எட்டாம் பாவம்

எட்டாம் இடம் ஆயுள், துயரம், மரணம் முதலியவற்றைக் குறிப்பது என அறிவோம்.

1.   மேஷம் எட்டாம் இடமானால் நிறைய செல்வம் உடையவனாக இருப்பினும், மிகுதியான துன்பத்தை வாழ்க்கை முழுவதும் சந்திக்க நேரிடுகின்றது. வேறு தேசத்திலேயே இவனுக்கு மரணம் ஏற்படுகிறது.

2.   ரிஷபம் எட்டாம் இடமானால் தரையில் ஊர்கின்ற அல்லது படுகின்ற ஜந்துக்கள், நாற்கால் பிராணிகள், துஷ்ட ஜனங்கள் மூலம் பெரும்பாலும் இரவு நேரத்தில் மரணம் எய்துகின்றான்.

3.   மிதுனம் எட்டாம் இடமானால் தனக்கு இளையவனாலோ, மூலம் முதலிய ரோகத்தாலோ, கவனக் குறைவாலோ மரணம் எய்துகின்றான்.

4.   கடகம் எட்டாம் இடமானால் புழுவினாலோ, பயங்கரமான விஷ ஜந்துக்கலாலோ, பகைவர்களினாலோ, நீர் நிலைகளில் இறங்கும் போதோ மரணம் ஏற்ப்படுகின்றது. இந்த மரணம் பெரும்பாலும் வேறு தேசத்திலேயே அமைகின்றது.

5.   சிம்மம் எட்டாம் இடமானால் பெரும்பாலும் வனத்தில் சாவை சந்திக்கின்றான். அது திருடரின் மூலமாகவோ நாற்கால் பிராணிகளின் மூலமாகவோ, பாம்பினாலோ ஏற்படக் கூடும். குழந்டையினால் கூட இவனுக்கு சாவு நேரிடலாம்.

6.   கன்னி எட்டாம் இடமானால் விளையாட்டினாலும், பித்த சம்பந்த மான நோய்களினாலும் மரணம் அடையலாம். தனது சொந்த குடும்பத்து பெண்ணாலேயே கூடக் கொல்லப்படலாம்.

7.   துலாம் எட்டாம் இடமானால் மருந்தின் மூலம் அல்லது நாற்கால் பிராணிகளின் மூலம், பெரும்பாலும் இரவு நேரத்தில் மரணம் அடைகின்றான். உபவாசம் அல்லது உண்ணாவிரதம் இருப்பதினால் கூட உயர் பிரியக் கூடும். பிறரது வஞ்சனையினாலும் இந்த ஜாதகருக்கு சாவு நேரிடலாம்.

 

8.   விருசிகம் எட்டாம் இடமானால் முகத்தில் உண்டான ரோகதினாலோ, புழுக்களால் உண்டான ரோகதினாலோ, தனது குலத்தில் உதித்ததனாலோ மரணம் உண்டாகின்றது.

9.   தனுசு எட்டாம் இடமானால் தன்னுடைய இருப்பிடத்தில் தன்னுடன் இருப்பவனால் மரணம் அடையலாம். புளுக்களாலும், நாற்கால் உயிரினங்களாலும் மரணம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

10. மகரம் எட்டாம் இடமானால் நல்ல கல்விமான். மானம் மிக்கவன். வீரன். எல்லாக் கலைகளிலும் வல்லவன். ஆனாலும் பெண் பித்தன். ஆதலால் எதனாலும் இவனுக்கு சாவு வரக்கூடும் என்பதை இயல்பாகவே ஊகித்துக் கொள்ளலாம்.

11. கும்பம் எட்டாம் இடமானால் நெருப்பினாலோ, தீய பெண்களின் சேர்க்கையினாலோ, பகைவனாலோ புண்பட்டு சாக நேரிடலாம்.

12. மீனம் எட்டாம் இடமானால் பித்த ஜுரத்தினாலோ, வாயு ஜுரத்தினாலோ அல்லது ஆயுதத்தாலோ சாக நேரிடலாம்.

எட்டுக்குடையவன் லக்கினம் முதலிய பன்னிரண்டு ராசிகளில் இருப்பதன் மூலம் ஏற்படும் பலன்கள்.

எட்டுக்குடையவன் லக்னத்தில் இருந்தால் துஷ்டர்களுடன் நட்புக் கொண்டு அதனால் துன்பத்தை ஏற்படுத்திக் கொள்பவன். நிரந்தர நோயாளி ஆனாலும் அரசிடமிருந்து வருமானத்தை அடையக் கூடியவன்.

எட்டுக்குடையவன் இரண்டிலிருந்தால் இவனது ஜீவனம் அதாவது தொழில் நிலை அடிக்கடி மாறிக் கொண்டே போகும். சாஸ்திரங்கள் பல கற்றவராயினும் திருட்டுத்தனம் இவனை விட்டுப் போவதில்லை. பாபக்கிரகங்களுடன்  கூடினால் சுபமற்றவனாகவும், வியாதி உள்ளவனாகவும் நாளைக் கழிக்க வேண்டி உள்ளது. ராஜ தண்டனையும் இவன் அடையக் கூடும்.

எட்டுக்குடையவன் மூன்றாம் இடத்தில் இருந்தால் கூடப் பிறந்தவனுடன் ஒத்துப் போகாது. நண்பர்களே நாளடைவில் விரோதிகளாக மாறுவர். இவனுடைய சபல புத்தியும் கடுமையான வார்த்தை பேசும் தன்மையும் துஷ்டத்தனமும், பந்து ஜனங்களிலிருந்து இவனை வெகு தூரம் விலக்கி விடுகிறது.

எட்டுக்குடையவன்  நான்காம் இடத்தில் இருந்தால் தன் தந்தை திரட்டி வைத்த பொருள் அனைத்தையும் நாசம் செய்கின்றான். தனது புத்திரனளிடத்திலும் பகையை தேடிக் கொள்கிறான். வியாதி உள்ளவன்.

எட்டுக்குடையவன் ஐந்தாம் இடத்தில் இடத்தில் இருந்தால் குழந்தைகள் பிறந்து பிறந்து இறந்து போகலாம். தீயவர்களுக்கு தலைவனாகவும்.இருப்பான்.பாபக் கிரகங்கள் சேர்க்கையினாலோ பார்வையினாலோதான் இப்பலன் அமைகின்றது.

எட்டுக்குடையவன் ஆறாம் இடத்தில் இருந்து, சூரியன் செவ்வாய் சேர்க்கையும் அமைந்தால் வீண் சண்டைக்குச் செல்பவன். புதன், சந்திரனுடன் கூடி ஆறிலிருந்தாலும் தானாக விரோதத்தை தேடிக் கொள்வான். சந்திரன், சனி இவர்களோடு கூடியிருந்தால் தீராத நோயாளியாக வாழ்க்கை அமைகின்றது.

எட்டுக்குடையவன் ஏழாம் இடத்தில் இருந்தால் மறைவிடங்களில் ரோகம் உள்ளவன். கஞ்சன், துஷ்டன், கெட்ட நடத்தை உள்ளவன். பாபக் கிரகங்கள் கூடினால் பெண்களுடன் வெகுவாகச் சண்டை போடுவான். செவ்வாயுடன் கூடினால் இந்நிலை மாறி சாந்தமுள்ளவனாகின்றான்.

எட்டுக்குடையவன் எட்டாம் இடத்திலேயே இருந்தால் பயிர் தொழில் செய்யக் கூடியவனாக இருப்பான். நோயாளி. பிறரை வஞ்சித்து கொடுமை செய்வான்.

எட்டுக்குடையவன் ஒன்பதாம் இடத்தில் இருந்தால் பிறரை இம்சிப்பவன், இவனுக்கு நண்பர்களே அமைய மாட்டார்கள். காலப்போக்கில் எல்லோராலும் விலகப் பட்டவனாகின்றான்.

எட்டுக்குடையவன் பத்தாம் இடத்தில் இருந்தால் அரசாங்கத்தில் வேலை பார்க்கக் கூடும். சோர்வும் துக்கமும் இவனை விட்டு நீங்காது.

எட்டுக்குடையவன் பதினொன்றாம் இடத்தில் இருந்தால் உடல் மெலிந்தவன். பிறரால் தான் சுகமடைவதற்கு வழிகள் தேடிக் கொள்வான்.

எட்டுக்குடையவன் பன்னிரெண்டில் இருந்தால் கொடூரமான வாக்கு உள்ளவன். திருட்டு தொழிலை செய்பவன். வஞ்சகன்.எந்த வேலையையும் முழுமையாகச் செய்ய மாட்டான். மாமிசம் உண்பதில் மிகுந்த பிரியம் உள்ளவன்.ஆதலால் அதன் மூலமே இவனுக்கு மரணம் சம்பவிக்கும்.

=====================================

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.