக்களை பற்றியும், சேவை செய்யும் நிலை, இளைய மனைவி (இரண்டாம் திருமணத்தை குறிக்கும்). செய் தொழில், தொழிலி கிடைக்கும் லாபம், பயிர் தொழில், குதிரை,யானை இவைகளை வளர்த்தல், பராமரித்தல், கால்நடை வளர்ப்பு, அறிவாற்றல், மன அமைதி பெறுதல், நண்பர்கள் அமையும் நிலை,அவர்களால் பெறும் நன்மைகள், மாப்பிள்ளை மருமகள் இவர்களால் பெறும் நன்மைகள், லாபங்கள், உதவிகள், வாகன யோகம் இவற்றை குறிக்கும் பாவமாகும். துன்பங்கள்,துயர்கள் தீர்ந்திடும்

தீர்ந்திடும் நிலை ஆடை இவைகளையும் குறிக்கும்.

பன்னிரண்டாம் பாவம்:

இதை விரைய ஸ்தானம், சோர ஸ்தானம் என்றும் மறைவிடம் என்றும் சொல்வார்கள். பன்னிரண்டாம் பாவம் நன்றாக இருந்தால் ஜாதகருக்குப் பொன்னும், புகழும் பெருகும். விரோதிகள் இருந்தாலும், பொருள் இழப்புகள் நேரிட்டாலும் ஜாதகர் மனம் தராமல் இருப்பார். ஆணாக இருந்தால் மனைவி பெண்ணாக இருந்தால் கணவன் நடத்தையை அறிய இந்த பாவம் முக்கியமானது.

பன்னிரண்டு பாவங்களின் தன்மைகள் அனைத்தும் பொதுவானது. இவற்றில் தங்கும் கிரகங்கள் நிலை-விளிமை தன்மை ஆகியவற்றைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.

அந்நிய நாட்டில் அமையும் தொழில், உத்தியோகம், செலவினங்கள், செலவு செய்வதால் ஏற்படும் சுகம், சயன சுகம், விவசாயம், தியாக மனப்பான்மை, யாகம் செய்தல், மறுமையில் கிடைக்கும் பேறு, மனைவி அல்லது கணவர் அமையும் இடம், அனவசிய செலவுகள், சிறைபடுதல், நிம்மதியான தூக்கம், தூக்கமின்மை, பெண்களுடன் இல்லற சுகம், ஏற்படும் தாம்பத்திய சுகம் இவைகளை குறிக்கும். மறுபிறவி மரணத்திற்கு பிந்தைய நிலை இவற்றையும் குறிக்கும். குறிப்பாக விரய பாவம் எனப்படும் ஒவ்வொரு பாவத்திற்கும் அதற்கு 12 ஆம் பாவமே அழிவு பாவமாகும்.

சுபக் கிரகங்களும், அசுபக் கிரகங்களும்.

இயற்கையான சுபக்கிரகம் சந்திரன், சுக்கிரன் & குரு

இயற்கையான அசுபக்கிரகம் சனி, ராகு, கேது & செவ்வாய், சூரியன்.

50% + 50% புதன் நடுநிலை.

சேர்க்கைகளை வைத்து அதன் தன்மை மாறும்

புதன் சுபனோடு சேர்ந்தால் சுபன், அசுபனோடு சேர்ந்தால் அசுபன் ஒவ்வொரு லக்கினத்திற்கும் நன்மை தீமைகளைச் செய்யக்கூடிய கிரகங்களைப் பட்டியல் அடிப்படை வலிமை உச்சம் பெற்ற கிரகத்திற்கும், வர்கோத்தமம் பெற்ற கிரகத்திற்கும், மூலத்திரி கோணத்தில் இருக்கும் கிரகத்திற்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு? அந்த நிலைப்பாடுகளில் எது வலிமையானது? எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? முதலில் கிரகங்களின் அடிப்படை நிலைமையின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு, பிறகு மேலே உள்ள கேள்விக்கு வருவோம்.

1.   இயற்கைத் தன்மை அல்லது இயற்கைக் குணம்: நன்மை செய்யக்கூடிய கிரகம் அல்லது தீமை செய்யக்கூடிய கிரகம் (நல்லவன் அல்லது கெட்டவன்).

2.   வலிமை: பலம் பொருந்தியவன் அல்லது பலமில்லாதவன். அல்லது இப்படி வைத்துக்கொள்ளுங்கள்: வலிமை உடையவன் அல்லது வலிமை இல்லாதவன் கிரகங்களுக்கு இந்த நிலைப்பாடுகள் உண்டு.

3.   சுபக்கிரகம் அல்லது நன்மை செய்யக்கூடிய கிரகம்: ஜாதகத்தில் வலிமையான நிலையில்: பலன்: உங்களை விரும்பும் மாமனார். உங்களுக்காக உயிரையும் தரக்கூடியவர். அதோடு அவர் கோடிஸ்வரர்!

4.   சுபக்கிரகம் அல்லது நன்மை செய்யக்கூடிய கிரகம்: வலிமை குன்றிய நிலையில்: பலன்: தன் குழந்தைகளின் மேல் மாறாத அன்பும், பரிவும் கொண்ட தாய் - ஆனால் குழந்தைகளைக் கவனித்து, சீராட்டி வளர்ப்பதற்கு வேண்டிய பொருளாதாரம் இல்லாத நிலைமை. உங்கள் மொழியில் சொன்னால் தினமும் இரண்டு வேளை உணவிற்குக் கூட வழியில்லாத நிலைமையில் உள்ள தாய்!

5.   தீய கிரகம் - ஆனால் வலிமை குன்றிய நிலையில் பலன்: உங்களைக் கொல்ல விரும்பும் மனிதன். ஆனால் அவன் இருப்பதோ சிறையில் எனும் நிலைப்பாடு!

6.   தீய கிரகம் - ஜாதகத்தில் வலிமையான நிலையில் பலன்: உங்களைக் கொல்ல விரும்பும் மனிதன். ஆனால் பார்க்கும் உத்தி யோகமோ காவல்துறையில் உயர் அதிகாரி! Deputy Commissioner of Police என்று வைத்துக் கொள்ளூங்கள்! சரி, இப்போது கேள்விக்கு வருவோம். உச்சம், வர்கோத்தமம், மூலத்திரிகோணம் என்று ஒரு கிரகம் கையில் என்ன ஆயுதத்தை வைத்திருந்தாலும், மேலே குறிப்பிட்டுள்ள கட்டுப்பாட்டுக்குள் ஒடுங்கிவிடும்! அல்லது ஒதுங்கிவிடும்.

7.   உச்சத்திற்கும், மூலத்திரிகோணத்திற்கும் தனி மதிப்பு, மரியாதை உண்டு. முறையாகக் கல்லூரியில் படித்த பட்டதாரி என்று வைத்துக்கொள்ளுங்கள். வர்கோத்தமம், அவற்றிற்கு அடுத்தபடிதான். அஞ்சல் வழிக் கல்வியில் கற்ற பட்டதாரி என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படி முறையாகப் படித்த பட்டதாரிகளிலும், ஐ.ஐ.டி, களில் படித்த பட்டதாரிகளுக்கும் உப்புமா கல்லூரிகளில் படித்த பட்டதாரிகளுக்கும் வித்தியாசம் இருப்பதைப்போல, கிரகங்களுக்கும் படித்த விதத்திற்கான தனி மதிப்பு உண்டு.

8.   படிப்பை வைத்து உத்தியோகமும் சம்பளமும் கிடைப்பதைப் போல, கிரகங்கள் வாங்கிய மதிப்பெண்களை வைத்து ஜாதகனுக்குப் பலன்கள் கிடைக்கும்.பெற்ற மதிப்பெண்களையும், கிடைத்த வேலையையும் வைத்துத்தான் கிரகங்கள் ஜாதகத்தில் வேலை செய்யும்! கிரகங்களின் மதிப்பெண்கள்:

1.   உச்சம்             - 100% வலிமை

2.   மூலத்திரிகோணம் - 90% வலிமை

3.   சொந்த வீடு        - 80% வலிமை

4.   நட்பு வீடுகள்       - 60% வலிமை

5.   சம வீடுகள்        - 50% வலிமை

6.   பகை வீடுகள்            - 40% வலிமை

7.   நீச வீடுகள்        - 10% வலிமை

இந்த அளவுகள் எல்லாம் எடைபார்க்கும் இயந்திரத்தை வைத்துச் சொல்லப் பட்டதல்ல! அனுபவத்தில் பெற்ற உத்தேச அளவுகள்.