திருமண ராசி பொருத்தம் :

திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திர பொருத்தம், ராசி, லக்ன பொருத்தம் என இருவரின் ஜாதக கட்டம் மற்றும் பாவக ஆய்வு போன்றவைகளைக் ஆய்வு செய்து திருமண பொருத்தங்கள் செய்ய வேண்டும்.

பொதுவாக பெண் ஜாதகத்தை முதன்மையாக வைத்து ஆண் ஜாதகங்களை பொருத்தி பார்க்க வேண்டும்.

நட்சத்திர பொருத்தம் அடிப்படையில் 10 பொருத்தங்கள் முக்கியமானவை அதில் ராசிப் பொருத்தம் என்றால் என்ன? அதை எப்படி பார்ப்பது? என்று இந்த பதிவில் விளக்கமாக பார்ப்போம்.

ராசி பொருத்தம் விளக்கம் :

பெண் ராசியிலிருந்து ஆண் ராசி வரை எண்ணும்பொழுது

6-க்கு மேலிருந்தால் பொருந்தும்.

8-வது ராசி ஆகாது.

7-வது ராசியானால் சுபம்.

அதிலும் கும்பம்- சிம்மம், மகரம்-கடகம் போன்றவை பொருந்தாது.

2, 6, 8, ஆம் ராசிகள் ஆகாது.

1, 3, 5, 12 வது ராசிகள் வந்தால் மத்திமம் .

7, 9, 10, 11 வது ராசியாக வந்தால் உத்தமம்.

பெண் ராசியில் இருந்து எண்ணும்பொழுது ஆண் ராசியானது 3, 11 ஆக வந்தால் மிகவும் நல்லது.

சஷ்டாஷ்டக தோஷம்

பெண் ராசிக்கு ஆண் ராசி 6, 8 ஆகவோ 8, 6 ஆகவோ வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும். சஷ்டாஷ்டகம் உள்ள ஜாதகங்களை பொருத்துவது சிறப்பை தராது.

திருமணம் பொருத்தம்

1.   தினப்பொருத்தம்

தினம் என்றால் நட்சத்திரம் எனப் பொருள். நாள் தோறும் சந்திரபகவான் தங்கும் இடம் அல்லது ஷேத்திரம். அதுவே நாள் ஷேத்திரம் இது மருவி நட்சத்திரம் என ஆகியது. எனவே இந்த தினப்பொருத்தம் முக்கியமான ஒன்று. நட்சத்திரங்கள் 27 ஆகும்.

2.   கணப்பொருத்தம்

1.   கணம் என்றால் கூட்டம் என பொருள்படும்.

2.   மூன்று வகை கணங்களாக 27 நட்சத்திரங்களும் பிரிவினை செய்யப்பட்டுள்ளன.

3.   இதன் மூலம் இருவரின் இல்லற சுகம், ஒற்றுமை இவை தீர்மானிக்கப்படும்.

4.   தேவ கணம் மனுஷ கணம் ராட்சஸ கணம் என மூன்று வகைப்படும்.

5.   தேவ கணம் அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுசம், திருஓணம், ரேவதி

6.   மனுஷ கணம் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி

7.   ராட்சஸ கணம் கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம்.

8.   தேவ கணத்தினருக்கு மனோபலம் உண்டு. ராட்சஸ கணத்தோர் உடல் பலம் மிக்கவர். மனுஷ கணம் இருபலரும் உண்டு.

9.   பெண் ஆண் நட்சத்திரங்கள் ஒரே கணமெனில் உத்தமம்.

10. இரண்டில் ஒன்று தேவகணமும் மற்றும் மனுஷ கணமெனில் உத்தமம்.

11. பெண் தேவகணம் ஆண் ராட்சஸ கணமெனில் மத்திமம்.

12. பெண் ராட்சஸ கணம் ஆண் தேவகணம் பொருத்தமில்லை.

13. பெண் ராட்ச கணம் ஆண் மனுஷ கணம் பொருத்தமில்லை.

14. மகேந்திர பொருத்தம்

புத்திம விருத்தி தரும் பொருத்தம் இரு பெண்ணின் நட்சத்திரம் தொட்டு ஆண் நட்சத்திரம் வரை எண்ணிய தொகை 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆவது எனில் மகேந்திர பொருத்தம் உண்டு எனலாம். மற்றவை பொருத்தமில்லை. இப்பொருத்தம் அவசியமே. ஆனால் முக்கியமானது அல்ல. இப்பொருத்தம் இல்லையெனில், ஜாதகங்களில் புத்திரஸ்தான பலனைக் கொண்டு ஜோதிடர் தீர்மானிப்பார்.

15. ஸ்திரி தீர்க்கம்

பெயரே சொல்கிறது. பெண்ணின் தீர்க்கம் அல்லது ஆயுள், ஆரோக்கியம் ஆணின் நட்சத்திர தொடர்பால் எவ்விதம் மாறுபாடு அடைகிறது. என்பதை சொல்லும்! பெண் நட்சத்திரம் தொட்டு ஆண் நட்சத்திரம் ஏழுக்குள் எனில் பொருத்தம் இல்லை. ஏழுக்கு மேல் பதிமூன்று வரை எனில் மத்திம பொருத்தமே. பதிமூன்றுக்கு மேல் என்றால் உத்தமம். இப்பொருத்தம் இல்லையெனிலும் பெண் ஜாதகத்தின் ஆறாம் ஸ்தானம் அல்லது எட்டாம் ஸ்தானம் அல்லது ஆண் ஜாதகத்தில் பணிரெண்டாம் ஸ்தானம் அல்லது இரண்டாம் ஸ்தான பலம் மூலம் ஜோதிடர்கள் தீர்மானிக்க இயலும்.

16. யோனிப் பொருத்தம்

இது முக்கியமான ஒன்றாகும். தாம்பத்ய உறவின் சுகம், திருப்தி நிலை இவற்றை தீர்மானிக்கும் அளவுகோள் எனலாம். ஆண், பெண் யோனி நிலையை மிருகங்களாக உருவகம் செய்து பொருத்தம் பார்க்கும் முறை இது. நட்சத்திரங்கள் 13 மிருகங்களாக ஆண் பெண் என பிரிக்கப்பட்டு உள்ளது. உத்திராடட்ம நட்சத்திரம் மட்டும் கீரி எனவும் சில சாஸ்திர நூல்கள் மலட்டு பசு எனவும் சொல்கின்றன. ஒவ்வொரு மிருகத்திற்கும் பகை மிருகம் உண்டு. ஆண் பெண் பகை மிருகமெனில் மட்டுமே பொருத்தமில்லை எனலாம். ஆணிற்கு ஆண் மிருகமும், பெண்ணிற்கு பெண் மிருகம் எனினும் உத்தமே! பெண்ணிற்கு ஆண் மிருகமும், ஆணிற்கு பெண் மிருகம்' என்றாலும் உத்தமமே. பகை மிருகம் மட்டும் சேர்க்கக்கூடாது. மற்ற பொருத்தம் எத்தனை இருந்தாலும் இது முக்கியம்.

17. ராசி பொருத்தம்

பெண் ராசி தொட்டு ஆண் ராசி 6 க்கு மேல் எனில் பொருத்தம் உண்டு என்கிறது சாஸ்திரம். ஆனால் அனுபவத்தில் ஒரே ராசியெனில் உத்தமமே! ஆனால் நட்சத்திரம் மாறுபட்டு இருக்க வேண்டும்! எனவே பெண் ராசி தொட்டு 2, 3, 4, 5 மற்றும் 6ம் ராசி எனில் பொருத்தமில்லை. அதே போல் எண் ராசி தொட்டு ஆண் ராசி எட்டு எனினும் பொருத்தம் அதிகம் இல்லை. எனவே பெண் ராசி முதல் ஆண் ராசி 1, 7, 9, 10, 11, 12 ஆகிய 6 ராசிகள் பொருந்தும் எனலாம். இதன் அட்டவணை.

18. ராசி அதிபதி பொருத்தம்

பனிரெண்டு ராசிகட்கு அதிபதி உண்டு. அந்த அதிபதி கிரகத்திற்கு நட்பு, சமம், பகை என மூன்று வகையால் மற்ற கிரகங்களுடன் உறவும் உண்டு. பெண்ணின் ராசி அதிபத, ஆணின் ராசி அதிபதிக்கு பகை என்று உறவு எனில் மட்டுமே பொருத்தமில்லை. நட்பு, சமம் எனில் பொருத்தம் உண்டு.

19. வசிய பொருத்தம்

இப்பொருத்தம் கணவன் மனைவி அன்னியோன்ய உறவை குறிகாட்டும். ஒரு ராசிக்கு ஒன்று அல்லது இரண்டு ராசிகளே வசியமாக அமையும். இது அமைந்தால் இன்னம் சிறப்பாகும். மற்றபடி இப்பொருத்தம் இல்லை .

20. ரச்சுப் பொருத்தம்

சரசோதிமலை எனும் தமிழ் ஜோதிட காவியம் இவ்வித பத்து பொருத்தங்களினால் உண்டாகும் பலன் எவை என குறிப்பிடும் சமயம் "இரச்சுமங்கலியங்" என தெளிவாக சொல்கிறது. இவ்விருவர் இணைவால் உண்டாகும் திருமண வாழ்வின் நீண்ட, மத்திம குறுகிய ஆயுளை ரச்சு பொருத்தம் தீர்மானிக்கிறது. இதை நாட்டு புற வழக்கில் சரடு பொருத்தம் என்றும் கூறுவார்கள். இந்த சாஸ்திரத்தின் படி, மிகவும் புனிதமாக ஏற்கப்பட்டுள்ள திருமாங்கல்ய கயிறு அதன் ஆயுளை தீர்மானிப்பதால் இது முக்கியமாக ஏற்கப்படுகிறது. ஏனைய பொருத்தம் அமைந்த இந்த ரச்சு எனும் மாங்கல்ய சரடு பொருத்தம் இல்லையெனில் நன்மையில்லை. ஏனைய பொருத்தம் அதிகம் இல்லாமல் ரச்சு மட்டுமே பலமாக அமைந்தால் கூட சுகவாழ்வில் சிக்கல் வந்தாலும் திருமண வாழ்வின் ஆயுள் நீண்டு அமையும். கூடி அமைந்த காதல் திருமணங்கள் தோல்வியை அடைவது ரச்சு பொருத்தம் காரணம் என்பது எமது அனுபவம் இனி இது உண்டாகும் என பார்வை செய்வோம். நட்சத்திரங்கள் ஐந்து வகை ரச்சு என பிரிக்கப்பட்டு உள்ளன. அவை பாதம், தொடை, உதரம், கண்டம் சிரசு எனப்படும். ஆண் பெண் ஒரே ரச்சுவாக இருக்கக்கூடாது.

21. வேதை பொருத்தம்

வேதை எனும் சொல்லுக்கு துன்ப நிலை என பொருள்படும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரே ஒரு நட்சத்திரம் வேதையாக அமையும். இவ்வித வேதை நட்சத்திரம் ஒரே ரச்சுவாக ரச்சு பொருத்தம் இல்லாத நட்சத்திரமாகவே அமையும். ரச்சு பொருத்தம் குறுகிய கால மணவாழ்வு கூட சந்தோஷமாக அமைந்து முடியலாம். ஆனால் வேதை நட்சத்திரம் இணைந்தால் அந்த குறுயி கால மண வாழ்வும் துன்பமாகவே அமையும்.

 

 

ஒருநாளில், இரண்டுமுறை இந்த முகூர்த்த நேரம் வரும். அது என்ன முகூர்த்தம்?  அதன் பெயர் “கோதூளி லக்னம்.”

காலையில் 24 நிமிடமும், மாலையில் 24 நிமிடமும்

இந்த முகூர்த்தம் ஒவ்வொரு நாளும் வரும்.

சூரியன் உதித்த முதல் 24 நிமிடமும், சூரியன் அஸ்தமித்த பின் உள்ள 24 நிமிடமும் கோதூளி லக்ன நேரம் எனப்படும்.

அது என்ன கோதூளி லக்னம்?

கோ என்றால் பசு; தூளி என்றால் தூசு,

பசுக்கள் காலையில் கூட்டமாக மேய்ச்சலுக்குப் போகும் போது உண்டாகும் தூசி படலம் சூரியனின் வெளிச்சத்தையே மறைத்துவிடுமாம்.

இப்படி ஏற்படும் தூசி படலத்தால், கிரகங்கள் தரும் எந்த பாதிப்பையும்(நன்மை,தீமை) இந்தப் படலம் தடுத்துவிடும் ஆற்றல் உள்ளதாக நம்பப்படுகிறது.

எனவே, இந்த நேரத்தில் செய்யப்படும் எந்த சுபகாரியங்களும் எந்தப் பழுதும் இல்லாமல் முழுமையடையும் என்பது நம்பிக்கை.

இது மாலை நேரத்திற்கும் பொருந்தும் ( மாலையில் மேய்ச்சலில் இருந்து பட்டிக்குத் திரும்பும் போதும் இது நிகழும்).

இந்த முகூர்த்தத்தை அனைத்து சுப காரியங்களுக்கும் பயன்படுத்தலாம். திருமணம், கிரஹப்பிரவேசம், ஆன்மிகப் பயணம் என சகலத்திற்கும் பயன்படுத்திக் கொண்டு, நல்ல நல்ல பலன்களைப் பெறலாம்.

மிக முக்கியமாக கல்வி பயல, மந்திரங்கள் ஜபிக்க, பூஜாபலன்கள் நம்மை முழுமையாக வந்தடைய, இறைவனைத் தரிசிக்க, நேர்த்திக்கடன் செலுத்த, பரிகாரங்கள் செய்ய, பரிகாரங்கள் தொடர, இந்த நேரத்தை பயன்படுத்துங்கள், அனைத்தும் வெற்றியாகவே நடந்தேறும்.

 “பிரம்ம முகூர்த்தம்”

பிரம்ம முகூர்த்தம் என்பதைப் பலரும் காலை 4-30 முதல் 6 மணி வரை என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அது தவறு, பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை 3 மணிமுதல் 4-30 வரையிலான நேரம் என்பதே சரி. இதுவும் பிழையில்லாத முகூர்த்தமே. இதில் அனைத்து சுப காரியங்களும் செய்யலாம், (பரிகார ஹோமங்கள் தவிர).

இந்த பிரம்ம நேரத்தில்தான் அனைவரும் தூக்கம் கலைந்து எழ வேண்டும். பிரம்ம நேரத்தில் எழுபவர்களுக்கு வாழ்நாளில் கஷ்டம் என்பது வராது. வந்தாலும் பாதிப்பைத் தராமல் எளிதாக கடந்து சென்றுவிடும்.

தடைகளே வாழ்க்கையாக உள்ளதா?

திருமணத்தடை, கல்வித்தடை, வேலையில் தடை, தொழில் நிலையில்லாமை, புத்திரபாக்கியமின்மை, வியாபாரத்தில் வளர்ச்சியின்மை, பணத்தட்டுப்பாடு, கடன் தீராமல் இருப்பது, கொடுத்த கடன் வராமல் இருப்பது... என்று வாழ்க்கை முழுவதும் தடையாகவே இருக்கிறதா?

இப்படிப் பலவித தடைகளையும் நீக்கி, வாழ்வில் சுபிட்சம் பெற நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றேஒன்றுதான்.

அதிகாலையில் “பிரம்ம முகூர்த்தத்தில்”எழுந்துவிடுங்கள். எழுந்து என்ன செய்வது?

1.   இந்த நேரத்தில் எழ ஆரம்பித்துவிட்டாலே நான் ஏதும் சொல்லாமலே உங்கள் மனமானது எண்ணங்களை ஒருமுகப்படுத்தும். அன்றைய வேலைகளைப் பற்றி மனம் தானாகத் திட்டமிடும்.

2.   அடுத்து என்ன செய்யலாம் என சிந்திக்க ஆரம்பிப்பீர்கள். இந்த சிந்தனைதான் உங்கள் வளர்ச்சி. இது யாரும் சொல்லி வரவேண்டியதில்லை, உங்களுக்குள் இருக்கும் உங்கள் சக்தியை உணரவைக்கும் நேரம் இது. அற்புதமான தருணம் இது!

(தூக்கத்தில் இருந்து) எழுந்துதான் பாருங்களேன். வாழ்க்கை முழுவதும் எழுச்சிதான். விடியல்தான். சூர்யோதயம்தான். சுபிட்சம்தான்.

உங்கள் நட்சத்திரம் என்ன? உங்கள் குணம் இதுதான்!

உண்மையில் நட்சத்திரங்கள் என்பது உங்களை யாரெனக் காட்டக்கூடியவை. உங்கள் குணாதிசியங்களை அப்படியே உள்ளது உள்ளபடி, கண்ணாடியெனக் காட்டக் கூடியவை. உங்கள் உடல் மொழியைச் சொல்லிவிடும். உங்கள் குணத்தையேக் காட்டிவிடும்.

முதலில் இந்தப் பத்துப் பொருத்தங்கள் என்ன? அது தனிமனித வாழ்வில் என்ன செய்யும் என்பதைப் பார்க்கலாம்.

தசவித பொருத்தம் என்பது பத்துப் பொருத்தம். தசம் என்றால் பத்து. உண்மையில் இது 20 ஆக இருந்தது, தற்போது இது 10 ஆக குறைந்திருக்கிறது. இன்னும் சில காலங்களில் இது 5 ஆக மாறும் ( இப்போதே நான் உட்பட சில ஜோதிடர்கள் 3 பொருத்தம் மட்டுமே பார்க்கிறோம்)

1) தினப்பொருத்தம், 2)கணப்பொருத்தம், 3) மகேந்திர பொருத்தம், 4)ஸ்தரீ தீர்க்கம், 5)ராசி பொருத்தம், 6)ராசி அதிபதி பொருத்தம், 7) யோனி பொருத்தம், 8) ரஜ்ஜு பொருத்தம், 9) வசிய பொருத்தம் 10) வேதை பொருத்தம்.

மற்றும் நாடி, மரம் என்றெல்லாம் உண்டு.

இப்போது திருமணப் பொருத்தப் பாடம் நடத்தமாட்டேன். இதில் இருக்கும் சூட்சும ரகசியங்களை பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.

கணம்:- ஒருவருடைய தாங்கும் சக்தி அல்லது ஏற்றுக்கொள்ளும் பக்குவம் (மனதளவில்) பற்றி அறிந்து கொள்வது ஆகும்.

நீங்கள் என்ன கணம் என தெரிந்து கொள்ளுங்கள்.

கணம் மூன்று வகையாக உள்ளது.

1) தேவ கணம், 2) மனுஷ கணம், 3) ராஜச கணம்.

1.   தேவ கணம் : அசுவினி,மிருகசீரிடம்,புனர்பூசம்,பூசம், அஸ்தம்,சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி

2.   மனுஷ கணம் : பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி.

3.   ராஜச கணம் : கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை,விசாகம்,கேட்டை, மூலம், அவிட்டம், சதயம்.

இப்போது நீங்கள் எந்த கணம் என்பதை தெரிந்துகொண்டிருப்பீர்கள்.

இந்த கணம் என்ன செய்யும்?

தேவகணம் : மிக மென்மையானவர். அதிர்ந்து பேசாதவர். இரக்ககுணம் உடையவர். பிரதிபலன் எதிர்பாராமல் உதவுபவர். அதிர்ச்சிகளைத் தாங்காதவர். பய உணர்வு உள்ளவர். கடின உழைப்பு செய்யாதவர். ( ஆசிரியர். வங்கி பணி, அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர், மூளை உழைப்பு) மருத்துவரிடம் ஊசி போடும்போது தன்னை அறியாமல் அலறுபவர். போதைப் பழக்கம் பழகாதவர். ஆனால் போதைப் பழக்கம் பழகினால் மீள முடியாதவர். அந்த பழக்கத்தினால் தன் ஆயுளைத் தானே குறைத்துக்கொள்பவர். மிக மென்மையான தோல் உடையவர். தலைமுடி மிக மென்மையாக இருக்கும்.

மனுச கணம் : ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெறுபவர். உதவும் மனப்பான்மை இருக்கும். இருந்தாலும் தயக்கப்படுபவர். சக மனித நட்பு உடையவர். மிதமான உழைப்பை உடையவர்.

அலைச்சல் மிகுந்த தொழில் , பயணத்தொழில், உணவகத்தொழில், தோல் சற்று கடின அமைப்பை உடையவர். எனவே ஊசி போடும் போது மெலிதாக சத்தம் போடுபவர். தலைமுடி பலமுறை வாரியபின் அடங்கும். போதை பழக்கம் “இருக்கும் ஆனால் இருக்காது “ தேவை என்றால் மட்டும் அல்லது அடுத்தவர் பணத்தில் என்றால் மட்டும் இந்தப் பழக்கம் இருக்கும். மனது வைத்தால் திருந்தலாம்.

ராஜச கணம் : ஒற்றை வரியில் சொல்வதென்றால் இவருக்கு எதுவும் பிரச்சினையில்லை, அதாவது தான் செய்வதுதான் சரி என்ற மனப்பான்மையும், பிடிவாதமும் உண்டு. கடின உழைப்பாளி. வெயில், மழை, குளிர் என எதுவும் பாதிக்காது. பாதித்தாலும் விரைவில் மீண்டுவிடுவார். கட்டிடத் தொழில், உயரமான இடங்களில் வேலை, அரசியல், காவல், ராணுவம், மன தைரியம் மிக்க வேலைகளைப் பார்ப்பவர். மருத்துவரிடம் ஊசி போட்டால் ஊசி போட்டாச்சா என கேட்பவர் ( உறைக்காது). தோல் கடினமாக இருக்கும். தலைமுடி வாரவே தேவையில்லை. கோரைப்புல் போல, கம்பி போல “ரப்” பாக இருக்கும்.

போதை பழக்க வழக்கம் இவரை பாதிக்காது (அதற்காக போதைப் பழக்கத்தை பழக வேண்டாம், இது மானுட உடல் அமைப்புக்கான உதாரணம்) போதைப் பழக்கம் பழக மீளவும் மாட்டார். அதற்கான முயற்சியும் எடுக்க மாட்டார்.

இதில் நீங்கள் யார் என அறிந்து கொண்டீர்களா?

இதை நீங்களே உங்களுடன் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.

தேவகணத்தைச் சேர்ந்தவர் மெல்லிய மனம், குணம் உடையவராகவும், பலம் குறைந்தவராகவும் இருப்பவருக்கு ராஜச கணம் உள்ளவரை இணைத்தால் என்னாகும்?

அது ஆணோ பெண்ணோ, ராஜசத்தின் பலத்தை தேவகணம் தாங்குமா? எந்த விதத்திலும் ஒன்றுக்கொன்று சேராது. சேர்ந்தாலும் மனதளவில் பாதிப்பு ஏற்படும். ( ராஜசம் முரட்டுத்தனமாக இயங்கும், தேவகணம் மெல்லியதாக இயங்கும்)

எனவே இது எதிரெதிர் துருவங்கள்.

ஆக தேவகணத்தை தேவகணத்தோடுதான் இணைக்கவேண்டும்.

மாற்று ஏற்பாடாக மனுச கணத்தை இணைக்கலாம்.

மனுச கணம் சற்று விட்டுக்கொடுத்துப் போகும். தேவகணத்தின் எண்ணத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும்.

இந்த மானுசகணம் ராஜசத்தையும் அனுசரித்துப் போகும்.

ராஜசம் = ராஜசம்+மானுசம்

தேவம் = தேவம்+ மானுசம்

மானுச கணம்= தேவம்+ ராஜசம்

இப்படி இணைந்த வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் வராது. வந்தாலும் அனுசரித்துப் போகும்.

'யோனிப்பொருத்தம்அவசியம்! ஏன்?

முதலில் யோனி என்றால் என்ன? உடற்கூறு, தாம்பத்யம் பற்றி முழுமையாக நாம் அறிந்துகொள்ளவேண்டியது மிக மிக அவசியம். புதிய தலைமுறை உருவாக இந்த யோனி மிகவும் முக்கியம்.

பெண்ணின் அந்தரங்கமே “யோனி”. இதற்கேற்ப பொருத்தம் பார்க்கப்பட வேண்டும் என்பதே ஜோதிட விதி. ஜோதிட சாஸ்திரம்.

ஏன் இதை ஆணுக்குப் பார்க்கக்கூடாது? என்ன செய்ய! ஜோதிடம் கூறும் விதிமுறை அப்படி.

பெண்ணுக்குத்தான் ஆணின் ஜாதகப் பொருத்தம் பார்க்கப்படவேண்டும்.

ஆம், பெண்ணுக்குதான் ஆணின் பொருத்தம் பார்க்கப்பட வேண்டும்.

ஆணுக்கு பெண்ணின் ஜாதகம் பார்க்கக் கூடாது.

இதுல என்னங்க இருக்கு ரெண்டும் ஒண்ணுதானே.என்பவர்களுக்கு,

பெண்ணின் நட்சத்திரத்திற்கு ஆணின் நட்சத்திரம் 2 என வைத்துக்கொள்வோம். ஆனால் ஆணின் நட்சத்திரத்திற்கு அது 27 வது நட்சத்திரமாக வரும். இப்போது வித்தியாசம் புரிகிறது அல்லவா!

சரி, இப்போது யோனி பொருத்தம் ஏன் பார்க்கப்பட வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

“பசி வர பத்தும் பறந்து போகும்” - இது பழமொழி. நாம் நினைப்பதுபோல் இது வெறும் வயிற்று பசிக்கு மட்டுமல்ல, உடற்பசிக்கும் சேர்த்துத்தான் இது சொல்லப்பட்டிருக்கிறது.

ஆமாம்.நிறையாத வயிறு, நிறைவில்லாத மனம், திரும்பக் கேட்காத கடன், இறைக்காத கிணறு, சுரக்காத மடி, களை எடுக்காத வயல், கவனிக்கப்படாத பிள்ளை இவை அனைத்தும் பாழாகும் என்பது முன்னோர் வாக்கு.

சந்ததியை உருவாக்க முடியாதவர்கள், வாழ்க்கையானது விவாகரத்தில்தான் வந்து நிற்கும்.

சரி என்னதான் தீர்வு?

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு “யோனி” உண்டு அதன் படி இருவரும் இணைந்தால், நல்ல மணவாழ்வு ஏற்படும்.

1.   அஸ்வினி : ஆண் குதிரை

2.   பரணி : ஆண் யானை

3.   கார்த்திகை : பெண் ஆடு

4.   ரோகிணி : ஆண் நாகம்

5.   மிருகசீரிடம் : பெண் சாரை

6.   திருவாதிரை : ஆண் நாய்

7.   புனர்பூசம் : பெண் பூனை

8.   பூசம் : ஆண் ஆடு

9.   ஆயில்யம் : ஆண் பூனை

10. மகம் : ஆண் எலி

11. பூரம் : பெண் எலி

12. உத்திரம் : பெண் எருது

13. அஸ்தம் : பெண் எருமை

14. சித்திரை : பெண் புலி

15. சுவாதி : ஆண் எருமை

16. விசாகம் : ஆண் புலி

17.  

18. கேட்டை : ஆண் மான்

19. மூலம் : பெண் நாய்

20. பூராடம் : ஆண் குரங்கு

21. உத்ராடம் : கீரி,மலட்டு பசு

22. திருவோணம் : பெண் குரங்கு

23. அவிட்டம் : பெண் சிங்கம்

24. சதயம் : பெண் குதிரை

25. பூரட்டாதி : ஆண் சிங்கம்

26. உத்ரட்டாதி : பெண் பசு

27. ரேவதி : பெண் யானை

இப்போது உங்கள் யோனி மிருகம் எது என அறிந்து கொண்டிருப்பீர்கள்.

இதில் எதை எதனுடன் இணைக்கலாம் என்பதை நான் கூறினால் பாடம் நடத்துவது போல ஆகிவிடும். எனவே எளிமையான வழி ஒன்றைச் சொல்லுகிறேன்.

தாவர உண்ணிகள், தாவர உண்ணிகளோடு சேர்க்கலாம்,

மாமிசபட்சினிகள், மாமிசபட்சினிகளோடு சேரலாம்.

நாய்க்கு பூனை பகை,

சிங்கம், புலிக்கு பசு, எருது, மான், ஆடு, குதிரை யானை பகை,

பாம்புக்கு எலி பகை,

எலிக்கு, கீரி பகை,

குரங்குக்கு, ஆடு பகை.

சரி இது திருமண பொருத்ததிற்கு மட்டுமா என்றால் அதற்கு மிக மிக முக்கியம். அதேசமயம் உங்கள் நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் என பலவிஷயங்களுக்கும் முக்கியம்.

இந்தப் பொருத்தம் பார்க்காமல் திருமணம் நடந்தால் என்னாகும்?

சந்ததியை உருவாக்கும் “தாம்பத்யம்” மிக முக்கியம் அல்லவா. இதில் பகை மிருக அமைப்பு, தாம்பத்யத்தில் நாட்டம் இல்லாமலும், வெறுப்பு எண்ணமும் உண்டாக்கும்.

தாம்பத்ய திருப்தி என்பது மிகவும் அவசியம். பகை மிருக அமைப்பு ஒருவருக்கு திருப்தியும், மற்றவருக்கு ஏமாற்றத்தையும் தரும்.

இன்றைய காலகட்டத்தில் மணமுறிவும், தவறான தொடர்புகளும் அதிகரிக்க இந்த பொருந்தாத இணைப்பும் ஒரு காரணம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

எனவே, திருமணப் பொருத்தத்தின்போது இந்த மிக முக்கிய பொருத்தங்களை மட்டுமாவது கவனமாகப் பாருங்கள் , அவை:- ரஜ்ஜு, யோனி, கணம், இம்மூன்றும் மிகமிக முக்கியம்.

ஆணுக்கு ஆண் யோனியும், பெண்ணுக்கு பெண் யோனியும் .மிக அற்புதம்

பெண்ணுக்கு ஆண் யோனியும், ஆணுக்கு பெண் யோனியும் மனைவிக்கு அடங்கிப்போவார்கள்.

இருவரும் ஆண் யோனி : அதீத முரட்டுத்தனம்

இருவரும் பெண் யோனி : ஏமாற்றம்

எனவே ஜாதகப் பொருத்தம் பார்க்கும் போது, இவற்றில் கவனம் செலுத்துங்கள். பொருத்தம் உடலிலும் வேண்டும்.புரிந்தவன் மணமாகவேண்டும் என்று கவியரசர் பாடியிருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம்

நம்மில் பலருக்கும் ஒரேஒரு சந்தேகம் உள்ளது. அது.“என் நட்சத்திரத்திற்கு பொருந்தும் நட்சத்திரம் எது” என்பதுதான்.

என்னிடம் திருமண சம்பந்தமாக வருபவர்களின் கேள்வியும் இதுதான், எனவே இந்தப் பதிவில் “பொருந்தும் நட்சத்திரங்கள், பொருந்தாத நட்சத்திரங்கள்” அறவே ஒதுக்க வேண்டிய நட்சத்திரம் என இப்போது பார்க்கலாம்.

செவ்வாயின் நட்சத்திரங்களான : மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம் இம்மூன்றும் ஒன்றுக்கொன்று சேரக்கூடாது. அதாவது ஆண்,பெண் இருவருக்கும் இவற்றில் ஏதாவது ஒரு நட்சத்திரமாக இருப்பின் சேர்க்கக்கூடாது.

எளிமையாக புரியும்படி:

பெண் ————————-ஆண்

மிருகசீரிடம் —— சித்திரை, அவிட்டம்

சித்திரை————— மிருகசீரிடம், அவிட்டம்

அவிட்டம்——— சித்திரை, மிருகசீரிடம்

இவை ஒன்றுக்கொன்று இணையக்கூடாது.

சூரியனின் நட்சத்திரங்களான : கார்த்திகை, உத்திரம், உத்திராடம்

குருவின் நட்சத்திரங்களான : புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

இந்த ஆறு நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று சேர்க்கக்கூடாது.

சந்திரனின் நட்சத்திரங்களான : ரோகிணி,அஸ்தம்,திருவோணம்.

ராகுவின் நட்சத்திரங்களான : திருவாதிரை, சுவாதி, சதயம்.

இந்த ஆறு நட்சத்திரங்களையும் இணைக்கக்கூடாது.

சுக்ரனின் நட்சத்திரங்களான : பரணி, பூரம், பூராடம்,

சனியின் நட்சத்திரங்களான : பூசம், அனுசம், உத்திரட்டாதி,

இந்த ஆறு நட்சத்திரங்களையும் ஒன்றுக்கொன்று சேரக்கூடாது.

புதனின் நட்சத்திரங்களான : ஆயில்யம், கேட்டை, ரேவதி.

கேதுவின் நட்சத்திரங்களான : அசுவினி, மகம்,மூலம்.

இந்த ஆறு நட்சத்திரங்களையும் ஒன்றுக்கொன்று சேர்க்கக் கூடாது.

இதுதான் “கழுத்து பொருத்தம் என்னும் ரஜ்ஜு பொருத்தம்” ஆகும்.

சரி , நாங்கள் இதையெல்லாம் பார்க்காமல் திருமணம் செய்துவிட்டோம். இதனால் ஏதாவது உயிருக்கு ஆபத்து வருமா? என்ற பயம் இயல்பானதே.

செவ்வாயின் நட்சத்திரங்களின் மணம் முடித்தவர்களுக்கும், சந்திரன் மற்றும் ராகு நட்சத்திரங்களில் மணம் முடித்தவர்கள் மட்டுமே சற்று கவனமாக இருக்க வேண்டும். அடிக்கடி விபத்து, உணவு விசம் ஆகுதல்,கீழேவிழுதல், திடீரென உண்டாகும் தலைவலி, ரத்தகொதிப்பு, மயக்கம், இன்னும் சில.. இது போன்ற பாதிப்புகளை தரும்.

செவ்வாய் - தலை ரஜ்ஜு

சந்திரன்,ராகு - கழுத்து ரஜ்ஜு

அடுத்து சூரியனின் நட்சத்திரங்கள், குருவின் நட்சத்திரங்கள் இணைய என்ன பாதிப்பு?

இது வயிறு ரஜ்ஜு— புத்திர தோஷம், புத்திரசோகம், வயிறு, இதயம் சம்பந்தமான நோய் பாதிப்பு உண்டாக்கும்.

சுக்ரனின் நட்சத்திரங்கள், சனியின் நட்சத்திரங்கள் இணைய என்ன செய்யும்?

இது தொடை ரஜ்ஜு ஆகும்.  கடலளவு சொத்துக்கள் இருந்தாலும் அவை காணாமல் போகும். அல்லது மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உங்களுக்கு உதவாமல் போகும், அல்லது வழக்குகள் உண்டாகி அனுபவிக்க இயலாமல் போகும்.

புதன் மற்றும் கேதுவின் நட்சத்திரங்களில் மணம் புரிந்தால்?

இது பாத ரஜ்ஜு ஆகும், இது என்ன செய்யும்?

ஒவ்வொரு பயணமும் ஒரு “அட்வென்சர்” தான் அதாவது எப்போது வெளியூர் பயணம் மேற்கொண்டாலும் ஒவ்வொரு பயணத்திலும் புதுப்புது அனுபவம்( பாதிப்பு) தரும், மேலும் நடந்து சென்றால் கூட எதிலாவது இடித்துக் கொள்வது, நகச்சுத்தி, நரம்பு பாதிப்பு, வெரிகோசிஸ் என்னும் பாதிப்பு உண்டாகுதல். என பாதிப்புகளை உண்டாக்கும்.

இப்போது பொருந்தும் நட்சத்திரங்கள் எவை என பார்க்கலாம்.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் பார்க்கவேண்டுமானால் இந்த ஒரு பதிவு போதாது., எனவே எளிமையாக ஒரு உபாயம்...

உங்கள் நட்சத்திரத்திலிருந்து 2,4,6,8,9,11,13,15,18,20,24 வது நட்சத்திரங்கள் பொருந்தும் நட்சத்திரங்கள்.

22 வது நட்சத்திரம் “ வைநாசிக” நட்சத்திரம் ஆகும்.இது முற்றிலும் ஒதுக்கப்படவேண்டியது அவசியம் ஆகும்.

இந்த வைநாசிக நட்சத்திரம் என்ன செய்யும்?

கணவன் மனைவி இருவரையும் பரம வைரி ஆக்கும். தினம் அடிதடி, ரத்தம், உயிர்பயம் ஏற்படும் அளவு பாதிப்பை தரும், எனவே இது விளக்கப்படவேண்டும்.

27 வது நட்சத்திரமாக வந்தால்? இருவரும் ஒரே ராசியாக இருந்தால் சேர்க்கலாம், மாறாக வேறுவேறு ராசியாக வந்தால் இணைக்கக்கூடாது.

உதாரணம் : பெண்- பரணி,ஆண் அசுவினி இந்த இரண்டும் மேஷ ராசியில் இருப்பதால் இணைக்கலாம், மாறாக பெண் அசுவினி ஆண் ரேவதி என வர அது 27 வது நட்சத்திரமாக இருந்தாலும் ராசி மேசம், மீனம் எனவருவதால் இணைக்கக்கூடாது, அதேபோல், 16, 17, வது நட்சத்திரங்களும் ( இது ஆண், பெண் இருவருக்கும் பார்க்கப்படவேண்டும்) இணைக்கக்கூடாது.

மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறேன்.வெறும் நட்சத்திரப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வதில் எந்த பயனும் இல்லை, இருவரின் ஜாதகப்பொருத்தமே மிக முக்கியம், நட்சத்திர பொருத்தம் என்பது வெறும் 10 சதவிகித மதிப்பு மட்டுமே, மீதி 90 சதவிகிதம் ஜாதக பொருத்த பார்ப்பதில்தான் உள்ளது. சரியாகப் பயன்படுத்தி வாழ்க்கையை சுகமாக்கிகொள்ளுங்கள்.

திருமண பொருத்தங்களில் ‘நாடி'ப் பொருத்தம் என்ற பொருத்தமும் பார்க்கப்படுகிறது.

அது என்ன நாடி? நாடி என்றால் சேர்க்கை என்று அர்த்தம். அதாவது இரு பொருள்கள் இணையும் போது ஒரு அதிர்வு உண்டாகும் அல்லவா! அந்த அதிர்வுதான் நாடி என்பதாகும்.

இது வாதம், பித்தம், கபம் என்னும் மூவகை நாடியும் ஜோதிடத்தில் பார்ச்சுவ நாடி, மத்ய நாடி,சமான நாடி என்ற பெயரில் உள்ளன.

இது திருமணப் பொருத்தத்தில் என்ன செய்யும்?

உங்கள் நட்சத்திரம் என்ன நாடி என்று பார்ப்போம்.

வாதம் (பார்ச்சுவநாடி) :- அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், அஸ்தம்,கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி.

பித்தம் ( மத்யநாடி) பரணி, மிருகசீரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுசம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.

கபம் (சமான நாடி) கார்த்திகை, ரோகினி, ஆயில்யம்,மகம், சுவாதி, விசாகம், உத்ராடம், திருவோணம், ரேவதி.

ஆண் பெண் இருவரின் தேகம் எந்த வகை என்பதைக் காட்டுவது நாடி.

இருவரும் பித்த நாடி ஆயின் இருவருக்கும் தேகமானது அதீத உஷ்ணமாக இருக்கும். அப்படி இருக்க ஆணின் விந்துவானது பலமிழந்து நீர்த்துப் போகும். இதனால் புத்திரபாக்யம் தாமதமாகும்.

மேலும் உடல் எரிச்சலைத் தரும். விரைவில் தாம்பத்திய நாட்டத்தைக் குறைக்கும்.

இருவரும் வாத நாடி ஆயின் ஓரளவு நன்மை உண்டாகும். இருவரும் வாயுத் தன்மை ஆதலால் பெரிய பாதிப்பு தராது. ஆனால் இருவரின் உடல்கூறும் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்காமல் தாம்பத்ய பிடிமானம் இல்லாமல் போகும்.

இருவரும் கபநாடி ஆயின் மிக நன்மை. எந்தப் பாதிப்பும் தராது, உன்னதமான தாம்பத்யம் உண்டுபண்ணும்.

ஆகவே, வாதம் ( பார்ச்சுவ) நாடிக்கு :- பித்தம்( மத்ய) கபம்(சமான) இணைக்கலாம்.

பித்தநாடிக்கு (மத்தியநாடி) வாதம் கபம் இந்த இரண்டும் இணையலாம்.

கபம் (சமான) நாடிக்கு எந்த நாடியையும் இணைக்கலாம். தடையேதும் இல்லை.

எனவே நாடியும் திருமணப் பொருத்தத்தில் ஒரு முக்கிய பங்கு என்பதை அறிந்து கொள்ளலாம்.

நட்சத்திர ஆலயம் எது :

அசுவினி : சரஸ்வதி -கூத்தனூர்

பரணி : துர்கை- பட்டீஸ்வரம்

கார்த்திகை : அக்னி - திருவண்ணாமலை

ரோகிணி : பிரம்மா- திருப்பட்டூர்

மிருகசீரிடம் : சந்திரன்- திங்களூர், திருப்பதி

திருவாதிரை : நடராஜர் - சிதம்பரம்

புனர்பூசம் : அதிதி- வாணியம்பாடி அதிதீஸ்வர்ர்

பூசம் : குரு- திருசெந்தூர் , குருவாயூர்

ஆயில்யம் : ஆதிசேஷன் ஶ்ரீரங்கம்

மகம் : பித்ருக்கள்(முன்னோர் வழிபாடு) சுக்கிரன்- கஞ்சனூர்

பூரம் : பார்வதி- சிவாலயம்- ஶ்ரீவில்லிபுத்தூர்

உத்திரம் : சூரியன்:- சூரியனார் கோவில்

அஸ்தம் : சாஸ்தா - ஐயப்பன், ஐயனார்

சித்திரை : விஸ்வகர்மா-தேவதச்சன்(படம் கிடைக்கும்)

சுவாதி : வாயு பகவான்- குருவாயூர்

விசாகம் : முருகன்

அனுசம் : ஶ்ரீலக்ஷ்மி அலமேலுமங்காபுரம்

கேட்டை : இந்திரன் - பெளர்ணமி பூஜை

மூலம் : நிருதி— குபேரன் வழிபாடு, அனுமன் வழிபாடு

பூராடம் : வருணன்

உத்திராடம் : கணபதி

திருவோணம் : திருமலை திருப்பதி

அவிட்டம் : வசுக்கள்- பைரவ வழிபாடு

சதயம் : யமன்- திருபைஞ்ஞீலி ( எமனுக்கு உயிர் மீண்ட தலம்)

பூரட்டாதி : குபேரன்( தீபாவளி இரவு பூஜை செய்ய நன்மை)

உத்திரட்டாதி : காமதேனு:- கோ பூஜை, பசு வழிபாடு

ரேவதி : சனிபகவான்

உங்கள் நட்சத்திர ஆலயங்களுக்குச் சென்று உங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் நட்சத்திர நாளில் சென்று வணங்குவது கூடுதல் சிறப்பு. விசேஷம். விசேஷ பலன்களைத் தந்தருளும்.

நாம் இப்போது சில யோகங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

ஒரு மனிதன் எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதை எளிதாகவும் அந்த துன்பத்தின் சாயலைக்கூட உணராமலும் கடந்து சென்றால் அவர் ஜாதகத்தில் “ கஜகேசரி” யோகம் இருக்கிறது என்று அர்த்தம்.

 “கஜகேசரி” யோகம்?

சந்திரனுக்கு குரு கேந்திரத்தில் இருந்தால் அது கஜகேசரி யோகம் என்று அழைக்கப்படுகிறது.

கஜம் என்றால் யானை; கேசரி என்றால் சிங்கம். மலை போன்ற யானையை சிங்கமானது தனது தைரியம் மற்றும் நம்பிக்கை இதை ஆதாரமாக வைத்து யானையை எதிர்த்து வீழ்த்துவதைப் போல், இந்த கஜகேசரி யோகமானது எந்த எதிர்ப்பையும் தாங்கும். தோல்வியின் விளிம்பிலும் மனதைத் தளரவிடாத மன தைரியத்தைத் தரும்.

இதை எப்படி உங்கள் ஜாதகத்தில் அறிவது?

மிக மிக எளிமையானதுதான். இதை நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளலாம்!

உங்கள் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தை ஒன்று என எண்ண ஆரம்பியுங்கள். அதிலிருந்து 4 ம் இடம், 7 ம் இடம், 10ம் இடம் இந்த ஏதாவதொரு இடத்தில் குரு பகவான் இருக்க அது “கஜகேசரி” யோகம் ஆகும்.

இந்த யோகம் உங்கள் ஜாதகத்தில் இருந்தால் உங்களுக்கு நீங்களே யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு பிரச்சினை வரும்போதும் நீங்கள் துவளாமல் அந்த பிரச்சினையை மிக எளிதாகக் கையாண்டிருப்பீர்கள். என்ன சரிதானே?

ஆனால் எனக்கு இப்படி இல்லையே. அப்படியானால் நான் பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தயங்குபவனா? என கேட்பவர்களுக்கு...

உங்கள் ஜாதகத்தில், சந்திரனுக்கு குரு பகவான் 5ம் இடம், 9 ம் இடம் ஆகிய இடங்களில் இருக்க அது “குரு சந்திர யோகம்” ஆகும். இதுவும் நல்ல யோகமே!

பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தயங்குகிறீர்களோ இல்லை எதிர்கொள்கிறீர்களோ அதுவல்ல விளக்கம்.

எந்த ஒன்றும், எதிர்பார்த்த எதுவும், நீங்கள் எதிர்பார்க்காமலேயே எந்த ரூபத்திலும் உங்களுக்குக் கிடைத்துவிடும்.

இது போதாதா.உங்கள் வாழ்க்கையை வளமாக்குவதற்கு!

இன்னும் ஒரு யோகத்தைப் பார்க்கலாம்!

“குரு மங்கல” யோகம்.

செவ்வாய்க்கு மங்கலகாரகன் என்ற பெயர் உண்டு.

தமிழ்நாட்டில் செவ்வாய்க்கிழமையை விலக்கி வைத்திருக்கிறோம். ஆந்திராவில் செவ்வாய்க்கிழமையில் திருமணங்கள் அதிகமாக நடக்கின்றன. காரணம் செவ்வாய் மங்கலகாரகன்.

இப்படியான செவ்வாயும் குருபகவானும் சேர்ந்திருந்தாலும், ஒருவரையொருவர் பார்த்தாலும் இந்த யோகம் ஏற்படும்.

சேரந்திருப்பதை அறிந்து கொள்ளலாம்! ஆனால் பார்ப்பதை எப்படி அறிவது? செவ்வாய் இருக்கும் இடத்தை ஒன்று என எண்ண ஆரம்பித்து 7ம் இடம் வரை எண்ணுங்கள். அங்கே குரு இருந்தால் இந்த “குருமங்கல” யோகம் உண்டு.

என்ன செய்யும் இந்த குருமங்கல யோகம்?

இயல்பாய் வீடு, மனை, வாகன யோகத்தைத் தரும்.

உங்கள் ஜாதகத்தில் இந்த யோகம் இருந்தால், உங்கள் பெற்றோரைக் கேளுங்கள்.நீங்கள் பிறந்தபின் கண்டிப்பாக உங்கள் தந்தை வீடு அல்லது நிலம் வாங்கியிருப்பார்.

அதேபோல, ஒன்றுக்கும் மேற்பட்ட வீடு, மனை அல்லது வாகன யோகம் இருக்கும்.

அதுமட்டுமல்ல.எந்தத் துறையில் நீங்கள் இருந்தாலும் யாருக்கும் அச்சப்படாமல் தைரியமாக உங்கள் முடிவுகளை தெரிவிப்பீர்கள். யாருக்கும் தலை வணங்கமாட்டீர்கள். இதுவே உங்களுக்கு “தலைக்கனம் பிடித்தவன்” என்ற பெயரையும் பெற்றுத்தந்திருக்கும்.

பரவாயில்லை, நீங்கள் நேர்மையானவர் என்பது உங்களுக்கும் உங்கள் உற்றாருக்கும் தெரியும், ஆகவே கவலை தேவையில்லை.

இந்த யோகம் உள்ளவர்கள் பொருளாதாரத்தைப் பற்றிய கவலையே படத்தேவையில்லை. கேட்டதும் கிடைக்கும், கேட்காததும் கிடைக்கும். அதாவது உலகின் நல்லன எல்லாமும் உங்களைத் தேடி வரும்!

இது ஆண் பெண் இருவருக்கும் பொதுவானதே!

ஏழாம் பொருத்தம்

ஏழாம் பொருத்தம், ஏழாம் பொருத்தம் என்று அடிக்கடி யாராவது சொல்லக் கேட்டிருப்பீர்கள்.

அதாவது, கணவன் மனைவிக்குள் அடிக்கடி ஏற்படும் சண்டை சச்சரவுகள், நண்பர்களுக்குள் ஏற்படும் வாக்குவாதங்கள் என எங்கெல்லாம் பிரச்சனைகள் உண்டாகிறதோ, அங்கெல்லாம் இந்த வார்த்தையைக் கேட்டிருக்கலாம்.

 “ஏழாம் பொருத்தம்?”

அதாவது ஒருவரின் குணத்திற்கு நேரெதிரான குணாதிசயம் உடையவர்கள் இந்த ஏழாம் பொருத்தத்திற்கு சரியான உதாரணம்.

இதில் நட்பு விஷயத்தில் சொல்வதைவிட, தம்பதிகளுக்கு பார்க்கப்படுவதே அதிகம்.

சரி, இந்த ஏழாம் பொருத்தம் யார்யாருக்கெல்லாம் இருக்கும்? அல்லது ஏற்படும்?

ஆச்சர்யமான உண்மை. நம்மில் அத்தனை பேருக்கும் இந்த பொருத்தம் உண்டு!

அதாவது, மணமானவர்கள் அனைவருமே ஏழாம் பொருத்தக்காரர்களே!

எப்படி?

ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் அல்லது மனைவி சற்று வெள்ளந்தியாக, அப்பிராணியாக இருந்தால் அவரின் கணவர் அல்லது மனைவி எச்சரிக்கை உணர்வுள்ளவராகவும் சாதுர்யமானவராகவும், புத்திசாலியாகவும் இருப்பதைப் பார்க்கலாம்.

உதாரணமாக கணவர் யாரையும் நம்பும் மனிதராக இருப்பவராக இருந்தால், அவரின் மனைவி ஒருவரைப் பார்த்தவுடன் “எடை” போட்டுவிடுவார், அவர் நல்லவரா கெட்டவரா என்று!

இதுதான் ஏழாம் பொருத்தம்!

இப்போது ஜாதக ரீதியாகப் பார்ப்போம்..!

ஜாதகத்தில் ஒவ்வொரு கட்டமும் ஒவ்வொரு குணாதிசயத்தைக் காட்டும். அதுமட்டுமல்ல.ஒவ்வொரு கட்டத்திற்கும் அதன் ஏழாமிடம் எதிர் குணாதியசத்தைக் காட்டும்.

உதாரணமாக சூரியன் மேஷ ராசியில் உச்சம். அதற்கு நேரெதிர் ஏழாமிடமான துலாராசியில் நீசம்.

உச்சம்=இருமடங்கு பலம்.

நீசம்= முற்றிலும் பலம் இழத்தல்

குரு பகவான் கடக ராசியில் உச்சம்.

அதற்கு நேரெதிர் ஏழாம்ராசியான மகரத்தில் நீசம்.

இப்படி ஒவ்வொரு ராசிக்கட்டமும் தன் வீட்டிற்கு ஏழாம் இடம் எதிர்வினை செய்யும். அதாவது எதிரெதிரான செயல்களைச் செய்யும்.

ஒரு வீடு நன்மை என்றால் ஏழாமிடம் தீமை.

ஒருவீடு மந்தபுத்தி என்றால் ஏழாமிடம் புத்திசாலி.

வீரம் என்றால் எதிர்வீடு கோழை.

இப்படிப் பலன்கள் எதிரெதிராகவே இருக்கும்.

ஆக, கணவன் மனைவி ராசி, ஏழுக்கு ஏழாக இல்லாவிட்டாலும் (உதாரணமாக பக்கத்து ராசியாக இருந்தாலும்) ஆண்பால் பெண்பால் என்னும் எதிரெதிர் பால் , எதிரெதிர் ராசி போல் கருத வேண்டும்.

ஆக இப்படி ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு குணாதிசயமாக சகோதர சகோதரிகளும் இருப்பதைப் பார்க்கலாம்.

ஆனால் இந்த ஏழாம் பொருத்தம் என்பதை, நாம் கணவன் மனைவிக்கு மட்டுமே பார்த்துப் பழகியதால் நம் குடும்பத்தில் இருப்பவர்களோடு நாம் பொருத்தி பார்க்காமலேயே இருந்து விட்டோம்.

இது நண்பர்களுக்கும் மிக முக்கியமாக “கூட்டுத்தொழில்” செய்பவர்களுக்கும் பார்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஏனென்றால் கூட்டுத்தொழிலில் ஒருவர் சற்று இரக்ககுணம் உடையவராக இருக்க மற்றொருவர் இரக்கமே இல்லாதவராக இருப்பதே கூட்டுத்தொழிலுக்கு நல்லது.

நான் கூறுவது மேலெழுந்தவாரியாக படிக்கும் போது சரியில்லாதது போல தோன்றினாலும் இதுதான் நிதர்சனமான உண்மை என்பதை நிதானமாக யோசித்தால் புரியவரும்.

ஒரு முதலாளி இரக்கமானவராகவும், மற்றவர் கடுமையான குணம் உள்ளவராகவும் இருக்கும் தொழில் நிறுவனம் என்றைக்கும் நிலைத்திருக்கும்.

இது என் அனுபவத்தில் பார்த்தது.

சரி கணவன் மனைவிக்கு வருவோம்.

இப்படி ஏழாம் பொருத்தமாக (கன கச்சிதமாக) இருக்கும் தம்பதி, நல்ல செல்வவளத்துடன், சௌகரியமான வாழ்வு, நீண்ட ஆயுளோடு இருப்பதைப் பார்க்கலாம்.

இங்கு ஒரு விஷயத்தை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

கணவன் மனைவி இருவரும் திருமணம் செய்த ஓரிரு மாதங்களிலேயே ஒருவரின் பலம் பலவீனம் அறிந்து கொண்டால் இருவருக்குமான வாழ்க்கைத் தராசு, தானாகவே சமனாகிவிடும்.

இந்த இடத்தில்தான் முக்கியமான விஷயம் உள்ளது. ஒருவரின் பலவீனத்தை அறிந்ததும்(கணவன் அல்லது மனைவியின்) அந்த பலவீனத்தையே பகடையாக பயன்படுத்தும் போது தான் ஈகோ வெளிப்பட ஆரம்பிக்கிறது.

இதை முழுநேரமும் ஆதிக்கமாக செயல்படுத்தும் போதுதான் பிரிவினை ஆரம்பிக்கிறது, அது முடிவில் நீதிமன்றத்தை நோக்கிப் போகிறது. அப்படியானால் என்ன செய்ய வேண்டும்?

ஒருசில வீடுகளில் பார்த்திருப்பீர்கள். மனைவியானவர் ஏதாவதொரு முக்கியமான விஷயத்தில் கணவர் ஈடுபாட்டோடு இருக்கும்போது “இந்தா பாருங்க உங்களுக்கு ஒன்னும் தெரியாது. நான் சொல்றத செய்யுங்கள்” என்பார்,

அவர் கூறும் முடிவும் சுபமாகவே இருக்கும். மிகச்சரியாகவே இருக்கும். இதை அந்தக் கணவரும் எந்தக் கேள்வியும் கேட்காமல் செய்வார். அந்தக் குடும்பம் எந்த விதத்திலும் தோற்றுப்போகாது.

இதுதான் ஏழாம் பொருத்தம்.இது நன்மை தரக்கூடியதே. நல்லவிதமாக பயன்படுத்தினால். எல்லாம் நன்மையே!

அப்படியானால் சண்டை சச்சரவு?

அது வெளித் தோற்றத்திற்கு அப்படித் தெரியும். உண்மையில் இது இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் உள்ள நல்ல “அண்டர்ஸ்டாண்டிங்” என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

சரி ஒரு ரகசியம் சொல்கிறேன் பெண்களுக்கு!

தலையணை மந்திரம் என்கிறார்களே... அதை எப்படி செயல்படுத்துவது? அது உண்மையா?

உண்மைதான்! உங்கள் கணவரின் இடது காதில் சொல்லப்படும் எதுவும் மந்திரமாக மாறி நிறைவேறும். வலது காதில் சொல்லப்படும் எதுவும் நிராகரிக்கப்படும். செயல்படுத்திப் பாருங்கள்..

குரு மந்திரம் வலது காதில் வழங்கப்படவேண்டும்.

அது நிலைத்து பலன் வழங்கும் என்பதை அறிவீர்கள்தானே.

பிரம்மஹத்தி தோஷம், மாந்தி தோஷம்!

நன்மை தரும் யோகங்களும் உண்டு, பாதிப்புகளைத் தரும் யோகம்களும் உண்டு. நாம் இப்போது பாதிப்புகளை உண்டுபண்ணும் சில யோகங்களைப் பார்ப்போம்.

பிரம்மஹத்தி தோஷம்:-

உங்களின் முன் ஜென்மத்திலோ, அல்லது உங்கள் முன்னோர்களோ அடுத்தவர் உயிர் பறித்த பாவம் பிரம்மஹத்தி தோஷமாக மாறி, நிம்மதி இல்லாத வாழ்வைத் தரும். எந்தச் செயலும் தடையாகவே இருக்கும். தாமதமாகவே நடக்கும்.

எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத மாதிரியான மனநிலை ஏற்படும். குடும்பத்தில் எந்த ஒருவருக்கும் நிம்மதி அற்ற சூழ்நிலையே காணப்படும். மகன் அல்லது மகள் வாழ்க்கையில் ஏதாவதொரு பிரச்சனை தொடர்ந்து இம்சை பண்ணிக்கொண்டே இருக்கும்.

புத்திரபாக்கியத்தில் தாமதம் அல்லது குறையுடைய குழந்தை பிறந்து ஒட்டுமொத்த வீட்டின் மனநிம்மதியையே குலைக்கும். இவையெல்லாம் பிரம்மஹத்தி தோஷத்தின் பாதிப்புகள்.

’அய்யோடா... கடவுளே... இதற்கு என்ன தீர்வு?’

“திருவிடைமருதூர்” செல்லுங்கள். உங்கள் வாழ்வில் ஏற்படும் அசாதரணமான சூழ்நிலை தெரியாமலும் புரியாமலும் கலங்கித் தவிப்பவர்கள், “திருவிடைமருதூர்” சென்று வாருங்கள். உங்கள் முன் “ஜென்ம வினை”, உங்கள் முன்னோர்களால் உண்டான “வினை” அனைத்தும் தீரும், உங்கள். வாழ்வும் சுபிட்சமாகும். கும்பகோணம் அருகில் உள்ளது திருவிடைமருதூர். இங்கே இறைவனின் திருநாமம் ஸ்ரீமகாலிங்க சுவாமி.

=====================================

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.