என்ன செய்யும் ஏழரைச் சனி?

உண்மையில் பயமோ, பதட்டமோ அடையத் தேவையில்லை,

நீங்கள் ஏதாவது தவறு செய்யும் போது உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் உங்கள் தவறைத் திருத்தி ஆலோசனை சொல்வார்கள் அல்லவா. அதைத்தான் சனிபகவானும் செய்வார்.

அதாவது உங்களிடம் உள்ள குறைகளை உங்களுக்கு உணர்த்தி, அதை மீண்டும் தொடராதவகையில், உங்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியரே சனிபகவான்.

பணத்தை சிக்கனமாக பயன்படுத்தத் தெரியாதவரா நீங்கள்? நேரத்தை மதிக்காமல் அலட்சியம் காட்டுபவரா நீங்கள்? (10 மணிக்கு வரச் சொன்னால் 11 மணிக்குச் செல்பவரா), நல்லவர் யார்? கெட்டவர் யார்? என பகுத்துப் பார்க்கத் தெரியாதவரா?

அதாவது உங்கள் முகத்திற்கு முன் வஞ்சப்புகழ்ச்சி செய்பவர்களை நல்லவர்கள் என நம்புவதும், உங்கள் முகத்திற்கு நேராக உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களை கெட்டவர்கள் என்றும் நம்புபவரா?

உறவுகளைப் பெரிதாக மதிக்காதவரா?

பணம் எந்த வகையில் வந்தாலும் பரவாயில்லை, என் நோக்கம் பணம் மட்டுமே! என்று நினைப்பவரா?

அப்படியானால் இந்தப் பதிவு உங்களுக்கானாதுதான்!

1.   நாம் செய்கின்ற ஒவ்வொரு தவறையும் சனிபகவான் தன் ஆதிக்க காலத்தில் உணர வைத்து நாம் மீண்டும் அந்த தவறை செய்யாமல் இருக்கச் செய்பவர்.

2.   அவர் ஏன் இதை செய்யவேண்டும், மற்ற கிரகங்கள் இல்லையா?

3.   சனி என்பவர் நீதிமான், எதை தர வேண்டுமோ அதை பாரபட்சம் இல்லாமல் தருவார். அது நல்லதோ அல்லது கெட்டதோ,மற்ற கிரகங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் தன்னை சமரசம் செய்து கொள்ளும். ஆனால் சனி பகவான் தன்னை எதற்கும் சமரசம் செய்யமாட்டார்.

4.   அவர் தருகின்ற கஷ்டங்கள் எல்லாம் உங்களை வதைப்பதற்கு அல்ல.திருத்துவதற்குத்தான்!

5.   உதாரணமாக, பணத்தை தண்ணீராக செலவழிப்பவராக இருந்தால் பணத்தின் அருமையை தன் ஆதிக்க காலத்தில் உணரவைப்பார்.

6.   என்னிடம் வந்த நண்பர் “தான் இளமையில் நல்ல வசதியோடு இருந்தபோது பணத்தை பணமாக நினைக்காமல் வீண் செலவு செய்ததையும், பின் ஏழரை சனி காலத்தில் ஒருவேளை உணவுக்காக தான்பட்ட கஷ்டத்தையும் சொன்னபோது எனக்கே கண்ணீர் வந்துவிட்டது.”

7.   தொடர்ந்து அந்த நண்பர் “நான் இப்பல்லாம் பணத்தைப் பணமாக பார்ப்பதில்லை “மகாலட்சுமியாக பார்க்கிறேன். வீண் செலவு செய்வதில்லை. ஒரு பொருளை வாங்கும் முன் அது நமக்கு அவசியமா? அல்லது அத்யாவசியமா? அல்லது ஆடம்பரமா? என எனக்குள்ளே கேட்டு ஆராய்ந்து முடிவு செய்கிறேன் என்று சொன்னார்.

8.   இதன் வீரியத்தை உணர்ந்தாலே ஏழரைச் சனியின் குணாதிசயம் என்ன என்பதை உணரமுடியும்.

9.   நேரத்தை அலட்சியம் செய்பவர்கள் பின்னாளில் நல்ல வாய்ப்புகளை எல்லாம் கோட்டை விட்டுவிட்டோமே என ஏங்கித் தவிப்பதையும் பார்த்திருக்கிறேன்.

10. எனவே நேரம் தவறாமை என்பதை லட்சியமாக வைத்துக்கொள்ளுங்கள், அது உங்களை உச்சத்தில் வைத்து அழகு பார்க்கும்.

ஏழரைச் சனி என்ன பலன் தருவார் எனப் பார்ப்போம்.

உங்கள் ராசிக்கு 12 ம் ராசியில் சனிபகவான் வர அது “விரயச் சனி

உங்கள் ராசிக்குள் வர அது “ஜென்மச் சனி

உங்கள் ராசிக்கு அடுத்த ராசிக்கு செல்ல அது “பாதச் சனி

இப்படி ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் பயணம் செய்வதே ஏழரை சனி காலம்.

விரய சனி : உங்கள் கையிருப்பை காலி செய்து விரயங்களை அதிகப்படுத்தி உங்களை திக்குமுக்காடச் செய்வதே விரயச் சனி.

இதை நாம் எப்படி சாதகமாக மாற்றுவது (ஜோதிடத்தின் சிறப்பே குறைகளையும் நிறைகளாக மாற்றுவதுதான்!). விரயச் சனி காலத்தில் நாம் நிலம் வாங்குவது, வீடு கட்டுவது, வீட்டைப் புனரமைப்பது, நீங்கள் மணமாகாதவராக இருந்தால் திருமணம் செய்வது, அல்லது உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தல்,தொழிலில் புதிய கிளை துவக்குதல்,

வியாபார ரீதியாக அல்லது தொழில் ரீதியாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளுதல், ஆன்மிகச் சுற்றுலா செல்லுதல்.

ஆலயப் புனரமைப்புக்கு உதவுதல், பொதுக் காரியங்களுக்கு செலவிடுதல், இலவசத் திருமணங்கள் செய்வித்தல்.

இவை உங்கள் விரயங்களை வீண் விரயமாகாமல் மிக முக்கியமாக மருத்துவச் செலவு இல்லாமல் செய்யும்.

ஜென்மச் சனி காலம் : இந்த இரண்டரை ஆண்டுகளும் எதிலும் தலையிடாமல் இருந்தாலே போதும். உங்களுக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட்டால் “ஐயோ பாவம் கையோடு வரும் என்ற பழமொழி தெரியும் அல்லவா. அதுதான் நேரும்.

யாருக்கும் ஜாமின் போடக்கூடாது, மீறிப் போட்டால் நீங்கள் தான் சுமக்க வேண்டும்.

அதாவது உங்கள் நண்பர் நல்லவராக இருந்தாலும் நீங்கள் ஜாமின் தந்ததாலேயே அவர் கெட்டுப்போவார். எனவே கவனம் தேவை.

அமைதி, அமைதி, அமைதியோ அமைதி என்று இருங்கள். மன நிம்மதி தரும்.

பாத சனி : இந்தக் காலம் தான் ஊரைவிட்டு ஓடுதல், நாட்டைவிட்டு ஓடுதல், பிழைக்க வேறொரு ஊருக்குச் செல்லுதல், தலைமறைவு வாழ்க்கை என சோதனையான காலம்.

இப்போது நாமாகவே சொந்த வீடாக இருந்தாலும் வாடகை வீட்டிற்க்கு மாற வேண்டும். அல்லது வேறு ஊருக்கு மாறிச் செல்ல வேண்டும்.

இப்படிக் கஷ்டங்களை நமக்கு நாமே தொடர்பு படுத்தினால் சனியின் ஆதிக்கம் குறையும்.

இதற்கிடையில் உங்களுக்கு பணத்தின் அருமை, நேரத்தின் அருமை, உண்மையான நண்பர்கள் யார், துரோகிகள் யார், உறவினர் தராதரம், என அனைத்துப்பாடங்களும் சனி நடத்திக் காட்டுவார்,

எனவே அவர் நடத்திய பாடங்களை மனதில் நிறுத்தி இனி வரும் காலங்களை சரியாக திட்டமிட்டு வாழ்வை வளமாக்கிகொள்ளுங்கள்.

அஷ்டம சனி : ஏழரை ஆண்டு பாடத்தை நடத்தியும் நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ளவில்லையா, அதற்கான short time course தான் அஷ்டம சனி.

புரியவில்லையா.

ஏழரை ஆண்டுகளின் சோதனைகளையும் மொத்தமாக இரண்டரை ஆண்டுகளில் தந்து உங்களைச் சோதித்து விடுவார். எனவே நிதானமாக நடந்தால் நன்மை நடக்கும். ஆர்பாட்டமாக இருந்தால் ஓரமாக உட்கார வைத்துவிடுவார். எனவே கவனமாக இருங்கள்,

அர்த்தாஷ்டம சனி : உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சனி சஞ்சரிக்கும் காலம்.

ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவேண்டிய நேரம். உங்கள் சொத்துக்களில் திடீர் என வரும் பிரச்சினைகள், வாகனச் செலவு என அஷ்டமத்தில் சனி என்ன செய்வாரோ அதில் பாதி சிரமத்தைத் தருவார். இந்த காலத்தில் நிலம், வீடு வாங்குதல் கூடாது. மருத்துவர் ஆலோசனையை அலட்சியப்படுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும்.

கண்ட சனி :- உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் சனி வரும் காலம் கண்ட சனி காலம் ஆகும்.

ஏதாவது கண்டத்தைத் தருவாரோ என பயம் வேண்டாம். இந்த காலம்தான் கணவன், மனைவி ஒற்றுமைக்கு சோதனையான காலம்.

இதுவரை உங்கள் கருத்துக்கு எதிர் கருத்து கூறாத உங்கள் துணை (ஆண், பெண் யாராயினும்) இப்போது எதிர் கருத்தை வெளிப்படுத்துவார். இப்போதுதான் நிதானம் தேவை, கண்ட சனியை புரிந்து கொண்டால் இதை எளிதாக கடக்கலாம்,

ஆனாலும் உங்கள் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும், தலைவலிதானே என அலட்சியமாக இருக்காமல் தக்க மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

மொத்தத்தில் ஏழரைச் சனி காலத்தில் திருமணம், வீடு கட்டுதல், வாங்குதல் நன்மை தரும்.

மீண்டும் சொல்கிறேன் “திருமணம் செய்யலாம்

அஷ்டம சனி காலத்தில் செய்யக்கூடாது திருமணம் செய்யக்கூடாது, புதிய முயற்சிகளில் இறங்கக்கூடாது, வீடு மனை வாங்க கூடாது.

அர்த்தாஷ்டம சனி காலத்தில் செய்யக்கூடாது வாகனம் வாங்கக் கூடாது. பயணம் மேற்கொள்ளக்கூடாது, தாயாரின் உடல் நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்,

கண்ட சனி காலத்தில் செய்யக்கூடாது கணவன் மனைவி விட்டுக்கொடுத்தல் என்ற பண்பு குடும்பத்தில் அமைதி தரும்.

ஏழரைச் சனி காலம் முதல் சுற்றாக இருந்தால் மட்டுமே சோதனை தரும்,

இரண்டாம் சுற்றாக இருந்தால் அது “பொங்கு சனி காலம் துன்பம் ஏதும் இருக்காது. மாறாக, பெரும் நன்மைகள் ஏற்படும். அனைத்து வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தரும். ஆனால் பெற்றோருக்கு காரியம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

குரு பகவான் எப்போது துணை நிற்பார்?

குரு பலன் மற்றும் குருப் பெயர்ச்சி பற்றி பார்ப்போம்.

குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை, ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைவார்.

இப்படி பெயர்ச்சி அடையும் போது அவர் பார்க்கும் ராசிகள் புனிதம் அடைந்து நன்மைகள் நடக்கும் என்பது ஜோதிட விதி.

குரு பகவான், தான் நின்ற ( ராசி ) இடத்திலிருந்து 5வது ராசியையும், 9 வது ராசியையும் பார்ப்பார். மற்றும் 7 வது ராசியை நேர் பார்வையாக பார்ப்பார்.

இதில்லாமல், தான் நின்ற ராசிக்கு அடுத்த ராசியையும் அதாவது 2 வது வீடு, மற்றும் 11வது வீட்டையும் சூட்சுமப் பார்வையின் மூலம் பார்ப்பார்.

குரு பகவானின் பார்வையானது 5,7,9 மற்றும் 2,11 என ஐந்து ராசிகளைப் பார்ப்பார்.

எடுத்துக்காட்டாக தற்போது துலாம் ராசியில் இருக்கும் குரு பகவான் 5ம் பார்வையாக கும்ப ராசியையும், 7ம் பார்வையாக மேஷ ராசியையும், 9ம் பார்வையாக மிதுனத்தையும், சூட்சுமப் பார்வையாக 2 ம் இடமான விருச்சிகத்தையும், 11ம் வீடான சிம்மத்தையும் பார்க்கிறார்.

ஒருவர் ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் குரு பார்வை பட்டால் அந்த தோஷம் நீங்கும் என்பது ஜோதிட விதி.

அதாவது ஒருவருக்கு திருமணத்தில் தடை ( தாமதம் அல்ல) இருப்பதாக இருந்தால், குரு பார்வை படும்போது தடை நீங்கி திருமணத்தைத் தரும் என ஜோதிடம் உறுதியாகக் கூறுகிறது.

விதியை மாற்றும் வல்லமை, குரு பகவானுக்கு மட்டுமே உள்ளது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

எனவேதான் திருமணத்தில் குரு பலம் வந்துவிட்டதா? என அறிந்த பின் திருமண முயற்சிகளில் அனுபவசாலிகள் ஈடுபடுவார்கள்.

ஜாதகப் பொருத்தம் பார்க்கப்படாமல் அதாவது காதல் திருமணம் செய்பவர்கள், இந்த ஜாதகப் பொருத்தமெல்லாம் பார்க்காமல் திருமணம் செய்வார்கள். இன்னும் சிலர் சூழ்நிலை காரணமாக பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள்.

இவர்களுக்கெல்லாம் ஒரேயொரு ஆலோசனை.திருமண முகூர்த்தத்தை குறிக்கும்போது, ஆண் அல்லது பெண் இருவரில் ஒருவருக்காவது குரு பார்வை இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். மற்றும் முகூர்த்த லக்னம் மற்றும் எட்டாமிடம் குரு பார்வையில் இருக்கும்படி அமைத்துக்கொள்ள உங்கள் ஜாதகப்படி திருமண தோஷம் எதுவானாலும் எந்தக் குறையும் இல்லாதபடி மண வாழ்வு சிறப்பாகும்.

இந்த ஒரு வருட குருப் பெயர்ச்சி காலத்தில் அந்த முழு வருடமும் நன்மையைத் தருவாரா? எனில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நாம் ஏற்கெனவே பார்த்தபடி 5,7,9,2,11 ஆகிய இடங்களுக்கு நன்மை செய்யும் குரு பகவான் மற்ற இடங்களான 1 ( ஜென்ம ராசி) , 3,4,6,8,10,12 ஆகிய இடங்களுக்கு நன்மை குறைவாகவும், பாதிப்புகளை அதிகமாகவும் தருவார்.

சரி இப்படி வருடம் முழுக்க நன்மையோ, கெடுதலோ தந்தால் அதை மனிதன் தாங்கிக்கொள்வானா?

அதாவது வருடம் முழுக்க, பணமாகக் கொட்டினால் அகந்தை வந்துவிடும்.

அதேசமயம் வருடம் முழுவதும் துன்பமயமாக இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும்.

அதனால்தான் இறைவன் அந்த அளவையும் அதாவது நன்மை தீமை எதுவானாலும் அளந்து தரும்படி பார்த்துக்கொண்டான்.

குழப்பமாக இருக்கிறதா! ஒன்றும் குழம்ப வேண்டாம்.

ஒருவருட பயணத்தில் குருவானவர் ஏறக்குறைய 5 1/2 மாதங்கள் வக்கிரம் மற்றும் அஸ்தமனம் எனும் நிலையை அடைவதால் குரு பெயர்ச்சியின் மொத்த பலனும் பாதி அளவில்தான் ( நன்மையோ, தீமையோ) நம்மை வந்தடையும்.

எனவே பாதகமான பலன்கள் நடைபெறுமோ என அச்சப்படுபவர்கள் பயப்படத் தேவையில்லை.

அதேசமயம் நற்பலன்கள் நடைபெறுபவர்கள் குரு வக்ரம் அல்லது அஸ்தமனம் அடைவதற்குள் சுபகாரியங்களைச் செய்துவிடவேண்டும்,

அதேசமயம் ஜாதகத்தில் நன்மை தரக்கூடிய திசா புத்தி நடந்தால்தான் இந்த குருப் பெயர்ச்சி நன்மை தரும்,

மாறாக பாதகத்தை தரும் திசாபுத்தி நடந்தால் பெரிய நன்மை ஏதும் தராது.

இதை நீங்கள் உங்கள் அனுபவத்திலேயே அறிந்து கொள்ளலாம்.

உதாரணமாக “குரு பார்வை வந்துவிட்டது தாராளமாக திருமணம், வீடுவாங்குதல், வீடுகட்டுதல் செய்யலாம் என பலன் சொல்வார்கள். ஆனால் ஆண்டுகள் பல கடந்தாலும் திருமணமோ அல்லது சொந்த வீடு முயற்சியோ கைகூடாமல் போவதையும் நாம் பார்த்திருப்போம்.

இதற்கு சாதகமாக இல்லாத திசாபுத்தியே காரணம். இதை நாம் விளங்கிக் கொண்டால் போதும். பெரிய எதிர்பார்ப்புகளை எதிர்கொள்ள மாட்டோம்.

ஆறுமாதம் சாதகமும், ஆறுமாதம் பாதகமும் தரக்கூடிய குருப் பெயர்ச்சியானது இப்போதெல்லாம் பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது, மகிழ்ச்சிதான். ஆனால் இதனால் யாருக்கு யோகம் என்பதைப் புரிந்துகொண்டால் மிக்க மகிழ்ச்சி,

குருப் பெயர்ச்சியின் போது ஆலயங்களுக்குச் செல்லுங்கள். மனமுருகப் பிரார்த்தனை செய்யுங்கள். பரிகாரம் என்ற பெயரில் பணத்தை விரயம் செய்யாதீர்கள்.

அதற்கு பதிலாக ஆலயங்களுக்கு நல்லெண்ணெய், பன்னீர், சந்தனம், பால், தயிர், மலர்மாலைகள், பூக்கள் என உங்கள் சக்திக்கு ஏற்றவாறு கைங்கர்யம் செய்யுங்கள்.

குரு பகவான் என்றென்றும் உங்களுக்கு துணை நிற்பார். குருவே சரணம்!, குருமார்களே சரணம்!

குரு - சனிப்பெயர்ச்சி பலன்கள் தெரிஞ்சுக்கணுமா?

நாம் இந்த பதிவில், கிரகங்களின் பெயர்ச்சிகளைப் பற்றியும் அதன் பலன்களை பற்றியும் பார்ப்போம்.

அனைத்து கிரகங்களும் தினமும் நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது, இதில் சந்திரன் மிக வேகமாக ஒரு ராசியை இரண்டேகால் நாட்களில் கடக்கிறது.

சூரியன் 30 நாட்களில் ஒரு ராசியைக் கடக்கிறது.

சுக்கிரனும், புதனும் 30 நாட்களை எடுத்துக் கொள்கிறது.

செவ்வாய் ஒரு ராசியைக் கடக்க 45 நாட்கள் ஆகின்றன.

குரு ஒரு ராசியைக் கடக்க ஒரு வருடம் ஆகிறது.

சனி ஒரு ராசியைக் கடக்க இரண்டரை வருடங்கள் ஆகின்றன.

ராகு கேதுக்கள் ஒரு ராசியைக் கடக்க 1 1/2 ஆண்டுகள் ஆகின்றன.

ஆக, மாதாமாதம் ராசிகளைக் கடக்கும் கிரகங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை.

அதாவது சாதாரண ஜுரம் (காய்ச்சல், தலைவலி) இரண்டு மூன்று நாட்களில் குணமாகிவிடும். ஆனால் மாதக்கணக்கில் அல்லது வருடக் கணக்கில் வருகின்ற உடல் உபாதை காலத்திற்கும் மறக்க முடியாமல் செய்துவிடும்.

இதைத்தான் கிரகங்களும் செய்கின்றன. மாத கிரகங்கள் தரும் பலன்கள் தற்காலிகமானவை.

ஆனால் ஆண்டு கிரகங்கள் தரும் பலன்கள் மாறாத அடையாளத்தை ஏற்படுத்திவிடும். அது நல்ல பலன்களாகவும் இருக்கலாம். அல்லது கெடு பலன்களாகவும் இருக்கலாம்.

அதாவது சிலருக்கு நிரந்தரத் தொழில் அல்லது உத்தியோகத்தைத் தரலாம்.

ஒருசிலருக்கு செய்து வந்த தொழிலை முடக்கி ஒன்றும் இல்லாமலும் செய்துவிடலாம்.

அதனால்தான் இந்த ஆண்டுக் கணக்கில் பெயர்ச்சி அடையும் கிரகங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

நான் பார்த்த வகையில் சேலத்தைச் சேர்ந்த அன்பர் ஒருவர் மாற்று உடை கூட இல்லாதவர். தற்போது விலை உயர்ந்த காரில்தான் பயணம் செய்கிறார். உடனே தப்புக் கணக்கு போட்டு விடாதீர்கள்.

அவரின் பள்ளிப்பருவ நண்பர் எக்ஸ்போர்ட் துறையில் உள்ளவர். அவர் இவரிடம் உள்ள தொழில் திறமை காரணமாக கூட்டாளியாக்கி தொழிலதிபராக மாற்றிவிட்டார். இப்படித்தான் மாறாத அடையாளத்தை வருட கிரகங்கள் தரும்.

அதேசமயம், கோவையைச் சேர்ந்த அன்பர், கோடிகளில் புரண்டவர் ஆனால்.இப்போது வேண்டாம் அதுபற்றி!

எனவே கிரகங்களின் அருள் பார்வை ஒன்றே நம்மை செம்மைப்படுத்தும்.

ஆக, என்னதான் கிரகப் பெயர்ச்சி நன்மை தரும் விதமாக இருந்தாலும், சுய ஜாதகத்தில் அந்த கிரகம் நல்ல நிலையில் இருந்தால்தான் கிரகப் பெயர்ச்சியும் நன்மை தரும்.

ஒவ்வொரு கிரகப் பெயர்ச்சியின் போதும் (குரு,சனி, ராகு கேது) பலன்கள் என்ற பெயரில் புத்தகங்கள், யாகங்கள், தொலைக்காட்சியில் விளக்கங்கள் என அமர்க்களப்படும்.

ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான பலன்களாக இருக்கிறதே... எதை நான் எடுத்துக்கொள்வது என்று பலருக்கும் குழப்பம்.

கவலைவேண்டாம்! எளிமையாக நாமே இந்தப் பலன்களை அறிந்து கொள்ளலாம், அதனால்தான் இந்தத் தொடருக்கு “ஜோதிடம் அறிவோம் என்று தலைப்பிட்டோம்!

குருப் பெயர்ச்சி :- உங்கள் ராசிக்கு 2,5,7,9,11 ஆகிய ஏதாவதொரு இடத்தில் குரு வருகிறாரா!

உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். திருமணம், வேலை, தொழிலில் இருந்த முடக்கம் நீங்குதல், சொந்த வீடு பாக்கியம்,வெளிநாட்டுப் பயணம், புத்திரபாக்கியம், நீண்ட நாளைய நோய் தீருதல், தடைப்பட்ட கல்வி தொடருதல் என அனைத்தும் உங்களை வந்தடையும்.

சனி பெயர்ச்சி மற்றும் ராகு கேது பெயர்ச்சி:-

உங்கள் ராசிக்கு 3,6,10,11 ஆகிய ஏதாவதொரு இடத்தில் இவர்கள் வர இருக்கிறார்களா!

தொட்டதெல்லாம் லாபம், எந்த முடிவையும் கண்ணை மூடிக்கொண்டு எடுக்கலாம். எதிரிகள் உதிரிகள் ஆவார்கள். வழக்குகள் உங்களுக்கு சாதகம் ஆகும். பணம் கொழிக்கும். சொந்தத் தொழில், சொந்த வீடு என அனைத்தும் உங்களைத் தேடி வரும்.

மிக முக்கியமாக வெளிநாட்டுத் தொழில், வேலை , ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம், வெளிநாட்டு குடியுரிமை பெறுதல் என அனைத்தும் சுபிட்சமே!

குருப் பெயர்ச்சி:- உங்கள் ராசியில் அதாவது 1,3,4,6,8,10,12 ஆகிய இடங்களில் வரும்போது...

1- மனக்குழப்பம், தவறாக முடிவெடுத்தல், மன அமைதி தேவை.

3- முயற்சியில் தோல்வி, பயம், சகோதரப் பகை, அதிக சிரத்தை எடுத்தும் பயனில்லாமல் போவது.

4- ஆரோக்கிய தொல்லை, தாயார் உடல்நலம் பாதிப்பு, வாகனச் செலவு, வீடு மராமத்து செலவு, சேமிப்பு கரைதல்,

6- அர்த்தமற்ற கடன், கடன் பயம், ஆரோக்கிய பாதிப்பு, நண்பர் உறவினர்கள் பகையாகுதல், தொழில், உத்தியோகத்தில் கடும் எதிர்ப்பு, பணியாளர்கள் எதிர்ப்பு, நிம்மதி குலைதல்.

8- தலைமறைவு வாழ்க்கை, எதிர்பாராத வழக்கு, பழிச்சொல்லுக்கு ஆளாகுதல், எதெல்லாம் ஆதாரமாக இருந்ததோ அவை அனைத்தும் உங்களை கை விடுதல்.

10- தொழில் பாதிப்பு, வேலை பறிபோகுதல், பதவி இறக்கம், கையறு நிலை.

12- ஊர்விட்டு ஊர் மாறுதல், தலைமறைவு வாழ்க்கை, மருத்துவச்செலவு, சிலருக்கு சுபச் செலவு அதாவது திருமணம், வீடுகட்டுதல், எதிர்பாராத வீண் விரயங்கள்.

சனி மற்றும் ராகு கேது:-

1- குழப்பம், தான் யார் என்றே தெரியாத அளவுக்கு தன்னிலை மறத்தல், தவறான முடிவுகள், அதீதமாக உணர்ச்சிவசப்படுதல்.

2- வார்த்தைகளில் எச்சரிக்கை தேவை, யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது, குடும்ப பிரச்சினைகளில் நிதானம், ஜாமின் கூடாது, தவறான வழியில் பணம் வரக்கூடாது,

4- உடல் உபாதை, வீடு மாறுதல், சுகபோகங்களைத் தவிர்க்க வேண்டும், வீண் செலவு கூடாது.

5- பிள்ளைகள் மீது அக்கறை காட்டவேண்டும். சிலருக்கு பிள்ளைகளால் வேதனை, குலதெய்வ வழிபாடு அவசியம், பூர்வீக சொத்தில் பிரச்சினை, சொத்துத் தகராறு ஏற்படும்.

7- தம்பதிகள் ஒருவொருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும், இல்லை என்றால் கோர்ட் வரை போகவேண்டிவரும். கணவன்/ மனைவி உடல்நலம் கவனம் தேவை. இரண்டாவது குழந்தைக்கு பாதிப்பு, நண்பர்கள், கூட்டாளிகளால் அவமானம் பாதிப்பு ஏற்படும்.

8- பயணங்களில் எச்சரிக்கை, அவமானம் உண்டாகுதல், வழக்குகள் உங்களுக்கு எதிராகும்.

உயரமான இடங்களில் கவனமாக செயல்பட வேண்டும், விபத்துக்களால் அங்கஹீனம் உண்டாகலாம், சிறை பயம் ஏற்படும்.

9- பூர்வீகச் சொத்து பறிபோகுதல், தந்தைக்கு கண்டம், எதிர்பார்த்து காத்திருந்த நல்ல பலன்கள் ஏமாற்றம் தரும்.

12- தலைமறைவு வாழ்க்கை, ஊரைவிட்டு ஓடிப்போகுதல், தவறான பழக்கங்களுக்கு அடிமையாகுதல், தூக்கம் தொலைத்தல்.

இந்த மேற்கண்ட பலன்களைதான் நான் உட்பட எந்த ஜோதிடரும் விலாவரியாக எடுத்துரைப்போம். எனவே இந்த பலன்களை அறிந்து கொண்டாலே எப்படி பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று உங்களைத் தயார் படுத்திக்கொள்ளலாம்.

இது அனைத்திற்கும் மேலாக உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் இருக்கும் இடத்திற்கு தக்கவாறுதான் பலன்கள் நடக்கும்.

உதாரணமாக உங்கள் ஜாதகத்தில் சனி இருக்கும் இடத்திற்கு 1,5,9 ஆகிய இடங்களில் கோச்சார சனி வரும் போது ஏழரை சனியோ, அட்டம சனியோ, எதுவும் உங்களை பாதிக்காது, மாறாக தொழில் வளர்ச்சியைத்தான் தரும்.

எனவே இந்தப் பெயர்ச்சி பலன்களை கண்டு பயப்படத் தேவையில்லை, உங்கள் ஜாதகம் பலமாக இருந்தால் இந்த பெயர்ச்சிகள் எந்த பாதிப்பையும் தரமுடியாது என்பதை திடமாக நம்புங்கள்.

நவக்கிரகங்கள்; நவதானியங்கள்; பலன்கள்!

பஞ்சாங்கம் என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே.

 

ஜோதிடர்கள் மட்டுமே பஞ்சாங்கத்தைப் பயன்படுத்துவார்கள் என நினைக்கவேண்டாம், பஞ்சாங்கம் என்பது நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டிய ஒன்று.

பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை உள்ளடக்கியது, அதாவது பஞ்சபூதங்களை உள்ளடக்கியது. இந்த பூமியும் பஞ்சபூதங்களால்தான் கட்டமைக்கப்பட்டது.

இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் மனிதன் உட்பட பஞ்சபூதங்களின் தொகுப்புதான். அதனால்தான் உயிர் பிரிந்த பின்இந்த உடல் பஞ்சபூதங்களில் தன்னை ஆட்படுத்திக்கொள்கிறது,

பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்கள் எவை தெரியுமா?

1) வாரம் 2) திதி 3) நட்சத்திரம் 4) யோகம் 5) கரணம் இந்த ஐந்து காரணிகள்தான் பஞ்சாங்கம்.

அன்றைய தின பஞ்சாங்கக் குறிப்புகளை, அதாவது வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் இவற்றை தினமும் வாசித்து வருபவர்களுக்கு கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறைவாகவே உண்டாகும் என்பது ஐதீகம்,

அதனால்தான் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று “பஞ்சாங்கம் வாசித்தல் என்ற வழக்கம் இன்றளவிலும் உள்ளது. இது அனைத்து ஆலயங்களிலும் நடக்கும்.

திருமலை திருப்பதி ஶ்ரீநிவாச பெருமாளுக்கு அதிகாலையில் அன்றைய பஞ்சாங்க விபரங்களை வாசித்துக் காட்டும் வழக்கம் இன்றும் தொடர்கிறது.

பஞ்சாங்கத்தை தானம் தருவதும் மிகுந்த நன்மையைத் தரும்.

பொதுவாக கிரகங்களின் தாக்கங்களைக் குறைக்கவோ, அதிகரிக்கவோ வேண்டும் என்றால் அந்த கிரகங்களுக்குண்டான நாட்களில் அந்த கிரகங்களின் தானியத்தால் செய்த உணவுகளை தானம் தருவதன் மூலம் நல்ல பலன்கள் நம்மை வந்தடையும்.

சூரியன்:- இவரின் தானியம் “கோதுமை.” எனவே கோதுமையால் செய்த உணவுகளை ஞாயிற்றுக்கிழமையில் தானம் செய்துவர நன்மைகள் நம்மை வந்து சேரும்,

வேலை தேடுபவர்கள், பதவி உயர்வு எதிர்பார்ப்பவர்கள், ஆண் குழந்தை எதிர்பார்ப்பவர்கள், அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்கள், அரசியலில் இருப்பவர்கள், தலைமுறையாக தொழில் செய்பவர்கள், இவர்களைல்லாம் இந்தப் பரிகாரம் செய்துவர நினைத்தது நடக்கும்.

சந்திரன்:- இவரின் தானியம் “நெல்.” எனவே “பச்சரிசி யில் செய்த உணவுகளை திங்கட்கிழமையில் தானம் செய்துவர நன்மை கிடைக்கும்.

கதை, கவிதை, இலக்கியம் படைப்பவர்கள், அலைச்சல் மிகுந்த வேலை செய்பவர்கள், வாகனம் சம்பந்தப்பட்ட ( டிராவல்ஸ் ) தொழில் செய்பவர்கள்,வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்கள்,உணவகத்தொழில் செய்பவர்கள்,

அடிக்கடி பணி இடமாற்றத்தை சந்திப்பவர்கள் இவர்களெல்லாம் இந்தப் பரிகாரத்தை செய்துவர நன்மை உண்டாகும்.

செவ்வாய்:- இவரின் தானியம் “துவரை.” எனவே துவரையால் செய்த உணவுகளை தானம் செய்ய வேண்டும்.

மருத்துவர்கள், விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி மையங்கள் நடத்துபவர்கள், ஜேசிபி , டிராக்டர் போன்ற விவசாய இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், கட்டிடத்தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், கட்டுமான பொருள் வியாபாரம் செய்பவர்கள், செங்கல் சூளை, கேட்டரிங் தொழில் செய்பவர்கள்,மருந்துக்கடை வைத்திருப்பவர்கள் இவர்களெல்லாம் துவரை கலந்த உணவுகளை செவ்வாய்க்கிழமைகளில் தானம் செய்துவர நன்மை பெருகும்.

புதன்:- இவரின் தானியம் “பச்சைப்பயறு.” இதை சுண்டல் செய்து தானம் தர நன்மை உண்டாகும்.

கல்வியாளர்கள், எழுத்துத் துறை சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், கமிஷன் மண்டி தொழில், ஏஜென்சி தொழில், தரகுத்தொழில், திருமணத்தரகர்கள், மளிகைக்கடைக்காரர்கள், ஆடிட்டர்கள், கணக்காளர்கள், வங்கி பணியாளர்கள், சித்த மருத்துவர்கள், மனை வியாபாரம் செய்பவர்கள், நரம்பு மற்றும் தோல் மருத்துவர்கள், அழகுநிலையம் நடத்துபவர்கள் என இவர்கள் பச்சைப்பயறு தானங்களை புதன்கிழமைகளில் செய்துவர நன்மை அளிக்கும்.

குரு:- இவரின் தானியம் “கொண்டைக்கடலை.” இதை வியாழக்கிழமைகளில் தானம் வழங்கினால், நன்மை உண்டாகும்.

திருமணம், புத்திர சந்தானம், நல்ல வேலை, தொழில், உயர் கல்வி என அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றித்தருவார்,

கல்வியாளர்கள், உபதேசத் தொழில் செய்பவர்கள், பேச்சைத் தொழிலாக கொண்டவர்கள், உபந்யாசம் செய்பவர்கள், வட்டித்தொழில், அடகுத் தொழில், சிட்பண்ட், கிளப், தவணைமுறை வியாபாரிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், வங்கிப்பணியாளர்கள் என இவர்களெல்லாம் வியாழன் தோறும் கொண்டைக்கடலை தானம் செய்துவர, குருவின் அருள் பார்வை கிடைக்கும்.

சுக்கிரன்:- இவரின் தானியம் “மொச்சை.” இந்த மொச்சைப் பருப்பை சுண்டல் செய்து வெள்ளிக்கிழமை தோறும் தானம் தர செல்வ வளம் பெருகும்.

கலைத்துறை சார்ந்தவர்கள், இசை, நடனம், கலை, சினிமா, நாடகத்துறை , ஆபரணக்கடை, ரெடிமேட் கடை, கவரிங் கடை, வளையல் பொட்டு போன்ற பெண்கள் தொடர்புடைய கடை நடத்துபவர்கள், வெள்ளிப் பொருட்கள், ஆடம்பரப்பொருள் விற்பனை, அழகுநிலையம், இவர்களெல்லாம் வெள்ளிக்கிழமைகளில் மொச்சை தானம் தர செல்வம் பெருகும்.

சனி:- இவரின் தானியம் “எள்.” எனவே, எள் கலந்த உணவை தானம் தர சனியின் அற்புதப் பலன்கள் நம்மை வந்தடையும்.

தொழிலாளிகள், உடல் உழைப்பு அதிகம் உடையவர்கள், சேவைசார்ந்த தொழில் செய்பவர்கள், அரசியல்வாதிகள், கடைநிலை ஊழியர்கள், தோல் பொருள் விற்பனை, காலணி கடை, இரும்புத் தொழில், பழைய இரும்பு வியாபாரம்,கால்நடை வளர்ப்பு, வழக்கறிஞர்கள், நீதிபதிகள், சாலைப் பணியாளர்கள், இவர்களெல்லாம் எள் கலந்த உணவை சனிக்கிழமைகளில் தானம் தர நன்மை பெருகும்,

ராகு:- இவரின் தானியம் “உளுந்து.” எனவே உளுந்து பருப்பில் செய்த உணவை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தானம் தர அளப்பரிய நன்மைகள் வந்து சேரும்,

அயல்நாட்டு தொடர்புடைய தொழில், ஏற்றுமதி இறக்குமதித் தொழில், சூதாட்ட விடுதி, மது விற்பனை, மால் போன்ற மல்ட்டி காம்ப்ளக்ஸ், சூப்பர் மார்க்கெட், IATA என்னும் ஏஜென்சி, இறைச்சி வியாபாரம், தோல் வியாபாரம், தோல் பொருள் உற்பத்தி மற்றும் வியாபாரம் செய்பவர்கள் எல்லோரும் உளுந்து சம்பந்தப்பட்ட உணவை தானம் தர வளமை பெருகும்.

கேது:- இவரின் தானியம் “கொள்ளு.” எனவே கொள்ளு கலந்த உணவை செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் தானம் தர தடைகள் அனைத்தும் நீங்கி நினைத்தது நடக்கும்.

ஆன்மிகம் தொடர்புடைய தொழில், இறை சம்பந்தபட்ட கடை, பூஜை மற்றும் படக்கடை, உபந்யாசம், புரோகிதம், ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாட்டாளர், கைடு என்னும் வழிகாட்டி, உளவுத்துறை, தூதரகப் பணி, துப்பறிவாளர்கள், கைரேகை நிபுணர், டிடெக்டிவ் ஏஜென்சி, ஜோதிடர்கள் என இவர்களெல்லாம் கொள்ளு உணவை தானம் தர நிம்மதியான வாழ்வும், வளமான வாழ்க்கையும் அமையும்.

இங்கு சில விபரங்களை உங்களுக்குத் தருகிறேன் பயன்படுத்துங்கள்.

எந்த சுப காரியத்துக்குச் சென்றாலும் மூன்று பேராகச் செல்லாதீர்கள். அது காரியத்தடை உண்டாக்கும்.

உடையின் நிறம் அடர் சிவப்பு, கருப்பு நிறத்தைத் தவிருங்கள்.

கைகளைக் கட்டிக்கொண்டு இருக்காதீர்கள். அது உங்கள் காரியத்தையும் கட்டிப்போட்டுவிடும்.

உங்கள் கைகள் சாதாரணமாக இருக்கட்டும். அதாவது தலைமுடியை கோதுவது, கன்னத்தில் கை வைப்பது, புருவம், மீசையை தொடுவது கூடாது. அது காரியத்தடையைக் காட்டும்.

அதே சமயம் நெற்றி, காதுமடல், மூக்கு நுனி, இவைகளைத் தொட நீங்கள் கேட்டு வந்த காரியம் வெற்றியாகும்.

மேற்கண்டவை அனைத்தும் ஜாதகம் பார்க்கும் போது மட்டுமல்ல எந்த விஷயத்திற்கு நீங்கள் சென்றாலும் பொருந்தும். பலன் கொடுக்கும்.

காலை எழுந்தவுடன் உங்கள் உள்ளங்கை, கோயில்கோபுரம், நிலைக்கண்ணாடி, பசு, யானை(படம்), பழங்கள், குழந்தைகள், எனப் பார்க்க அந்த நாள் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கும்.

குளித்தவுடன் முதலில் முதுகைத் துடைக்க வேண்டும். பிறகே முகத்தைத் துடைக்க வேண்டும்.

அதாவது நீங்கள் குளிக்கும் போது மூதேவியும், ஶ்ரீதேவியும் காத்துக்கொண்டிருப்பார்களாம். நீங்கள் துடைக்கும் முதல் பகுதி எதுவானாலும் முதலில் மூதேவி வந்து பற்றிக்கொள்வாளாம். பிறகே ஶ்ரீதேவி பொறுமையாக வந்து அமர்வாளாம்.

நீங்கள் முதலில் முகத்தைத் துடைக்க மூதேவி உங்கள் முகத்தைப்பற்றிக்கொள்வாள். எனவேதான் முதலில் முதுகையும் பிறகு முகத்தையும் துடைக்க வேண்டும் என பெரியோர்கள் சொல்வார்கள்.

இது சரிதான் என்றாலும், இப்போது வேறுஒரு விளக்கத்தையும் பார்ப்போம்.

உழைப்பின் அடையாளம் முதுகு. சனியின் ஆளுமை உள்ள இடம் முதுகு. சனியின் பரிபூரண அருள் இருந்தால்தான் செய்கின்ற தொழில், உத்தியோகம் நிரந்தரமானதாகவும், மன நிறைவைத் தருவதாகவும் இருக்கும்.

எனவேதான் முதுகுப் பகுதி சனியின் அம்சம் என்பதால் அதற்கே முதல் மரியாதை.

முதலில் முகத்தைத் துடைப்பவர்கள். நிச்சயமாக சொல்கிறேன் முகஸ்துதி பாடி , ஆமாம்சாமி போட்டு வாழ்பவர்களாகத்தான் இருப்பார்கள்.

குளிக்கும்போது எந்த நீராக இருந்தாலும்( சுடுநீர், தண்ணீர்) முதலில் கால் பாதத்தில் இருந்துதான் குளிக்கத் தொடங்க வேண்டும்.

ஈரத்துண்டை கட்டிக்கொண்டு பூஜை செய்யக்கூடாது. அதுபோல் ஓர் உடை மட்டும் அணிந்து சாப்பிடக்கூடாது. இரு உடை நமது மேனியில் இருக்க வேண்டும்.

திருநீறை ஈரப்படுத்தி பூசக்கூடாது, சாதுக்கள் மட்டுமே அவ்வாறு பூசலாம்.

திருநீறு மேற்பகுதியிலும், அதற்கு கீழே குங்குமம் இட வேண்டும். புருவ மத்தியில் விசேஷித்த மை, சந்தனம் இட வேண்டும்.

ஆலய வழிபாட்டின் போது முதலில் கோபுர தரிசனம், பிறகு கொடிமர வணக்கம், அதை அடுத்து பலிபீடம். இங்குதான் உங்கள் கோரிக்கைகள் வைக்கப்படவேண்டும். அதை அடுத்து இறைவனின் வாகனம். இவரிடம்தான் நீங்கள் இறைவனை வணங்க அனுமதியும், உங்கள் வருகையையும் பதிவு செய்யவேண்டும்.

இறைவனிடத்தில் நீங்கள் எதுவும் கேட்கக் கூடாது. ஆலயத்தில் இறைவனின் திருநாமத்தை மட்டுமே உச்சரித்துக்கொண்டு தரிசனம் செய்ய வேண்டும்.

அவருக்கு அனைத்தும் தெரியும். எனவே கோரிக்கை வைக்கிறேன் என்ற பெயரில் அவரை தொந்தரவு தராதவாறு தரிசனம் மட்டும் செய்யுங்கள்.

கொடிமரத்திடம் மட்டுமே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும், அதுவும் வடக்கு பார்த்து, ஆண்கள் தம் உடலின் அனைத்து அங்கங்கள் படும்படியாகவும், பெண்கள் தங்கள் உடலின் மார்பு, வயிறு, யோனி பூமியில் படாமலும் வணங்க வேண்டும், (இவை புனிதமானவை மண்ணில்படக்கூடாது).

அடுத்து... நீங்கள் வெளியே செல்லும் போது மிருகங்கள் (நாய், பசு,காளை,ஆடு உட்பட) உங்களின் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம் செல்ல செல்லும் காரியம் வெற்றி, மாறாக இடமிருந்து வலம் சென்றால் தாமதம்.

பறவைகள் இடமிருந்து வலம் சென்றால் வெற்றி, மாறாக வலமிருந்து இடம்

சில சகுனங்களை உங்கள் அனுபவத்திலேயே அறிந்துகொள்ளுங்கள்.

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 7 Empty Re: ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்67

=====================================

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.