திருமண வாழ்க்கை தரும் சுக்கிரன்பலன்கள்:

சுக்கிரன் களத்திரகாரகன். அதாவது, வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். இவருடைய தசா காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும். வெள்ளிக்கிழமையான இன்று சுக்கிரன் பற்றி அறிந்து கொள்வோம்.

சுக்ரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். இன்பம் என்கிற ஆனந்தத்தை அடைவதற்குரிய மனநிலையை உருவாக்குகிறவர்

சுக்ரன் இல்லற வாழ்வுக்குறியவர், சுக்ரன் மனைவி யோகம் தருபவர் ஆணுக்கு மனைவியைப்பற்றியும், பெண்ணுக்கு மண வாழ்க்கையைப் பற்றியும் சொல்லுகின்றவர்.

சுக்கிரன் சிற்றின்பம், திருமணம் முதலான சுகத்தை ஆணுக்கு அளிப்பவர். அதே போல் பெண்களுக்கு நளினத் தன்மையையும் அழகான தோற்றம், கவர்ச்சி, வீரியசக்தி, அறிவாற்றல், மனத்துக்கிசைந்த கணவனை அடையும் தகுதியையும், சுக போகங்களில் திளைத்து மகிழும் ஆற்றலையும் வழங்குவார்.

1.   சுக்கிரன் ஜென்ம லக்கினத்தில் இருந்தால் அழகு, கவர்ச்சியான உடல் அமைப்பு, வசதி, வாய்ப்பு ஏற்படும்.

 

2.   சுக்கிரன் லக்னத்திற்கு 2ல் இருந்தால் சுக வாழ்வு உண்டாகும். கவர்ச்சியான பேச்சால் மற்றவர்களைக் கவரும் நிலை உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பு தீய பழக்க வழக்கம் உண்டாகும்.

 

3.   சுக்கிரன் 3ல் இருந்தால் வசதி வாய்ப்பு உண்டாகும். சந்திரன் சேர்க்கை பெற்றால் கலை, இசைத்துறையில் சாதனை செய்ய நேரிடும்.

 

4.   சுக்கிரன் 4ல் இருந்தால் சொகுசு வாழ்வு தாராள தன வரவு உண்டாகும். பொதுவாக சுபர் பார்வையும் இருந்தால் வாழ்வில் ஏற்றம் தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டாகும். பெண்ணுக்கு 4ம் வீடு கற்பு ஸ்தானம் என்பதால் பாவிகள் சேர்க்கை பெற்றால் கற்பு நெறி தவறிய பெண்ணாக இருப்பாள்.

 

5.   சுக்கிரன் 5ல் இருந்தால் திருமணம் தாமதம் வசதி வாய்ப்பு, பூர்வீக சொத்து, கல்வியில் மேன்மை, மகிழ்ச்சியான மண வாழ்வு, பெண் குழந்தை யோகம் உண்டாகும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம் உண்டாகும்.

 

6.   சுக்கிரன் 6ல் இருந்தால் திருமணம் காலதாமதமாக நடக்கும் நிலை ஏற்படும். பலம் இழந்து பாவிகள் சேர்க்கை பெற்றால் திருமண வாழ்வில் பிரச்சனை, ரகசிய நோய்கள் உண்டாகும்.

 

7.   சுக்கிரன் 7ல் இருந்தால் பல திருமணங்கள் சுப பார்வையும் கிரக சேர்க்கை இல்லாமல் இருந்தால் மண வாழ்வில் மகிழ்ச்சி, சந்தோஷம் ஏற்படும். கிரகங்களுடன் சேர்க்கை பெற்றால் எத்தனை கிரகமோ அத்தனை தாரம். பாவிகள் சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம், பலம் இழந்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளும் பிரிவு உண்டாகும்.

 

8.   சுக்கிரன் 8ல் இருந்தால் சுக வாழ்வு பாதிக்கும், தாமத திருமணம், வீடு, வாகனம் அமையத் தடை உண்டாகும். ரகசிய நோய், உடல் உறவில் ஈடுபட முடியாத நிலை, கண்களில் நோய் உண்டாகும்.

 

9.   சுக்கிரன் 9ல் சுபர் கிரக பார்வை மற்றும் சேர்க்கையுடன் இருந்தால் தந்தைக்கு நீண்ட ஆயுள், செல்வம், செல்வாக்கு, வசதி, வாய்ப்பு பூர்வீகத்தால் அனுகூலம் ஏற்படும். பாவிகள் சேர்க்கை பெற்றால் வெளியூர் வெளிநாடு யோகம் கிடைக்கும்.

 

10. சுக்கிரன் 10ல் இருந்தால் கலை, இசை, பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் மூலம் லாபம், சிலர் மனைவியுடன் கூட்டு தொழில் செய்யும் யோகம் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் சில தவறான செயல்களில் ஈடுபட நேரிடும்.

 

11. சுக்கிரன் 11ல் இருந்தால் நல்ல அறிவாற்றல், வசதி, வாய்ப்பு, எதிர்பாராத தன சேர்க்கை அமையும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றால் நிறைய பெண் தொடர்பு, தவறான வழியில் சம்பாதிக்கும் நிலை உண்டாகும்.

 

12. சுக்கிரன் 12ல் இருந்தால் சுபர் பார்வை மற்றும் சேர்க்கை உடன் 12ல் இருந்தால் சுக வாழ்வு, துணையுடன் தாம்பத்திய உறவில் எல்லை இல்லாத மகிழ்ச்சி சுகத்திற்காக நிறைய செலவு செய்ய நேரிடும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பால் இழப்பு, தீய பழக்க வழக்கம், ரகசிய நோய்கள் கண்களில் பாதிப்பு ஏற்படும்.

 

13. இரண்டு தாரம்,இரண்டு திருமணம் யாருக்கு.

கடகமும் சிம்மமும் லக்னமாகி ஏழுக்குடைய சனி இரண்டில் நின்றால் இருதார யோகம் அமைந்துவிடும். ஏழாம் இடத்திலும் பதினொன்றாம் இடத்திலும் இரண்டு கிரகங்கள் இருந்தால் இருதார யோகம் ஏற்படும். ஏழுக்கு உடையவன் ராகுவுடன் சேர்ந்து ஆறாம் வீட்டில் இருந்தால் அந்த சாதகனுக்கு இருதார யோகம் ஏற்படும். ஏழாம் வீட்டில் சுக்கிரன் சனி சேர்க்கை கண்டிப்பாக இருதாரயோகம் கொடுக்கும். ஏழாம் அதிபதி கெட்டு கெட்டவன் வீட்டில் இருந்தால் இருதார யோகம் ஏற்படும். ஏழாம் வீட்டில் உச்சம் பெற்ற கிரகம் இருந்தாலும் ஏழுக்கு உடையவன் உச்சம் பெற்ற கிரகத்துடன் சேர்க்கை பெற்றாலும் அவனுக்கு இருதார யோகம் கொடுக்கும்.

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.