உங்கள் நட்சத்திரப்படி எந்த தொழில் உங்களுக்கு முன்னேற்றத்தை தரும்.

அசுவினி:

செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட மேஷ ராசியில் பிறந்தவர்கள் இவர்கள்.  அன்பும் நல்ல பண்புகளும் ஒருசேர அமையப் பெற்றவர்கள். தன் கொள்கைகளை எவருக்காகவும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள்.

இவர்கள் பெரும்பாலும் ராணுவம், காவல்துறை, உணவு விடுதிகள் போன்ற தொழில்களில் ஈடுபடுவது நல்லது.

=====================================

பரணி:

மிகவும் தைரியசாலிகள். நல்ல கல்வியறிவு பெற்றிருப்பார்கள். ‘பரணியில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்கள் என்று சொல்லி இருப்பதுபோல், பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் தலைமை ஸ்தானத்தை வகிப்பவர்களாக இருப்பார்கள்.

இவர்களுக்கு பொறியியல், சட்டம் சார்ந்த தொழில்கள் முன்னேற்றத்தை தரும். ஒருசிலர் விளம்பரத் துறையில் பிரகாசிப்பார்கள்.

=====================================

கார்த்திகை:

தலைமைப் பண்பு மிக்கவர். மற்றவர்களை வழிநடத்திச் செல்லும் திறமை கொண்டவர். கஷ்டப்படுபவர்களுக்கு ஆலோசனை சொல்வதில் சமர்த்தர். இவர்களில் பலரும் பிறந்த ஊரை விட்டு வெளியூரிலேயே வாழ்க்கை நடத்துகின்றனர். எப்போதுமே இவர்கள் வாக்கு தவறமாட்டார்கள். மற்றவர்களிடம் மிகுந்த அன்பு செலுத்துபவர்கள்.

அரசுப் பணிகள், இலக்கியம், சுரங்கம் தொடர்பான தொழில்கள் இவர்களுக்கு திருப்திகரமாக இருக்கும்.

=====================================

ரோகிணி:

எளிதில் உணர்ச்சிகளுக்கு ஆட்படுபவர்கள். எப்படி ரோகிணியில் பிறந்த கிருஷ்ணன் எல்லோருடைய மனதையும் கவர்ந்தானோ, அப்படி இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் மற்றவர்களை எளிதில் கவர்ந்துவிடுவார்கள். மற்றவர்களின் அறிவு, அந்தஸ்தை விடவும் அவர்களுடைய அன்புக்கே முக்கியத்துவம் தருவார்கள்.

இவர்கள் கலைத்துறை, அரசியல், இனிப்பு சார்ந்த தொழில்கள், பால் தொடர்பான தோழிகளில் ஈடுபட்டால் முன்னேற்றம் அடைவர்.

=====================================

மிருகசீரிஷம்:

தலைமை தாங்கும் பண்பு கொண்டவர்கள். இவர்களுக்கு சந்தேக புத்தி இருக்கக்கூடும். மற்றவர்களுக்காக உண்மையாகப் பாடுபடக்கூடியவர். எளிதில் நண்பர்களாலும் உறவினர்களாலும் ஏமாற்றத்துக்கு உள்ளாவார்கள்.

நிதித்துறை, கணக்கு தணிக்கை, மின்சாரம், கம்ப்யூட்டர் சார்ந்த தொழில்கள் இவர்களுக்கு வளர்ச்சி தரும். ஒரு சிலருக்கு வாழ்க்கைத் துணை வகையில் சொந்தத் தொழில் அமையவும் வாய்ப்பு ஏற்படும்.

=====================================

திருவாதிரை:

பல்துறை வித்தகர். மிகுந்த திறமைசாலி.  எதிலும் ஆழ்ந்த அறிவும் திறமையும் பெற்றிருப்பார்கள். எந்தப் பணியில் ஈடுபட்டாலும் அந்தப் பணியை முடிக்காமல் விடமாட்டார். இவருக்கு எந்த அளவுக்கு புகழ் கிடைக்கிறதோ, அதே அளவு மற்றவர்களின் விமர்சனத்துக்கும் ஆளாக நேரிடும்.

கல்வி, எழுத்து, பத்திரிகை, விளம்பரத்துறை, மருத்துவம் போன்ற துறைகளில் பிரகாசிக்கலாம்.

=====================================

புனர்பூசம்:

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ராமபிரானைப் போல் வாக்கு தவறாதவர்களாக இருப்பார்கள். தர்மத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள். சூழ்நிலையை அனுசரித்துச் செல்பவர்கள். தனக்கென்று தனித்துவமான சில பண்புகளையும் திறமைகளையும் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகம் இருக்கும்.

கல்வித் துறை, வர்த்தகம், சட்டம், தங்கம் மற்றும் வெள்ளி தொடபான தொழில்கள் இவர்களுக்கு சிறப்பை சேர்க்கும்.

=====================================

பூசம்:

தன்னுடைய லட்சியத்தை அடையும்வரை இவர் ஓயமாட்டார். எதிலும் நேர்மையாக இருப்பதையே விரும்புவார். மற்றவர்களுக்கு அடிமைப்படுவதை இவர்கள் விரும்பமாட்டார்கள். வாழ்வில் இவர்களுக்கு ஏதேனும் மனக்குறை இருந்துகொண்டே இருக்கும்.

அரசியல், பெட்ரோ கெமிக்கல், விவசாயம் சார்ந்த தொழில்களில் இவர்கள் ஈடுபட்டால் சிறப்பாக இருப்பர். ஒருசிலர் பெரிய எஸ்டேட்களை நிர்வகிக்கவும் கூடும்.

=====================================

ஆயில்யம்:

ஆதிசேஷனின் அம்சமான லட்சுமணனின் நட்சத்திரம். சுதந்திரமான மனப்பான்மை கொண்டவர். மற்றவர்களுக்கு தொண்டு புரிவதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். என்னதான் வறுமைநிலையில் பிறந்திருந்தாலும், எப்படியும் செல்வமும் செல்வாக்கும் நிறைந்த வாழ்க்கையை அடைந்துவிடுவார்.

விவசாயம் சார்ந்த தொழில்கள், நீதித்துறை, கலைத்துறை போன்றவற்றில் இவர்கள் பிரகாசிப்பார்கள்.

=====================================

மகம்:

சூழ்நிலைக்குத் தக்கபடி நடந்துகொள்வார்கள். மற்றவர்களை அனுசரித்துச் செல்வதில் சமர்த்தர்கள். தலைமைப் பதவி இவர்களைத் தேடி வரும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருமணம் தாமதமாக நடைபெறும். எவ்வளவுதான் செல்வாக்கும் வசதியும் இருந்தாலும் இவர்களின் மனதில் இனம் தெரியாத கவலை இருக்கக்கூடும். பெரும்பாலும் மண வாழ்க்கைப் பற்றிய கவலையாகத்தான் இருக்கும்.

அரசியல், தொழில், மருத்துவம் போன்ற துறைகளில் பிரகாசிப்பார்கள்.

=====================================

பூரம்:

பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களுக்கு நல்ல படிப்பு, வேலை, பண வசதி இருக்கும். இருந்தாலும் இவர்களின் மனதில் அடிக்கடி சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். பிறருக்கு வலியப்போய் உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள். தன்னைவிடவும் கீழ்மட்ட நிலையில் உள்ளவர்களையும் கைதூக்கிவிட விரும்புவார்கள்.

அரசுத்துறை, தொழிற்சாலைகள், உணவு விடுதி போன்ற தொழில்கள் இவர்களுக்கு வளர்ச்சியை தரும்.

=====================================

உத்திரம்:

வாழ்க்கையில் லட்சியத்துடன் முன்னேறத் துடிப்பவர்கள். சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். சுயகௌரவத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அடிக்கடி எண்ணங்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். என்ன நடந்தாலும் இவர்கள் அசைந்து கொடுக்கமாட்டார்கள்.

அரசுத் துறை, கடல் சார்ந்த தொழில்கள், ஷேர் மார்க்கெட் போன்ற துறைகளில் இவர்களின் பணி சிறப்பாக அமையும்.

=====================================

அஸ்தம்:

எல்லோருக்கும் நல்லது செய்ய விரும்புபவர். உண்மையாக நடந்துகொள்வதுடன், மற்றவர்களும் அப்படியே நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இவர்கள் எந்தத் துறையைச் சார்ந்திருந்தாலும், அந்தத் துறையில் இவர்கள் முதன்மையான இடத்தைப் பெற்றுவிடுவார்கள். இவர்களின் கை ராசியான கை என்று மற்றவர்கள் சொல்லும்படி, இவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.

கலைத்துறை, வியாபாரம், பதிப்புத்துறை போன்ற துறைகளில் இவர்கள் பிரகாசிப்பார்கள்.

=====================================

சித்திரை:

ஆளுமைத் திறன் மிக்கவர்கள். எல்லோரையும் தனக்குக் கீழ்ப்படியச் செய்து வேலை வாங்குவதில் சமர்த்தர்கள். ஒருவருக்கு ஓர் ஆபத்து என்றால், உடனே ஓடோடிச் சென்று உதவி செய்வார். இவர்களுக்கு அச்சம் என்றாலே என்னவென்று தெரியாது. கல்வியில் சிறப்பான தேர்ச்சி பெற்றிருப்பார்கள்.

நீதித்துறை, மருத்துவம், அறிவியல் சார்ந்த துறைகளில் இவர்களின் பணி வளர்ச்சி தரும்.

=====================================

சுவாதி:

இறை பக்தி மிகுந்தவர்கள். சுதந்திரமாக வாழ விரும்புபவர்கள். மற்றவர்களின் அன்புக்குக் கட்டுப்படுவார்களே தவிர, அதிகாரத்துக்கு அடிபணியமாட்டார்கள். பல மொழிகளைக் கற்கும் வாய்ப்பு அமையும். மற்றவர்கள் பாராட்டும்படியாக வாழ்ந்து காட்டுவார்.

அரசு நிர்வாகம், காவல் துறை போன்றவற்றில் உயர் பதவி வகிக்கும் யோகம் உண்டு. ஒருசிலர் அலங்காரப் பொருட்கள் விற்பனையிலும், உணவு விடுதி நடத்துவதிலும் ஈடுபட்டிருப்பார்கள் இதனால் இவர்கள் முன்னேற்றம் அடைவர்.

=====================================

விசாகம்:

மனதில் தைரியம் அதிகம் உள்ளவர்கள். எதைப் பற்றியும் கவலைப்படமாட்டார்கள். நிர்வாகம் செய்வதில் இவர்களுக்கு நிகர் இவர்கள்தான். எத்தனை சோதனைகள் ஏற்பட்டாலும் மீண்டு வந்துவிடுவார்கள். வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருந்தாலும் முயற்சி செய்து முன்னேறிவிடுவார்கள்.

இவர்கள் பெரும்பாலும் சொந்தமாக தொழில் செய்வதையே விரும்புவார்கள். மற்றபடி கல்வித்துறை, பதிப்பகம் போன்ற துறைகளில் இவர்கள் ஈடுபடுவது சிறந்தது.

=====================================

அனுஷம்:

மனதில் பல நல்ல பண்புகளைக் கொண்டிருப்பார்கள். மற்றவர்களிடம் அதிக அன்பு செலுத்துவார்கள். வாழ்க்கையில் எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் சமாளித்து இறுதியில் வெற்றியும் பெற்றுவிடுவார்கள். வெளிநாடு செல்லும் யோகம் உண்டு.

இவர்களும் பெரும்பாலும் சொந்தமாகத் தொழில் செய்வதையே விரும்புவார்கள். சிலர் மருத்துவம் சார்ந்த துறைகளில் ஈடுபடுவர். இவர்களில் சிலருக்கு இசைத்துறையில் புகழ் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

=====================================

கேட்டை:

இவர்கள் உண்மையாக இருப்பதுடன் மற்றவர்களும் உண்மையாக நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். நகைச்சுவையாகப் பேசுவார்கள். தெய்வபக்தி மிக்கவர்கள். சாஸ்திரங்களில் அதிக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். தர்மச் செயல்களில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

பத்திரிகைத்துறை, ராணுவம், இன்சூரன்ஸ் போன்ற துறைகளில் இவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும்.

=====================================

மூலம்:

இரக்க சிந்தனை உள்ளவர். அரசாங்கத்தால் நன்மை உண்டாகும். தலைமைப் பொறுப்பு வகிக்கும் திறமை படைத்தவர். பலரும் இவருக்குக் கட்டுப்படுவார்கள். பெண்களைப் பொறுத்தவரை இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுய ஜாதகத்தில் கிரக நிலைகள் சரியாக இருந்தால் மட்டுமே திருமண வாழ்க்கை நல்லபடியாக அமையும்.

பார்மசி, விவசாயம் சார்ந்த வியாபாரம் (காய்கறி, பழம், தானியங்கள்), கல்வித்துறை சார்ந்த பணி, ஆன்மிகம் சார்ந்த பணிகளில் இவர்கள் ஈடுபடுவது சிறந்தது.

=====================================

பூராடம்:

தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக இருப்பார்கள். மற்றவர்களிடம் அன்பு செலுத்துவார்கள். ஒருவர் கஷ்டப்படுவதாகத் தெரிந்தால், உடனே சென்று உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர். இனிமையாகப் பேசி அனைவரையும் கவர்வார்கள். தன்னுடைய சொந்த முயற்சியால் முன்னுக்கு வரத் துடிப்பவர். ஆனால், மற்றவர்கள் தன்னுடைய ஆதிக்கத்துக்குக் கீழ் கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.

இவர்களுக்கு விவசாயம், ஏற்றுமதி – இறக்குமதி, போக்குவரத்து போன்ற துறைகள் முன்னேற்றம் தரும்.

=====================================

உத்திராடம்:

இவர்கள் எந்தச் செயலையும் செய்வதற்கு முன்பு ஒருமுறைக்குப் பலமுறை யோசித்தே இறங்கவேண்டும். இல்லையென்றால் பணமும் உழைப்பும் வீணாகிவிடும். அவ்வப்போது ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். என்னதான் உடல்நலனில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும், சற்றும் பொருட்படுத்தாமல் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். 

மருத்துவம், கல்வி, வங்கி, ஆன்மிகம் சார்ந்த துறைகளில் இவர்கள் ஈடுபட்டால், வளமான வாழ்க்கை அமையும்.

=====================================

திருவோணம்:

நட்சத்திரங்களில் ‘திரு என்ற சிறப்புடன் அழைக்கப்படும் நட்சத்திரங்கள் திருவாதிரையும் திருவோணமும்தான். திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மக்களின் அன்பும் ஆதரவும் பெற்றிருப்பார்கள். கடவுள் பக்தி நிறைந்தவர்கள். மற்றவர்களிடம் அன்பும் பரிவும் காட்டுவார்கள். சாதுர்யமான அறிவைப் பெற்றிருப்பார்கள்.

சுரங்கம், பெட்ரோலியம், இயந்திரத் தொழில் போன்ற துறைகளில் இவர்கள் ஈடுபட்டால் வளர்ச்சி அடைவர்.

=====================================

அவிட்டம்:

சமயோசிதமான அறிவும், பேச்சுத் திறனும் கொண்டவர்களாக இருப்பார்கள். நீதி நேர்மையைக் கடைப்பிடிப்பவர்களாக இருப்பார்கள். தவறுகளைத் தட்டிக்கேட்க அஞ்சமாட்டார்கள். தலைமை தாங்கும் தகுதி பெற்றிருப்பார்கள். செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்திருக்கும் இவர்களுக்கு

காவல்துறை, ராணுவத்துறை, அறிவியல் தொழில்நுட்பத்துறை, இரும்புத்தொழில், பிரிண்டிங் போன்ற தொழில்கள் இவர்களுக்கு ஏற்றது.

=====================================

சதயம்:

அன்பு, இரக்கம், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் நண்பர்கள் கிடைப்பார்கள். மனதில் இனம் தெரியாத கவலையோ சஞ்சலமோ இவர்களை அவ்வப்போது வாட்டி எடுக்கும். ஆனால், இயல்பிலேயே இவர்களுக்கு இருக்கும் தெய்வ பக்தியினால் உடனே சமாளித்துக்கொள்வார்கள்.

வானியல் ஆராய்ச்சி, ஜோதிடம், பத்திரிகை போன்ற துறைகளில் இவர்கள் பிரகாசிப்பார்கள்.

=====================================

பூரட்டாதி:

அன்பு மனம் கொண்ட இவர்கள் அதிகாரத்துக்கு அடிபணியமாட்டார்கள். இரக்க சுபாவம் கொண்டவர்கள். நிர்வாகத் திறமை கொண்டவர்கள். கல்வியறிவில் சிறந்து விளங்குவார்கள். இவர்கள் அடிக்கடி எதையாவது நினைத்து கவலைப்படுவதை வாடிக்கையாகவே வைத்திருப்பார்கள். அதுபோன்ற சமயங்களில் இவர்கள் தியானத்தில் ஈடுபடுவது நல்லது.

இவர்கள் கல்வித்துறையில் ஆசிரியராகவும், வங்கி போன்ற நிதித்துறை சார்ந்த பணிகளில் ஈடுபடுவது சிறந்தது.

=====================================

உத்திரட்டாதி:

இவர்கள் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது. தானும் மகிழ்ச்சியாக இருந்துகொண்டு மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். இசை, நடனம், ஓவியம் போன்ற நுண்கலைகளில் ஆர்வமும் திறமையும் பெற்றிருப்பார்கள். இரக்கமான சுபாவம் கொண்டவர்கள்.

சுரங்கம், இயந்திரங்கள், இரும்புபொருட்கள், உணவு விடுதி போன்றவற்றால் இவர்களின் வாழ்க்கை வளம் பெறும்.

=====================================

ரேவதி:

கல்வி அறிவும், அனுபவ அறிவும் நிரம்பப் பெற்றிருப்பார்கள். எல்லோருக்கும் நன்மையை மட்டுமே நினைப்பவர்களாக இருப்பார்கள். செல்வமும் செல்வாக்கும் பெற்றிருப்பார்கள். எங்கும் எதிலும் நேர்மையைக் கடைப்பிடிப்பதுடன் மற்றவர்களும் நேர்மையாக நடக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.

நிதித்துறை, நீதித்துறை, கடல் சார்ந்த தொழில்கள், ஆன்மிகம் சார்ந்த பணிகள் இவர்களுக்கு வளர்ச்சியை தரும்.

=====================================

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.