ஒருவருக்கு அமையும் மனைவி எவ்வாறு இருப்பார்?

1.       ஒருவரின் கர்ம வினைக்கு ஏற்ப அவரவர்களுக்கு மனைவி, குழந்தைகளாக அமைவார்கள். இதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். ஆனால், அதனை முன்னரே அறிந்து கொள்ளச் செய்வதுதான், ஜோதிடம் எனும் அறிவியல் கணிதம். 

2.       ஒருவருக்கு வரும் மனைவியால் அல்லது கணவனால் தனக்கு பெருத்த நன்மை உண்டாகும் என்று நினைப்பதும், பிறக்கப் போகும் குழந்தையால் பெருத்த நன்மை உண்டாகும் என்று நினைப்பதும், மிக மிக தவறாகும். நமது ஜாதகத்தின் பலனை தவிர மற்றவர்களால், தனது வாழ்க்கை முறை மாறிவிடும் என நினைப்பது சரியல்ல.

ஒவ்வொரு லக்கின காரர்களுக்கும் எப்படிப்பட்ட மனைவி அமைவாள்

இது ஒரு பொதுவான கருத்து எனினும், அதில் சிலவாவது நிச்சயம் ஒத்துப்போகும்.

1.       ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் லக்கினத்திற்கு 7 ஆம் இடத்தில்  உள்ள கிரகங்கள் மற்றும் மற்ற கிரகங்களின் தொடர்புகள் (பார்வை, சேர்க்கை, தன்மை போன்றவை ) தான் இதனை தீர்மானிக்கிறது. இதன் மூலம் மிகத் தெளிவாக பலனை அறிய முடியும்.  அனைத்து லக்கின காரர்களுக்கு மட்டும் இங்கு கூற இயலாது.

2.       எப்படி பலன் காணப்படுகிறது என்பதற்கு ஒரு உதாரணத்திற்கு, மேஷ லக்கனத்திற்கு மட்டும் விரிவான பலனையும், மற்றவற்றிற்கு பொது பலனையும் காணலாம். அந்த விரிவான பலனும்,  முழுமை பெற்றதாக இருக்காது. காரணம் ஒருவரின் ஜாதகத்தை ஆய்வு செய்தால் மட்டுமே சரியாகக் கூற இயலும். இதனை ஒரு குறிப்பாக எடுத்துக்கொள்ளவும்.

மேஷம் லக்னம்

 1. மேஷ லக்கின ஜாதகருக்கு அமையும் மனைவி :

1.       இந்த லக்கினத்திற்கு, பாதகாதிபதி, சனி ஆவார்.

2.       மனைவி  மிகவும் அழகாக இருப்பார். வீட்டை சுத்தமாக வைத்திருக்க விரும்புவாள். நல்ல ஆடை, நகைகள் வாங்க பிரியப்படுவார்.

3.       தன்னிடம் தனது கணவர், உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என நினைப்பாள். அப்படி அவன் தவறும் பட்சத்தில் அவள்  பொறுத்துக் கொள்ளமாட்டார்.

மேஷ லக்கனத்திற்கு, 7 ஆம் இடமான துலாத்தில், சூரியன் இருந்தால்.

இங்கு சூரியன் நீச்சம் பெறுகிறார், நீண்ட நாள் கழித்து திருமணம் அதிலும் தன்  தகுதிக்கு ஒவ்வாத இடத்திலிருந்து திருமணம் செய்தல், பெண்களால் அவமானப்பட நேருதல், மனைவி நோயாளி ஆக இருக்கும் அபாயம், அதனால் மனைவியிடம் சுகம் உண்டாகாது. ரகசியமாக அந்நிய பெண்களிடம் தொடர்பு கொள்வதால், கெட்ட நடத்தை போன்றவை ஏற்பட வாய்ப்பு. விசாகம் -1 ஆம் பாதத்தில் சூரியன் நிற்கப்பெற்றவர்கள் ஓரளவு நன்மை பெறலாம். சித்திரை 3-ல் வர்கோத்தமம், சித்திரை 4, சுவாதி 1, 4 ல் நட்பு நவாம்சத்தால், அதிகமான கெடுதல் ஏற்படாது.

மேஷ லக்கனத்திற்கு, 7 ஆம் இடமான துலாத்தில், சந்திரன் இருந்தால்.

நல்ல மனைவி அமைவாள். ஆனால் ஜாதகருக்கு அதிகமான காதல், வேட்கை உடையவராகவும், அதனால், அன்னியப் பெண்களுடன் தொடர்பு ஏற்பட வாய்ப்பு, பெண்கள் வலிய வந்து சேருவார்கள்,

சந்திரன் , சித்திரை - 4 ல் நிற்கப் பெற்றவர்களுக்கு, சந்திரன் நீச்ச நவாம்சம் பெறுவதால், மோசமான பலன்களே நடைபெறும்.

மேஷ லக்கனத்திற்கு, 7 ஆம் இடமான துலாத்தில், செவ்வாய்  இருந்தால். சகோதரியின் பெண்ணை மணக்க வாய்ப்பு உண்டாகும். அல்லது இவரின் மகளுக்கு மணம் செய்து வைத்து மருமகனை அடைவார். எப்பொழுதும் மனைவியுடன் இருப்பார். பொதுவாக இது செவ்வாய் தோஷ ஜாதகம். (விதி விலக்குகளை பார்க்க ) அதனால், இரண்டு தாரம் ஏற்பட வாய்ப்பு.

மேஷ லக்கணத்திற்கு, 7 ஆம் இடமான துலாத்தில், புதன் இருந்தால்.

நல்ல மனைவி அமைந்த போதிலும், அவளிடம் முழு நம்பிக்கை வைக்க மாட்டார். தாய்க்கு பிடித்தவராக இருப்பார். சுவாதி -4 ல் நீச்ச நவாம்சம் அமைவதால், மனைவியால் கஷ்டம், தொல்லைகள் போன்ற பலன்கள் ஏற்படும்.

மேஷ லக்கணத்திற்கு, 7 ஆம் இடமான துலாத்தில், குரு  இருந்தால்.

ஜாதகருக்கு, இளைமையிலேய திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். நல்ல குணமும், அழகும் உடைய மனைவியை அடைவார். சுவாதி -2 ல் நீச்ச நவாம்சம் பெறுவதால், அற்ப பலன்களே ஏற்படும்.

மேஷ லக்கணத்திற்கு, 7 ஆம் இடமான துலாத்தில், சுக்கிரன்  இருந்தால்.

நல்ல மனைவியே அமைவாள், ஆனால், சிறிது காலம் தள்ளியே விவாகம் நடைபெறும். சிலருக்கு 2, 3 விவாகங்கள் ஏற்பட வாய்ப்பு. மற்ற கிரகங்கள் பலமாக இல்லாவிட்டால், மனைவிக்கு அடங்கியவராக இருப்பார். தவறான நடத்தைகளில் ஈடுபட வாய்ப்பு. தாம்பத்திய வாழ்க்கை நீடிக்காமல் போகலாம். ஜாதகத்தில் லக்கினாதிபரை விட சுக்கிரன் அதிக பலம் பெற்றிருந்தால், மனைவியின் வீட்டோடு வசிப்பார்... (லக்கினத்தில் செவ்வாய் இருப்பின், இவர்களின் வாழ்க்கை விட்ட குறை தொட்ட குறை என்பதாக அமையும், அதாவது போன பிறவியில் ஜாதகருக்கு இவரின் மனைவியாகவோ அல்லது கணவராகவோ இருந்து இந்த பிறவியில் மனைவியாக வர வாய்ப்பு. இது எவ்வளவு காலம் என்பது ஜாதகத்தை ஆய்வு செய்து தான் பார்க்க வேண்டும்

மேஷ லக்கணத்திற்கு, 7 ஆம் இடமான துலாத்தில், சனி  இருந்தால்.

மனைவிக்கு அடங்கிய குணம் கொண்டவராக இருப்பார்.  விசாகம் -1 ல் சனி நிற்பாராயின் நீச்ச நவாம்சம் பெறுவதால், சிரமம் தான்.

மேஷ லக்கனத்திற்கு, 7 ஆம் இடமான துலாத்தில், ராகு   இருந்தால்.

பெரும் தீனி தின்பவராக இருப்பார். நிச்சயம் நீரிழிவு நோய் தாக்குதல் இருக்கும்.

மேஷ லக்கணத்திற்கு, 7 ஆம் இடமான துலாத்தில், கேது இருந்தால்.

மனைவி நோயாளி ஆவாள், கெட்ட பெண்களுடன் தொடர்புள்ளவர். மீறிய காமத்தால், கெட்ட சகவாசம் உண்டாகும். இவருக்கு மனைவி மருந்து வைப்பாள் அல்லது விஷம் கொடுப்பாள். அந்நியர் வைக்கும் மருந்து மாயம் மந்திரங்களாலும் கெடுதல் உண்டாகும்.

2. ரிஷப லக்கின ஜாதகருக்கு அமையும் மனைவி :

1.       ரிஷப லக்கினத்திற்கு, பாதகாதிபதி, சனி ஆவார். ஆனால் இவர் யோகாதிபதியும் ஆவார்.

2.       ஜாதகருக்கு வாய்க்கும் மனைவி, ஜாதகருக்கு ஈடாக படித்திருக்க மாட்டாள்.

3.       சிக்கன பேர்வழி.  வாயாடியாக இருப்பாள். எந்த விதமான பிரச்சினைகளையும் சமாளிக்கும் திறமை இருக்கும்.

3. மிதுன லக்கின ஜாதகருக்கு அமையும் மனைவி:

1.       மிதுன லக்கினத்திற்கு, பாதகாதிபதி குரு ஆவார். ஆனால் இவர் பாக்கியாதிபதியும் ஆவார்.

2.       ஜாதகருக்கு வாய்க்கும் மனைவி, வறட்டு ஜம்பம் உள்ளவள். கடுமையான வார்த்தைகளை உபயோகிப்பார். வீட்டை அழகாக வைத்துக்கொள்ள பிரியப்படுவாள்.

4. கடக லக்கின ஜாதகருக்கு அமையும் மனைவி :

1.       கடக லக்கினத்திற்கு, பாதகாதிபதி, சுக்கிரன் ஆவார்.

2.       ஜாதகருக்கு வாய்க்கும் மனைவி, ஆடை, நகைகள் வாங்க பிரியப்படுவாள். மிகுந்த கோபக்காரியாகவும், சண்டைக்காரியாகவும் இருப்பாள். பணக்காரியாக பிரியப்படுவாள்.

5. சிம்ம லக்கின ஜாதகருக்கு அமையும் மனைவி:

1.       சிம்ம லக்கினத்திற்கு, பாதகாதிபதி, செவ்வாய் ஆவார். ஆனால் இவர் பாக்கியாதிபதியும் ஆவார்.

2.       ஜாதகருக்கு வாய்க்கும் மனைவி, அழகாக குண்டாக இருப்பாள். எல்லாவித இன்னல்களையும் சமாளிக்கும் திறமை இருக்கும்.

6. கன்னி லக்கின ஜாதகருக்கு அமையும் மனைவி:

1.       கன்னி லக்கினத்திற்கு, பாதகாதிபதி, குரு ஆவார்.

2.       ஜாதகருக்கு வாய்க்கும் மனைவி, கடவுள் பக்தி நிறைய உடையவளாக இருப்பாள். கணவரின் அரட்டைக்கு ஈடு கொடுக்க முடியாமல் முழிப்பாள்.

7. துலாம் லக்கின ஜாதகருக்கு அமையும் மனைவி :

1.       துலாம் லக்கினத்திற்கு, பாதகாதிபதி, சூரியன் ஆவார்.

2.       ஜாதகருக்கு வாய்க்கும் மனைவி, எல்லோரும் தனக்கு அடங்கிப்போகவேண்டும் என விரும்புவாள் . முன் கோபம் உள்ளவள். காசு சேர்ப்பதற்கு பிரியப்படுவாள்.

8. விருச்சிக லக்கின ஜாதகருக்கு அமையும் மனைவி :

1.       விருச்சிக லக்கினத்திற்கு, பாதகாதிபதி, சந்திரன் ஆவார். ஆனால் இவர் பாக்கியாதிபதியும் ஆவார்.

2.       ஜாதகருக்கு வாய்க்கும் மனைவி, அழகாக இருப்பாள். ஆடைகள், நகைகள் வாங்க பிரியப்படுவாள். வீட்டை கலை அம்சத்துடன் வைத்து இருக்க பிரியப்படுவாள்.

9. தனுசு லக்கின ஜாதகருக்கு அமையும் மனைவி :

1.       தனுசு லக்கினத் திற்கு , பாதகாதிபதி, புதன் ஆவார்.

2.       ஜாதகருக்கு வாய்க்கும் மனைவி, பேசிக்கொண்டே இருப்பாள். அழகாக இருப்பாள். ஆடைகள் நகைகள் வாங்க பிரியப்படுவாள். கணவரின் கடுமையான வார்த்தைகளை சமாளிக்கும் துணிச்சல் மிக்கவள்.

10. மகர லக்கின ஜாதகருக்கு அமையும் மனைவி :

1.       மகர லக்கினத்திற்கு, பாதகாதிபதி, செவ்வாய் ஆவார்.

2.       ஜாதகருக்கு வாய்க்கும் மனைவி, மிகவும் அழகாக, எவ்வளவு வயதானாலும் இளமையாக இருப்பாள். வீட்டை சுத்தமாக வைத்திருக்க விரும்புவாள். நல்ல ஆடைகள் உடுத்தி உலா வர பிரியப்படுவாள்.

3.       கணவரின் கடுமையான வார்த்தைகளால், அடிக்கடி சோர்ந்து போனாலும், நிமிர்ந்து விடுவாள்.

11. கும்ப லக்கின ஜாதகருக்கு அமையும் மனைவி :

1.       கும்ப லக்கினத்திற்கு, பாதகாதிபதி, சுக்கிரன் ஆவார். ஆனால் இவர் பாக்கியாதிபதியும் ஆவார்.

2.       ஜாதகருக்கு வாய்க்கும் மனைவி, தன்மானம் கொண்டவளாக இருப்பாள். வீட்டை ஆடம்பரமாகவும், எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க விரும்புவாள். நிறைய நகைகள் வாங்கிப்போட்டுக்கொண்டு, விருந்துகள், கேளிக்கைகள் போக பிரியப்படுவாள்.

12. மீன லக்கின ஜாதகருக்கு அமையும் மனைவி :

1.       மீன லக்கினத்திற்கு , பாதகாதிபதி, புதன் ஆவார்.

2.       ஜாதகருக்கு வாய்க்கும் மனைவி, அழகாக நிறைய பேசுவாள். கணவருக்கு எதிரிடை குணங்கள் கொண்டவளாக இருப்பாள். தைரியசாலியாகவும், போராடும் எண்ணம் கொண்டவளாகவும் இருப்பாள்.

மேலே கூறப்பட்ட பலன்கள் ஏறத்தாழ 80 முதல் 90 சதவீதம் சரியாக இருக்க வாய்ப்பு இருப்பினும்,  இதன் மாற்றம் ஒவ்வொரு ஜாதகரின் ஜனன கால ஜாதகத்தில் அந்த கிரகங்கள் அமையப்பெறும் தன்மைகளான அஸ்தங்கம், வக்கிரம், யோகி, அவயோகி மற்றும் பாதகாதிபதி, அஷ்டமாதிபதியின் சாரம் கொண்டு இருப்பின் பலன்களில், சிறிது மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எது எப்படியாகிலும், அவரவர் ஜாதகப்படி வாங்கி வந்த வரம் தான் அமையும், இதில் எந்தவித மாற்றமும் இல்லை எனலாம். அதனை அமைதியாக எதிர்கொண்டு மற்றவர் மனம் கோணாமல் எடுத்து செல்லும் போது வாழ்க்கை இனிமையாக அமையும்.

இது அனைவருக்கும் வயோதிகத்தில் தான் தெரியவரும். அதற்குள் காலம் கடந்து விடுவதால், இதனை உணராதவர்கள், கஷ்டப்பட்டு, அனுபவப்பட்டு பின் திருந்தி வாழ்கிறார்கள்.

எது எப்படி ஆயினும், ஜோதிடம் ஒரு எச்சரிக்கை தகவல் தானே தவிர இதுவே முடிவு அல்ல என்பதனை அனைவரும் உணரவேண்டும்.