உங்கள் லக்னம் என்ன ?உங்கள் வாழ்க்கைத் துணை இப்படித்தான்!

ஒருவருக்கு அமையக்கூடிய வாழ்க்கைத் துணை பற்றி ஜோதிட சாஸ்திரம் என்ன கூறுகிறது என்பதைப் பார்க்கலாம். எந்த ஒரு மனிதருக்கும் அவரின் கர்மவினை பயன்களுக்கு ஏற்ப ஜாதக அமைப்பானது அமைகிறது. அதே கர்மவினைதான் அவர்களுடைய வாழ்வில் திருமண பந்தத்தையும் தீர்மானிக்கிறது.

ஒவ்வொரு லக்னகாரர்களுக்கு எந்தெந்த மாதிரியான இல்வாழ்க்கை அமையும் என்பதைப் பார்ப்போம்.

ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் லக்னத்திலிருந்து ஏழாவது வீடு அந்த ஜாதகரின் வாழ்க்கைத் துணையைப் பற்றி கூறும் வீடாக அமைகிறது. பெண்ணின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் ஏழாவதாக இருக்கும் வீடு வாழ்க்கைத் துணையைப் பற்றி கூறுவதோடு மட்டுமல்லாமல் - எட்டாமிடம் மாங்கல்ய ஸ்தானமாக அமைகிறது. ஆண் பெண் இருவருக்குமே லக்னத்திலிருந்து இருக்கக்கூடிய இரண்டாவது வீடு குடும்ப ஸ்தானமாக அமைகிறது.

மேஷம் லக்னம்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை அவர் பிறந்த இடத்தில் இருந்து தெற்கு அல்லது மேற்கு திசையிலிருந்து வருவார். திருமணத்திற்கு பிறகு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் - நல்ல குழந்தை பாக்கியம் - நல்ல வேலைவாய்ப்பு என்பது அமையும். வரக்கூடிய வாழ்க்கைத்துணை பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு உறுதுணையாக இருப்பார். பொதுவாக மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் திருமணத் தடை நீங்க மகாலட்சுமி வழிபாடு செய்து வருவது நன்மையைக் கொடுக்கும்.

ரிஷபம் லக்னம்

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத் துணை, மேற்கு அல்லது வடக்கு திசையிலிருந்து வருவார். வரக்கூடிய வாழ்க்கை துணை சிறிது பிடிவாத குணமும் எடுத்த கொள்கையில் மாறாதவர்களாகவும் இருப்பார்கள். சிறிது புத்திக்கூர்மையுடன் திகழ்வார்கள். இவர்களுக்கு திருமணத்திற்குப் பிறகுதான் சொந்த வீடு - மனை - வாகன வசதி - பூமி லாபம் என்பது ஏற்படும். திருமணத்திற்கு பிறகு பொருளாதாரத்தில் சிறிது முன்னேற்றம் காணப்படும். இவர்களுடைய திருமணம் தடை பட்டால் இவர்கள் முருகனை வழிபடுவதன் மூலம் திருமணத் தடைகள் நீங்கும்.

மிதுனம் லக்னம்

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாகவும் - பழைமையான விஷயங்களின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். வடக்கு மற்றும் கிழக்கு திசையிலிருந்து இவர்களுக்கு வாழ்க்கை துணை வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதிக சிக்கனம் கொண்ட இந்த லக்னகாரர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை - வாழ்க்கை முழுவதுமே மிகுந்த ஒத்துழைப்பை கொடுப்பார். இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குழந்தைகள் பிறந்த பிறகு தான் பொருளாதாரத்தில் நல்ல சிறப்பான முன்னேற்றம் என்பது ஏற்படும். இவர்கள் சிவபெருமான் மற்றும் அம்மனை வணங்கி வருவதன் மூலம் திருமணத்தடைகள் நீங்கும்.

கடகம் லக்னம்

கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத்துணை கிழக்கு மற்றும் தெற்கு திசையில் இருந்து வருவார். வழக்காடுவதில் வல்லவர்களாக வாழ்க்கைத் துணை அமைவார்கள். கொண்ட கொள்கையில் மாறாதவர்களாகவும் இருப்பார்கள். இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திருமணத்திற்குப் பிறகுதான் தொழில் மிக மிகச் சிறப்பாக அமையும். திருமணம் தடைபட்டால் இவர்கள் விநாயகர் வழிபாடு செய்து வருவது மிகுந்த நன்மையைக் கொடுக்கும்.

சிம்மம் லக்னம்

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை தெற்கு மற்றும் மேற்கு திசையிலிருந்து வருவார்கள். கடும் உழைப்பாளிகள் வாழ்க்கைத் துணையாக வருவார்கள். எந்த ஒரு கடினமான வேலைகளையும் புன்சிரிப்போடு செய்யக்கூடியவர்களாக இவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை திகழ்வார். இவர்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகள் அதிக ஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களது திருமணம் தடைபட்டால் குலதெய்வத்தையும் காவல் தெய்வத்தையும் வணங்கி வருவது நன்மையைக் கொடுக்கும்.

கன்னி லக்னம்

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை மிகுந்த தியாக மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார். எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு உதவி செய்யக் கூடியவராக இருப்பார். பொருளாதாரம் சம்பந்தமான விஷயத்தில் இவர்களுக்கு திருமணத்திற்குப் பிறகுதான் மிகுந்த யோகம் என்பது வந்து சேரும். மேற்கு மற்றும் வடக்கு திசையிலிருந்து இவர்களுக்கு வாழ்க்கை துணை அமையும். திருமணம் தடைபட்டால் இவர்கள் முருகனை வழிபாடு செய்து வருவது நன்மையை கொடுக்கும்.

துலாம் லக்னம்

துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத் துணை கிழக்கு மற்றும் வடக்கு திசையிலிருந்து வருவார். மிகுந்த தைரியசாலியாகவும் - மனதில் பட்டதை உடனடியாக வெளியில் சொல்லக் கூடியவர்களாகவும் - தீர்க்கமான கொள்கை கொண்டவர்களாகவும் - எந்த ஒரு விஷயத்திலும் தீர ஆலோசித்து முடிவு எடுப்பவராகவும் வாழ்க்கைத்துணை இருப்பார். வரக்கூடிய வாழ்க்கைத் துணை குடும்பம் சம்பந்தமான விஷயங்களில் எந்த ஒரு முடிவிலும் இவர்கள் வாழ்க்கை துணையிடம் அடங்கிப் போவது சிறந்தது. பூமி லாபம் - வாகனம் ஆகியவை திருமணத்திற்குப் பிறகு ஏற்படும். இவர்கள் திருமணம் தடைபட்டால் சிவபெருமான் வழிபாடும் முருகன் வழிபாடும் செய்வது மிகுந்த நன்மையை கொடுக்கும்.

விருச்சிகம் லக்னம்

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத்துணை கிழக்கு மற்றும் தெற்கு திசையில் இருந்து வருவார். பெரியவர்கள் சொல்படி கேட்டு நடக்கக்கூடிய வாழ்க்கைத் துணை இவர்களுக்கு அமையும். எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் பெரியவர்களிடமும் - நண்பர்களிடமும் - உறவினர்களிடமும் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கக் கூடிய திறன் படைத்தவர்களாக இருப்பார்கள். முடிந்தவரை விட்டுக் கொடுத்து செல்லக்கூடிய வாழ்க்கைத் துணை அமையும். பொருளாதாரத்தில் மிகப்பெரிய நல்ல லாபம் என்பது திருமணத்திற்குப் பிறகு ஏற்படும். திருமணம் தடைபட்டால் சிவபெருமானையும் பெருமாளையும் வணங்குங்கள். நன்மை வந்து சேரும்.

தனுசு லக்னம்

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை மிகுந்த புத்திக் கூர்மை கொண்டவர்களாகவும் - சாமர்த்தியம் உடையவர்களாகவும் இருப்பார்கள். தெற்கு மற்றும் மேற்கில் இருந்து வரக்கூடிய வாழ்க்கைத் துணை இவர்களுக்கு அமையும். இவர்களுக்கு வாழ்க்கைத் துணை மூலமாக மிகப் பெரிய நன்மைகள் வந்து சேரும். வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்கள் என்பது நிச்சயமான முறையில் ஏற்படும். இவர்கள் திருமணம் தடைபட்டால் இவர்கள் சித்தர்களையும் பெருமாளையும் வணங்கி வருவது மிகப் பெரிய நன்மையை கொடுக்கும்.

மகரம் லக்னம்

மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை மிகவும் அழகாக இருப்பார். வாழ்க்கைத் துணையின் முகம் வட்டமாக இருக்கும். வடக்கு மற்றும் மேற்கு திசையிலிருந்து வாழ்க்கைத் துணை அமையும். இவர்களுடைய வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் என்பது திருமணத்திற்குப் பிறகு அதிசயமான முறையில் வந்து சேரும். எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் வாழ்க்கைத்துணையுடன் கலந்து ஆலோசித்து அதன் பிறகு முடிவெடுப்பது நன்மையைக் கொடுக்கும். இவர்களுடைய திருமணம் தடைபட்டால் அம்மனை வழிபாடு செய்து வருவது நன்மையை கொடுக்கும்.

கும்பம் லக்னம்

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத்துணை கிழக்கு மற்றும் வடக்கு திசையிலிருந்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவர்களுடைய வாழ்க்கைத் துணை சற்று உயரமாகவும் - எடுத்த முடிவுகளில் மாறாதவராகவும் - தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அடுத்தவர்களுக்கு புத்திமதி சொல்லக்கூடிய அளவிற்கு தங்களை உணர்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய திருமணம் தடைப்பட்டால், சிவபெருமானையும் முருகனையும் வணங்கி வருவது நன்மையைக் கொடுக்கும்.

மீனம் லக்னம்

மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை கிழக்கு மற்றும் தெற்கிலிருந்து வருவார். தியாக மனப்பான்மை கொண்ட மீன லக்னக்காரர்களுக்கு வாழ்க்கைத்துணை வந்த பிறகுதான் வாழ்வில் வசந்தம் என்பது ஏற்படும். இவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை நுண்ணறிவு உடையவர்களாகவும் - சிக்கனம் அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார். இந்த லக்கினகாரர்களுக்கு திருமணம் தடைப்பட்டால் குல தெய்வத்தையும் திருச்செந்தூர் முருகனையும் வணங்கி வருவது மிகுந்த நன்மையைக் கொடுக்கும்.