ஆகுபெயர், இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர்
1.
ஆகுபெயர்
தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு.
இத்தொடரில் வெள்ளை என்னும் சொல் வெண்மை என்னும் நிறப் பொருளைத் தருகிறது
வீட்டுக்கு வெள்ளை அடித்தான்.
இத்தொடரில் வெள்ளை என்பது வெண்மை நிறத்தைக் குறிக்காமல் வெண்மை நிறமுடைய சுண்ணாம்பைக் குறிக்கிறது.
இவ்வாறு ஒன்றன் பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது ஆகுபெயர்.
2.
பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் ஆகிய ஆறு வகையான பெயர்ச்சொற்களிலும் ஆகுபெயர்கள் உண்டு.
1.
பொருளாகுபெயர்
மல்லிகை சூடினாள்.
மல்லிகை என்னும் ஒரு முழுப்பொருளின் பெயர் அதன் ஓர் உறுப்பாகிய மலரைக் குறிக்கிறது. பொருளின் பெயர் அதன் சினையாகிய உறுப்புக்கு ஆகிவருவது பொருளாகுபெயர் .இதனை முதலாகு பெயர் எனவும் கூறுவர்.
2.
இடவாகு பெயர்
சடுகுடு போட்டியில் தமிழ்நாடு வெற்றி பெற்றது.
தமிழ்நாடு என்னும் பெயர் அவ்விடத்தைச் சேர்ந்த விளையாட்டு அணியைக் குறிப்பதால் இஃது இடவாகு பெயர் ஆகும்.
3.
காலவாகு பெயர்
திசம்பர் சூடினாள்.
இத்தொடரில் திசம்பர் என்னும் காலப்பெயர் அக்காலத்தில் மலரும் பூவைக் குறிப்பதால் இது காலவாகு பெயர் ஆயிற்று.
4.
சினையாகு பெயர்
தலைக்கு ஒரு பழம் கொடு
இத்தொடருக்கு ஆளுக்கு ஒரு பழம் கொடு என்பது பொருளாகும். இவ்வாறு சினையின் (உறுப்பின்) பெயர் முதலாகிய பொருளுக்கு ஆகிவருவது சினையாகு பெயர் எனப்படும்.
5.
பண்பாகுபெயர்
இனிப்பு தின்றான்.
இத்தொடரில் இனிப்பு என்னும் பண்புப் பெயர் தின்பண்டத்தைக் குறிப்பதால் இது பண்பாகுபெயர் ஆயிற்று.
6.
தொழிலாகு பெயர்
பொங்கல் உண்டான்.
இத்தொடரில் பொங்கல் (பொங்குதல்) என்னும் தொழிற்பெயர் அத்தொழிலால் உருவான உணவினைக் குறிப்பதால் இது தொழிலாகு பெயர் ஆகும்.
7.
இரட்டைக்கிளவி
தங்கை விறுவிறுவென நடந்து சென்று தோட்டத்தில் மலர்ந்த மலர்களைக் கலகலவெனச் சிரித்தபடியே மளமளவெனக் கொய்யத் தொடங்கினாள்.
இத்தொடரிலுள்ள விறுவிறு, கலகல, மளமள ஆகிய சொற்களைக் கவனியுங்கள். இவை ஒவ்வொன்றிலும் அசைச்சொற்கள் இரண்டிரண்டாக இணைந்து வந்துள்ளன. அவற்றைப் பிரித்துப் பார்த்தால் பொருள் தரவில்லை. இவ்வாறு இரட்டையாக இணைந்து வந்து, பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்களை இரட்டைக்கிளவி.
8.
அடுக்குத்தொடர்
சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அமுதன் திடீரென, பாம்பு பாம்பு பாம்பு என்று கத்தினான். எங்கே எங்கே? என்று கேட்டபடியே மற்ற சிறுவர்கள் அவனருகே ஓடிவந்தனர். "இல்லை இல்லை. சும்மாதான் சொன்னேன்" என்று சொல்லிச் சிரித்தபடியே ஓடினான் அமுதன். "அவனைப் பிடி பிடி பிடி பிடி" என்று கத்திக்கொண்டே மற்றவர்கள் துரத்தினார்கள்.
இப்பகுதியில் சில சொற்கள் இரண்டு, மூன்று, நான்கு முறை இடம்பெற்றுள்ளன. இவ்வாறு அச்சம், விரைவு, சினம் போன்ற காரணங்களால் ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொடர்ந்து வருவதை அடுக்குத்தொடர் என்பர். அடுக்குத் தொடரில் பலமுறை இடம்பெறும் ஒவ்வொரு சொல்லும் பொருளுடையது.
9.
அடுக்குத்தொடர் இரட்டைக்கிளவி – ஒப்பீடு
அடுக்குத்தொடர் |
இரட்டைக்கிளவி |
அடுக்குத்தொடரில் உள்ள சொற்களைத் தனித்தனியே பிரித்துப் பார்த்தாலும் அவற்றுக்குப் பொருள் உண்டு. |
இரட்டைக் கிளவியைப் பிரித்தால் அது பொருள் தருவதில்லை . |
அடுக்குத் தொடரில் ஒரே சொல் இரண்டு முதல் நான்கு முறை வரை வரும் |
இரட்டைக்கிளவியில் ஒரு சொல் இரண்டு முறை மட்டுமே வரும். |
அடுக்குத் தொடரில் சொற்கள் தனித்தனியே நிற்கும். |
இரட்டைக் கிளவியின் சொற்கள் இணைந்தே நிற்கும். |
அடுக்குத் தொடர் விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம் ஆகிய பொருள்கள் காரணமாக வரும். |
இரட்டைக்கிளவி வினைக்கு அடைமொழியாகக் குறிப்புப் பொருளில் வரும். |
0 Comments
THANK FOR VISIT