அணி

அணி - என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள். ஒரு செய்யுளைச் சொல்லாலும், பொருளாலும் அழகு பெறச் செய்தலை அணி என்பர்.

          1.    உவமை அணி

          2.    எடுத்துக்காட்டு உவமை அணி

          3.    இல்பொருள் உவமையணி

          4.    உருவக அணி

          5.    ஏகதேச உருவக அணி

 

1.    உவமை அணி

மயில் போல ஆடினாள்.

மீன் போன்ற கண்.

இத்தொடர்களைப் படியுங்கள். இத்தொடர்களில் நடனம் ஆடும் பெண்ணோடு மயிலையும், கண்ணுடன் மீனையும் ஒப்பிட்டுள்ளனர். இவ்வாறு ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை (மயில், கண்) உவமை அல்லது உவமானம் என்பர். உவமையால் விளக்கப்படும் பொருளை உவமேயம் என்பர். இத்தொடர்களில் வந்துள்ள 'போல', 'போன்ற' என்பவை உவம உருபுகளாகும்.

 

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை  (பொறையுடைமை)

 

பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்வது போல நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது இக்குறளின் பொருள்.

இதில் பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்ளுதல் என்பது உவமை. நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது ஒப்பிடப்படும் பொருள் (உவமேயம்). 'போல' என்பது உவம உருபு.

ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி எனப்படும்.

போல, புரைய, அன்ன, இன்ன, அற்று, இற்று, மான, கடுப்ப, ஒப்ப, உறழ போன்றவை உவம உருபுகளாக வரும்.

 

2.    எடுத்துக்காட்டு உவமை அணி

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத்து ஊறும் அறிவு (கல்வி)

 

மணற்கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும். மனிதர்கள் கற்கும் அளவிற்கு ஏற்ப அறிவு பெருகும் என்பதே இக்குறளின் கருத்தாகும். இதில் தொட்டனைத்து ஊறும் மணற்கேணி என்பது உவமை. மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு என்பது உவமேயம். இடையில் 'அதுபோல்' என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது.

 

இவ்வாறு உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அஃது எடுத்துக்காட்டு உவமை அணி எனப்படும்.

 

3.    இல்பொருள் உவமையணி

 

மாலை வெயிலில் மழைத்தூறல் பொன்மழை பொழிந்ததுபோல் தோன்றியது.

காளை கொம்பு முளைத்த குதிரை போலப் பாய்ந்து வந்தது.

இத்தொடர்களில் 'பொன்மழை பொழிந்தது போல்', 'கொம்பு  முளைத்த குதிரை போல' என்னும் உவமைகள் வந்துள்ளன. உலகில் பொன் மழையாகப் பொழிவதும் இல்லை. கொம்பு முளைத்த குதிரையும் இல்லை. இவ்வாறு உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதை இல்பொருள் உவமை அணி என்பர்.

4.    உருவக அணி

 

ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை உவமையாகக் கூறுவது உவமை அணி என முன்னர்க் கற்றோம். உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணியாகும். இதில் உவமிக்கப்படும் பொருள் முன்னும் உவமை பின்னுமாக அமையும்.

 

'தேன் போன்ற தமிழ்' என்று கூறுவது உவமை ஆகும். தமிழாகிய தேன் என்னும் பொருளில் 'தமிழ்த்தேன் என்று கூறுவது உருவகம் ஆகும். வெள்ளம் போன்ற இன்பத்தை இன்ப வெள்ளம்' என்று கூறுவதும் கடல் போன்ற துன்பத்தைத் 'துன்பக்கடல்' என்று கூறுவதும் உருவகம் ஆகும்.

 

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய

சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடர்ஆழி நீங்குகவே என்று

இப்பாடலில் பூமி அகல்விளக்காகவும், கடல் நெய்யாகவும், கதிரவன் சுடராகவும் உருவகப்படுத்தப்பட்டு உள்ளன. எனவே, இப்பாடல் உருவக அணி அமைந்ததாகும்.

5.    ஏகதேச உருவக அணி

அறிவு என்னும் விளக்கைக் கொண்டு அறியாமையை நீக்க வேண்டும்.

 

இத்தொடரில் அறிவு விளக்காக உருவகப்படுத்தப்பட்டு உள்ளது. அறியாமை இருளாக உருவகப்படுத்தப்படவில்லை. இவ்வாறு கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும். (ஏகதேசம் - ஒரு பகுதி)

 

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்.   (திருக்குறள்)

விளக்கம்

 

வள்ளுவர் மக்களின் செயல்களைப் பொன்னின் தரத்தை அறிய உதவும் உரைகல்லாக உருவகம் செய்துவிட்டு, மக்களது உயர்வையும் தாழ்வையும் பொன்னாக உருவகம் செய்யவில்லை. எனவே இக்குறளில் இடம்பெற்றிருப்பது ஏகதேச உருவக அணியாகும்.

 

https://www.a2ztnpsc.in/