தொகைநிலைத் தொடர்கள் , தொகாநிலைத் தொடர்கள்
1.
சொற்கள் தொடராகும்போது, இரு சொற்களுக்கிடையே உருபுகள் மறைந்து வரும் தொடர்கள் - தொகைநிலைத் தொடர்கள்.
கயல், விழி
இவ்விரு சொற்களுக்கு இடையே போன்ற( 'கயல் போன்ற விழி') என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது.
2.
தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைபடும்- 6.
1. வேற்றுமைத்தொகை
2. வினைத்தொகை
3. பண்புத்தொகை
4. உவமைத்தொகை
5. உம்மைத்தொகை
6. அன்மொழித்தொகை
3.
ஒரு தொடரில் இருசொற்கள் அமைந்து, இரண்டிற்கும் இடையில் சொல்லோ உருபோ மறையாது பொருளை உணர்த்துவது - தொகாநிலைத் தொடர் .
·
காற்று வீசியது
·
குயில் கூவியது
4.
தொகாநிலைத் தொடர்கள் எத்தனை வகைபடும்- 9.
1. எழுவாய்த்தொடர்
2. விளித்தொடர்
3. வினைமுற்றுத்தொடர்
4. பெயரெச்சத்தொடர்
5. வினையெச்சத்தொடர்
6. வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
7. இடைச்சொற்றொடர்
8. உரிச்சொற்றொடர்
9. அடுக்குத்தொடர்
தொகாநிலைத் தொடரின் ஒன்பது வகைகள்
1. எழுவாய்த்தொடர்
எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த்தொடர் ஆகும்.
இனியன் கவிஞர் - பெயர்
காவிரி பாய்ந்தது - வினை
பேருந்து வருமா? - வினா
மேற்கண்ட மூன்று தொடர்களிலும் பெயர், வினை, வினா ஆகியவற்றுக்கான பயனிலைகள் வந்து எழுவாய்த் தொடர்கள் அமைந்துள்ளன.
2. விளித்தொடர்
விளி யுடன் வினை தொடர்வது விளித்தொடர் ஆகும்.
நண்பா எழுது! - "நண்பா" என்னும் விளிப்பெயர் "எழுது" என்னும் பயனிலையைக்கொண்டு முடிந்துள்ளது.
3. வினைமுற்றுத்தொடர்
வினை முற்றுடன் ஒரு பெயர் தொடர்வது வினைமுற்றுத்தொடர் ஆகும்.
பாடினாள் கண்ணகி
"பாடினாள்" என்னும் வினைமுற்று முதலில் நின்று ஒரு பெயரைக்கொண்டு முடிந்துள்ளது.
4. பெயரெச்சத்தொடர்
முற்றுப் பெறாத வினை, பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது பெயரெச்சத்தொடர் எனப்படும்.
கேட்ட பாடல் - "கேட்ட" என்னும் எச்சவினை "பாடல்" என்னும் பெயரைக்கொண்டு முடிந்துள்ளது.
5. வினையெச்சத்தொடர்
முற்றுப் பெறாத வினை, வினைச்சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சத்தொடர் ஆகும்.
பாடி மகிழ்ந்தனர் - "பாடி" என்னும் எச்சவினை "மகிழ்ந்தனர்" என்னும் வினையைக் கொண்டு முடிந்துள்ளது.
6. வேற்றுமைத்தொடர்
வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்கள் ஆகும்.
கட்டுரையைப் படித்தாள்.
இத்தொடரில் ஐ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகிறது.
அன்பால் கட்டினார் - (ஆல்) மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
அறிஞருக்குப் பொன்னாடை - (கு) நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
7. இடைச்சொல் தொடர்
இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்.
மற்றொன்று - மற்று + ஒன்று. "மற்று" என்னும் இடைச்சொல்லை அடுத்து "ஒன்று" என்னும் சொல் நின்று பொருள் தருகிறது.
8. உரிச்சொல் தொடர்
உரிச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்.
சாலச் சிறந்தது - "சால" என்பது உரிச்சொல். அதனைத்தொடர்ந்து "சிறந்தது" என்ற சொல் நின்று மிகச் சிறந்தது என்ற பொருளைத் தருகிறது.
9. அடுக்குத் தொடர்
ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது அடுக்குத் தொடர் ஆகும்.
வருக! வருக! வருக! - ஒரே சொல் உவகையின் காரணமாக மீண்டும் மீண்டும் அடுக்கி வந்துள்ளது.
0 Comments
THANK FOR VISIT