காதல் திருமணம்

எந்த எந்த கிரகங்கள் சேர்ந்தால் காதலை தருகிறது?

பொதுவாக மூன்றாம் வீடு தைரியம் மூன்றாம் இடத்துக்கு மூன்றாம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மூன்றாமிடம் சப்தம ஸ்தானம் இந்த மூன்று வீட்டு கிரகங்கள் ஒன்று சேரும் போதோ அல்லது ஒருவருக்கு ஒருவர் இசைவான நிலையில் அமரும் பொழுது தைரியமாக காதலை தந்து விடுவதை நடைமுறையில் பார்க்க முடிகிறது.

பொதுவாக ஐந்தாம் வீடு காதல் விவகாரத்திற்கு வித்திடுகிறது. ஏழாம் வீட்டு அதிபதியுடன் ஐந்தாம் வீட்டு அதிபதி ஒருவருக்கொருவர் சம்பந்தம் ஏற்படும் பட்சத்தில் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சகஜமாக பழகும் வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது. நட்பாக மாறிய பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் அன்புடன் நேசித்து உள்ள கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு காதல் வயப்படுகிறார்கள்.

ஏழாம் இடத்தில் செவ்வாயும், ராகுவும் இருந்து ஏழாம் இடத்துக்குரிய கிரகத்தால் பார்வை கிடைக்கும் பட்சத்தில் இவர்கள் காதலை அரங்கேற்றி விடுகிறது.

எந்த பாவமாக இருப்பினும் 7க்கு அதிபதி செவ்வாய், ராகு, சுக்கிரன் சேர்ந்து நின்றாலோ அல்லது சுக்கிரன் பார்த்தாலோ கலப்புத் திருமணத்திற்கு வழி வகுத்து விடுகிறது.

லக்னம், சந்திரன், சூரியன், சுக்கிரன் ஆகிய இடத்துக்கு 7ல் சனி, ராகு, செவ்வாய் சேர்க்கைப் பெற்று இருப்பின் காதல் திருமணம் ஏற்பட்டு அதுவும் கலப்பு திருமணம் நடைபெற்று சில பல அவலங்கள் ஏற்பட்டு முடிவதை நடைமுறையில் காணமுடிகிறது.

ஐந்தாம் வீடு, ஐந்தாம் வீட்டுக்கு ஐந்தாம் இடமான ஒன்பதாம் வீடு ஆகியவை இரு மதம் சம்மந்தப்பட்ட வீடுகள். இந்த வீடுகளில் புத்திர காரகனான குரு மற்றும் களத்திர காரகனான சுக்கிரன் இணைந்து இருந்தாலோ ஜாதி மத இன வேறுபாடு களை மீறி கலப்பு திருமணம் நடந்துவிடுகிறது.

ஐந்தாம் வீட்டு அதிபதியை ஏழாம் வீட்டு அதிபதியும், சுக்கிரனும் அல்லது பாவ கிரகங்கள் பார்க்காமல் இருந்தால் காதல் திருமணம் நடந்துவிடுகிறது.

லக்னாதிபதி ஏழாம் இடத்து அதிபதி இருவருக்கும் சுபக் கிரகங்களின் பார்வை இருக்குமானால் காதல் திருமணம் இனிமையாக நடந்து முடிவதை நடைமுறையில் பார்க்க முடிகிறது.

சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை அல்லது பார்வை ஏற்படின் இவர்களுக்கு திரிகோணத்தில் லக்னாதிபதியும் ஏழுக்குடையவன் அமர்ந்து இருக்கும் பட்சத்தில் உடல் கவர்ச்சி ஏற்பட்டு காதல் வயப்பட்டு விவாகரத்தில் முடிகிறது.

7, 8 க்கு உரிய அதிபதிகள் பரிவர்த்தனை ஆனாலும் இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் சுபகிரக பார்வை ஏற்பட்டால் காதலர்களாக கலந்து திருமணம் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

லக்கினாதிபதி ஏழாம் வீட்டு அதிபதி 11 ம் வீட்டு அதிபதி மூவரும் கூடியதொரு ஓரிடத்தில் பத்தாம் இடத்து அதிபதி இருப்பின் பெண் வீட்டார் சம்மதத்துடன் ஆண் வீட்டார் அனுமதி இன்றி விவாகம் நடந்து விடுகிறது.

இலக்கினாதிபதி ஏழாம் வீட்டு அதிபதி 11 ம் வீட்டு அதிபதி மூவரும் கூடி சுபக்கிரகங்களின் பார்வை ஏற்படின் காதல் திருமணம் தங்கு தடையின்றி நடந்து முடிகிறது.

லக்னாதிபதி ஏழாம் வீட்டு அதிபதி 11 ம் வீட்டு அதிபதி உடன் கூடி நான்காம் வீட்டு அதிபதி சேர்ந்து இருப்பின் பெண் வீட்டிற்கு தெரியாமல் மணமகள் காதல் திருமணம் செய்ய நேரிடுகிறது.

ஏழில் சனி ராகு இருந்தால் ஏற்கனவே மணம் செய்துகொண்ட வரை அல்லது விதவையை மணக்க நேரிடும்.

லக்கினத்திற்கு ஏழாம் இடத்தில் குரு சுக்கிரன் இருப்பின் உயர் குலத்தில் பிறந்த பெண்ணை காதலித்து மணம் செய்வார் .

அல்லது ஏழாவது இடத்தில் செவ்வாய் ராகு பெண் ஜாதகத்தில் இருப்பின் வயதுக்கு வந்தபின் காம கவர்ச்சியில் உந்தப்பட்டு காதல் திருமணம் நடக்கும்.

7ல் சனி செவ்வாய் இருந்தால் அவர்களுடைய தசா புத்தி வரும் காலத்தில் கண்டிப்பாக இருதார யோகத்துக்கு வழி வகுத்து விடுகிறது.

ஏழாம் இடத்தில் குரு தனித்து நின்று இவர்களுக்கு திரிகோணத்தில் சுக்கிரன் செவ்வாய் ராகு அமையும் அமைப்போடு ஒரு ஜாதகம் இருக்கும் பட்சத்தில் இளம் வயதிலேயே திருமணம் ஏற்பட்டு விடுகிறது.

எந்த லக்னமாக இருந்தாலும் ஏழாம் இடத்தில் புதன் சுக்கிரன் இருந்து அவருடைய தசா புத்தி வரும் காலங்களில் பலருடன் காதல் களியாட்டத்தில் தெளித்து பின்னர் காதல் திருமணம் ஏற்பட்டு அலங்கோல வாழ்க்கையை சந்தித்து விடுகிறது.

லக்னத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று அத்துடன் கேது இணைந்து இருப்பின் ஜாதகி அல்லது ஜாதகர் காம இச்சையின் தூண்டுதலை அதிகரிக்க வைக்கிறது.

5,7 மற்றும் 9 க்கு உடையவர்கள் ஒருவருக்கொருவர் நட்பு கிரகமாக அமைந்து இந்த மூன்று ஸ்தான அதிபதி களுக்கும் லக்னாதிபதி நின்ற வீட்டுக்கு கேந்திர / கோண நிலையில் அமையும் பட்சத்தில் காதல் திருமணம் நடந்து வாழ்க்கை அருமையாக செல்வதை நடைமுறையில் காணமுடிகிறது.

சந்திரன் சுக்கிரன் சனி ஒருவருக்கு ஒருவர் தொடர்பு உடையவராக இருந்தால் காதல் திருமணத்தை நிச்சயம் ஏற்படுத்திவிடுகிறது.

புதன் நீச்சமாக இருந்தால் வேறு மதம் அல்லது வேறு மொழிசார்ந்த நபர் வாழ்க்கை துணையாக அமைந்து விடுகிறார்.

ஏழாம் அதிபதியும் லக்னாதிபதியும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டால் விரும்பிய பெண்ணையே மணப்பார்.

நவாம்சத்தில் சனி சுக்கிரனால் பார்க்க பெற்றால் வீட்டை விட்டு ஓடி திருமணம் புரிந்து பின்னர் குடும்பத்தோடு ஒன்று சேருவர்.

ஏழாமிடத்தில் ராகு அல்லது கேது சம்பந்தம் பெற்று இருப்பின் தன்னைவிட அதிக வயதுடைய பெண்ணை காதலித்து அல்லது தன்னை விட மிகச் சிறிய வயது உள்ள நபரை காதலித்து திருமணம் முடிக்கிறார்கள் என்பதை நடைமுறையில் காணமுடிகிறது.

லக்னத்துக்கு/ ராசிக்கு எட்டில் ராகு கேது அல்லது சனி செவ்வாய் இணைந்து சுக்கிரனால் பார்க்கப்பட்டால் சந்தர்ப்ப சூழ்நிலையில் விவாகம் நடைபெறும்.

லக்கினத்திற்கு ஒன்பதாம் இட அதிபதி ஒன்பதாம் பாவம் குரு மூவரும் பலமாக அமையும் பட்சத்தில் சுக்கிரன் வலுவுடன் இருப்பின் கலப்புத்திருமணம் ஏற்படும்.

லக்கினத்திற்கு இரண்டு 12-க்கு உடையவர்கள் மூன்றிலிருந்து குரு பார்த்தாலும் ஒன்பதாம் அதிபதி நோக்கினாலும் ஒன்றுக்கு மேற்பட்ட உறவுகளோடு காதலில் இருந்து திருமணம் செய்து கொள்ள வாய்ப்புகள் அமையும்.

மேற்கூறிய ஜாதக அமைப்பு அனைத்தும் உங்கள் திருமண வாழ்கை அனுபவத்தில் இருந்தோ அல்லது உங்கள் ஜாதக அமைப்புடன் ஒத்துப் போகிறதா என்று பாருங்கள்.