ராகு,கேது தோஷம், எனும் சர்ப்ப தோஷம்

இந்த தோஷம் என்ன செய்யும்?

திருமணத்தடை, சந்தான தோஷம் எனப்படும் புத்திர தோஷம், மன நிறைவான மணவாழ்க்கை அமையாமை முதலான பாதிப்புகளைத் தரும் என்பது ஜோதிடர்களின் கருத்து.

இது உண்மையா?

இப்படியான பாதிப்புகளை சர்ப்பங்கள் அதாவது ராகு,கேது தருமா?

உங்கள் ஜாதகத்திலோ அல்லது உங்கள் பிள்ளைகளின் ஜாதகத்திலோ தோஷம் இருந்து அதற்கு நீங்கள் பரிகாரம் செய்தால், அந்த தோஷம் நீங்கி, உங்கள் ஜாதகத்தில் தோஷம் தந்த கிரகங்கள் இடம் மாறி விடுமா? மாறாதுதானே!

பரிகாரம் என்பது தோஷத்தை நீக்குவதல்ல. அது தோஷத்தின் வீரியத்தைக் குறைப்பது அல்லது ஏற்பட்ட தடைகளை சிறிதளவேனும் தளர்த்துவது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தோஷம் என்பது நம் முன் வினைப் பயன். அதை நாம் எந்த வகையிலும் அனுபவித்தே தீரவேண்டும். அதை நாம் எந்த வகையிலும் மாற்றவே முடியாது என்பது நூறு சதவிகித உண்மை.

விதியை மதியால் வெல்லவே முடியாது.

சில தளர்வுகளை மட்டுமே ஏற்படுத்த முடியும்.

விதியை வெல்ல முடியும் என்றால் மக்கள் அனைவரும் சுபிட்சமாக வாழ்வை அமைத்துக்கொள்ள முடியுமே!

எனவே விதிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிட்டாலே நாம் விதியை வென்றவர் ஆகிவிடுவோம்.

ராகு, கேது என்பவர் யார்? அவர்கள் எதற்காக கிரகங்கள் பட்டியலில் வந்தார்கள்? அவர்களின் கடமை என்ன? என்னவிதமான பலன் அல்லது தாக்கத்தை தருவார்கள்?

விதி என்பது என்ன?

முன் ஜென்ம வினை, அந்த வினைகளை அனுபவிக்கவும், இந்தப் பிறப்பில், இனி பாவம் செய்யாமல் புண்ணியங்களைச் செய்வதாலும், பிறப்பற்ற மோட்சம் என்ற நிலையை அடைவது என்பதே நம் பிறப்பின் நோக்கம்.

இப்படி நாம் பெற்றோருக்கு நாம் பிறக்க, யார் காரணம்?

சூரியனா? இல்லை அவர் ஆன்மா என்னும் உயிர்ப்புள்ளி.

சந்திரனா? இல்லை.அவர் நம் மனம் மற்றும் உடல்.

செவ்வாயா? இல்லை.அவர் நம் உடலின் ரத்தம்.

புதனா? இல்லை.அவர் நம் அறிவு மற்றும் மேல்தோல்.

வியாழன் எனும் குரு பகவானா? இல்லை..அவர் புத்திர பாக்கியம் உண்டு என்கிற அருளைப் புரிபவர் மற்றும் நம் மூளை.

சுக்கிரனா?அவரும் இல்லை.அவர் உடலின் உள்ளே உள்ள சுரப்பிகள் மற்றும் சுக்கிலம் சுரோணிதம்.

அப்படியானால் சனிபகவானா? அவரும் இல்லை.அவர் நம் முன் ஜென்ம வினைகளின் அடிப்படையில், இந்த ஜென்மத்தில் நாம் என்ன அனுபவிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் நீதிபதி மற்றும் நம் உடலில் உள்ள இயங்கு மூட்டுக்கள்.

அப்படியானால் நாம் பிறக்க யார்தான் காரணம், சந்தேகமே இல்லை. ராகு கேதுக்கள்தான் காரணம்.

குழந்தை பிறக்க காதல் மட்டும் போதாது,

காமமும் வேண்டும், அந்தக் காமத்தின் அடிப்படை ஆண் மற்றும் பெண் ஜனன உறுப்புகள். இந்த உறுப்புகளில்

பெண்ணின் உறுப்பு ராகு

ஆணின் உறுப்பு கேது

1.   இந்த இரண்டும் இணையும்போதுதான், உயிர் எனும் ஜனனம் என்கிற பிறப்பு ஏற்படுகிறது.

2.   இந்த இணைவுக்குப் பின்தான் மேலே குறிப்பிட்ட மற்ற கிரகங்களின் உடல் வடிவம் உண்டாகிறது.

3.   இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.பிறப்பு என்பது யாரால் ஏற்படுகிறது என்று!

4.   இந்த உலகின் அத்தனை ஆசை, பேராசை,இன்பம் இந்த இச்சைகளால் உண்டாகும் துன்பம், துயரம், விரக்தி என அனைத்தும் ராகு, கேது எனும் இரண்டு பாம்புகளாலேயே உண்டாகிறது.

5.   கற்பொழுக்கம் கடவுளாகவே ஆகலாம் என்று ஒழுக்கம் குறித்துப் போதித்திருக்கிறார்கள்.

6.   இப்படி பல சுக சோகங்களுக்குக் காரணமான ராகு கேது உருவான கதையைப் பார்ப்போம்,

7.   உருவான கதை என்றால்.?

8.   அவர்கள் பிறக்கும்போது ஒரே உடல்,ஒரே உயிராகத்தான் பிறந்தார்கள்,

9.   பின்னாளில் இரண்டு உடல் இரண்டு உயிர் எனப் பிரிக்கப்பட்டார்கள்,

10. சப்தரிஷிகளில் ஒருவரான மரீசியின் புதல்வர் காசியபர் ரிஷி. இவருக்கு 13 மனைவியர். இவர்களில் அதிதிக்குப் பிறந்தவர் சூரியபகவான். (இந்திரன் முதலான தேவர்களுக்கும் இவர்களே பெற்றோர்).

11. அதிதியின் சகோதரி திதிக்கும் காசியபருக்கும் பிறந்தவர்கள் அசுரர்கள், அந்த அசுரர்களில் ஒருவர்தான் சுபர்பானு. சுவர்பானு என்றும் சொல்கிறது புராணம்.

12. இந்த சுபர்பானுதான் ராகு கேது என்றானார். அவர் எப்படி ராகு கேது ஆனார்?

13. அத்தனைக்கும் ராகுகேதுதான் காரணமா?

14. அசுர குருவான சுக்ராச்சார்யர், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் வித்தை அறிந்தவர். தேவகுருவுக்கு அந்த ரகசியம் தெரியவில்லை

15. எனவே தேவர்கள் திருப்பாற்கடலைக்கடைந்து அழிவைத் தராத அமிர்தத்தை எடுத்த கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

16. அதில் சுபர்பானு, தேவர்கள் வரிசையில் நின்று அமுதம் உண்டதும் , மகாவிஷ்ணு அந்த அசுரனை இரு கூறாக்கியதும், இதைக் காட்டிக்கொடுத்தவர்கள் சூரியன்,சந்திரன் என்பதும் நாம் அறிந்ததுதான் இல்லையா?

17. அப்படி இரு கூறானவர்களே, இரண்டு கூறுகளாக இருந்தவர்களே ராகு மற்றும் கேது.

18. இவர்கள் பரமாத்மாவிடம் கேட்ட வரம் என்ன தெரியுமா?

19. சூரியனையும் சந்திரனையும் ஒரு நாழிகை விழுங்கும் அதிகாரம் வேண்டும். மேலும் கிரக அந்தஸ்தும் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். வரம் கேட்டனர்.

20. பரமாத்மாவும் அப்படியே ஆகட்டும் என்று வரமருளினார்.

21. ஆனால் கலியுகம் முதற்கொண்டே உங்கள் ஆதிக்கம் ஆரம்பிக்கும் என்று வரமருளினார்.

22. இந்த அரவுகளின் அதாவது ராகு கேதுக்களின் ஆதிக்கத்தினாலேயே இந்தக் கலியுகத்தில் தர்மம் குறைந்து அதர்மம் தலைவிரித்தாடுகிறது.

23. சரி, இதெல்லாம் என்ன கதை? ஆதாரம் உள்ளதா என்ன ஆதாரம் என்றெல்லாம் சிலர் கேட்கலாம்.

24. அவர்களுக்காக.அறிவியல் சார்ந்த விளக்கம் பார்ப்போமா?

25. பூமி சூரியனைச் சுற்றி வருகிறது, சந்திரன் பூமியைச் சுற்றி வருகிறது

26. இந்த இரண்டு சுற்றுப் பாதைகளும் வெட்டிக்கொள்ளும் புள்ளிகளே ராகு கேது ஆகும்.

27. இந்த வட்டப் பாதைகள் கண்ணுக்குத் தெரியாது, அதுபோல ராகு கேது கிரகங்களாகத் தெரியாது, ஏனெனில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்பதைப் பார்த்தோம் இல்லையா?

28. ஆனால் அவர்களின் தாக்கம் அபரிமிதமானது. சக்தி வாய்ந்தது.

29. ராகு வடபுலத்தையும், கேது தென்புலத்தையும் கொண்டவர்கள். இவர்களைப் பற்றி இன்னும் விரிவாக எழுத வேண்டும் என்றால் ஒரு பெரிய புத்தகமே எழுத வேண்டிவரும்,

நாம் இப்போது தோஷ விபரங்களுக்குப் போகலாம்.

ராகு பெரியபெரிய ஆசைகள் கொண்ட கிரகம். இதுவே குணம்.

கேது எதையும் எதிர்பார்க்காத மனப்பான்மை கொண்ட குணம்.

ராகு கேது தோஷம் என்பது திருமணத்தடையல்ல, தாமதம் என்பதே சரி.

அப்படியானால் தாமதம் என்பதும் தோஷம்தானே? என்று பலரும் கேட்கலாம்,

அப்படியல்ல, சரியான ஜோடி அமையும் வரை காத்திருப்பு என்பதே சரி.

அதற்குமுன் ஜாதகத்தில் ராகு கேது எங்கிருந்தால் தோஷம் தருகிறது என்பதைப் பார்க்கலாம்.

செவ்வாய் தோஷம் லக்னம் மற்றும் ராசி இரண்டுக்கும் பார்க்கப்படும் என்பதை மறந்திருக்க மாட்டீர்கள்.

சர்ப்பதோஷம் எனும் ராகு கேது தோஷம் லக்னத்திற்க்கு மட்டுமே பார்க்கப்படுகிறது என்பதை மறந்துவிடாதீர்கள். லக்னம் என்னும் 1 ஆம் இடம், குடும்ப ஸ்தானம் என்னும் 2ம் இடம், களத்திரம் என்னும் 7ம் இடம், ஆயுள் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் என்னும் 8ம் இடம், மற்றும் புத்திர ஸ்தானம் என்னும் 5ம் இடம் ஆகிய இடங்களில் ராகுவோ கேதுவோ இருந்தால் அது சர்ப்ப தோஷம் என்னும் ராகுகேது தோஷம் என்று சொல்லப்படுகிறது.

லக்னத்தில் ராகு இருந்தால்:- ஜாதகரின் எண்ணம், ஆசை, எதிர்பார்ப்பு , தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் முதலானவை இருக்கும்

2ல் ராகு இருந்தால்:- இந்த இரண்டாமிடம் தனவரவு, வசதி, வாய்ப்புகளைக் காட்டும். எனவே இங்கு ராகு இருந்தால், பொருளாதாரம் சார்ந்த ஆசைகளையும், அந்த ஆசைகள் நிறைவேற எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத மனநிலையை தரும், இந்த மனநிலையைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

7ல் ராகு இருந்தால்:- களத்திர சுகம் மற்றும் கட்டுப்பாடற்ற சுதந்திர மனபோக்கு தரும். எனவே தாம்பத்திய வீரியத்தைக் காட்டும் இடம் என்பதாலும், அதில் ராகு இருக்க வீரியத்தை இன்னும் அதிகமாக்கும் என்பதாலும் இந்த இடம் தோஷமாகிறது.

8ல் ராகு இருந்தால்:- இது மாங்கல்ய ஸ்தானம் என்றும் ஆயுள் ஸ்தானம் என்றும் பார்க்கப்படுகிறது எனவே தோஷமாக பார்க்கப்படுகிறது.

5ல் ராகு இருந்தால்:- இது புத்திர ஸ்தானம். எனவே புத்திர பாக்யம் இல்லாமல் செய்துவிடும் என கருதப்படுகிறது.

ராகு கிழக்குன்னா கேது மேற்கு!

கேது எதையெல்லாம் வேண்டாம் என ஒதுக்கி விடுகிறாரோ, அதையெல்லாம் ராகு பெற்றுக்கொள்வார்.

எப்படி? கேதுவுக்கு பணம் பொருட்டல்ல.

ராகுவுக்கு பணம் அதீதமாக தேவை,

கேதுவுக்கு சுகபோகங்கள் தேவையில்லை,

ராகுவுக்கு சுகபோகங்களுக்கு வானமே எல்லை,

கேது எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவர்.

ராகு பகவான், அவர் விரும்பியதை மட்டுமே ஏற்றுக்கொள்வார்.

கேது பகவானின் தோஷ பலன்களைப் பார்ப்போம்.

லக்னத்தில் கேது இருந்தால்:- பெரிய ஆசைகள் இல்லாதவர், இருப்பதை கொண்டு திருப்தி அடைபவர்.

2ல் கேது இருந்தால்:- பொருளாதார ஆசை இல்லாதவர், விருப்பங்கள் ஏதும் இல்லாதவர்.

7ல் கேது இருந்தால்:- தாம்பத்ய ஈடுபாடு, நாட்டம் இல்லாதவர்.

8ல் கேது இருந்தால்:- தன் ஆயுளை தானே எப்படிக் குறைப்பது என்று தேடி குறைத்துக் கொள்பவர்.

5ல் கேது இருந்தால்:- புத்திர பாக்கியத்தில் தடை ஏற்படுத்துபவர். காரணம்? சுகபோக ஆசையே இல்லாதவர் எப்படி பிள்ளைச் செல்வத்தை ஏற்படுத்துவார்.

ராகு கேது தோஷம் உள்ளவர்களை, இதே அமைப்பில் உள்ளவர்களைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்பது ஜோதிடர்களால் பரிந்துரைக்கப்படுகிறதே

7 ல் உள்ள ராகு தாம்பத்ய வேட்கை அதிகம் உள்ளவர் என பார்த்தோம்.

7 ல் உள்ள கேது தாம்பத்ய ஈடுபாடே இல்லாதவர் அல்லது குறைவான ஈடுபாடு உள்ளவர்.

இப்போது சொல்லுங்கள் இந்த இரண்டு அமைப்பையும் உடையவர்களை இணைந்தால் வாழ்வு சிறக்குமா?

உண்மையில் இந்த ராகு கேது தோஷத்தை இப்போது சில வருடங்களாகத்தான் பெரிதும் பார்க்கப்படுகிறது அல்லது பார்க்கச் செய்யப்படுகிறது.

சர்ப்பதோஷம் இருக்கும் ஒருவர், தோஷம் இல்லாதவரைத் திருமணம் செய்து சிறப்பான வாழ்க்கை வாழ்ந்துவருபவர்கள் ஏராளம் உண்டு.

ஏன் உங்களில் திருமணம் நடந்த பலபேர், குறிப்பாக 40 - 50 வயதுகளில் உள்ளவர்கள் இப்போது உங்கள் ஜாதகத்தை எடுத்துப்பாருங்கள். உங்களில் நிறைய பேருக்கு இந்த சர்ப்பதோஷம் என்னும் ராகுகேது தோஷம் இருக்கும். ஆனாலும் நல்ல இனிமையான வாழ்க்கையே வாழ்ந்து வருவார்கள்.

இப்போது இதே ஜோதிடம்தான் வேறொரு விளக்கத்தையும் மாற்றையும் கூறுகிறது.

அதையும் பார்ப்போம்.

5ல் ராகுவோ, கேதுவோ உள்ளவர்களுக்கு 5ல் ராகுவோ கேதுவோ இல்லாத ஜாதகத்தைதான் சேர்க்கவேண்டும் என்கிற போது விதி உள்ளது,

அப்படியானால் 1,2,7,8ல் ராகு கேது உள்ளவர்களை அதே அமைப்பைக் கொண்ட ஜாதகத்தோடு இணைப்பது என்பது எப்படி சரியாகும்?

பொதுவிதி என்பது அனைத்திற்கும் ஒரே மாதிரிதான் பொருந்த வேண்டும் அல்லவா!

ஆனால் ஏன் இந்த மாறுபாடு?

ஒன்றும் இல்லை, பணம்.பணம்.பணம்தான் காரணம்,

தோஷ பரிகாரம் பொய்யா?

ராகு கேது தோஷ விபரங்களைப் பார்த்தோம். இப்போது தோஷம் வேலை செய்யுமா, செய்யாதா? என்பதையெல்லாம் பார்ப்போம்.

ராகுவும் கேதுவும் உலக இயக்கம் என்னும் பிறப்பு மற்றும் பிறப்பின் பயனால், பிறப்பற்ற மோட்சம் எனும் உயர்நிலை என இவற்றைத் தருவதே சர்ப்பங்களின் வேலை.

அதனால்தான் யோக முத்திரைகளிலும் மருத்துவ முத்திரைகளிலும், சர்ப்பங்கள் இடம் பெறுகின்றன.

வாசி யோகத்தில் அதாவது சுவாசத்தில்.மூச்சை உள் இழுத்தல் ராகு, அதாவது வாழவேண்டும் என்ற ஆசையை உண்டாக்குவது.

மூச்சுக் காற்றை வெளியிடுவது கேது, அதாவது வாழும் ஆசையை போதும் என வலியுறுத்துவது கேது. ஆக, மூச்சை உள்ளிழுப்பது ராகு. மூச்சை வெளியே விடுவது கேது.

இந்த இரண்டையும் சமப் படுத்துவது யோகக் கலை.

குண்டலினி தத்துவமும் இதுதான். இப்படித்தான் வரையறுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

வாழ்வதற்கான ஆதாரமான ராகு கேதுக்கள் எப்படி தோஷத்தைத் தருவார்கள்,

சர்ப்ப தோஷ பரிகாரம் என்பது சமீபகாலத்தில் உருவானது.

எனவே திருமணப் பொருத்தத்தில் தோஷங்களைப் பார்க்கவே வேண்டாம் என்பதை உறுதியாகவே சொல்கிறேன்.

5 ம் இட தோஷ விபரங்களை மட்டும் இப்போது பார்ப்போம்

5ல் ராகு தோஷமா?அளவற்ற ஆண் குழந்தைகள் பிறக்கும்.

5ல் கேது குழந்தை உண்டு. ஆனால் ஆரோக்கியப் பாதிப்பு உள்ள குழந்தை அல்லது ஆரோக்கியமாக இருந்தாலும் பிற்காலத்தில் பெற்றோரைப் பிரிந்து தனிமையை ஏற்படுத்தும் குழந்தை என்கிற நிலை உண்டாகும்.

என் அனுபவத்தில் இங்கே ஒன்றைச் சொல்கிறேன். சுமார் 30 வருடங்களுக்கு முன் காளஹஸ்தி கோயிலுக்குச் செல்லும் போது அங்கே ராகு கேது பரிகாரம் என்று பெரிய அளவில் நடந்து பார்த்ததேயில்லை.

தற்போது பெரிய அளவில், ஒரே நாளில், ஒரே சமயத்தில் சுமார் 100 முதல் 200 பேர் அமர்ந்து பரிகாரங்கள் செய்யப்படுகின்றன.

மீண்டும் மீண்டும் கூறுகிறேன். எந்த பரிகாரம் செய்தாலும் தோஷம் விலகாது. தோஷம் தோஷம்தான்! அதை அனுபவித்தே தீரவேண்டும்

அப்படியெனில்.தோஷம் பாதிக்குமா? என்ற கேள்விக்கு என்னுடைய பதில். ஆமாம், பாதிக்கும். அதை அனுபவித்துதான் தீரவேண்டும்.

ஒவ்வொருவரும் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை சந்தித்துகொண்டுதான் இருக்கிறோம்,

அதெல்லாம் நாம் நினைப்பதுபோல் ஒரு நிகழ்வு என்றே கடந்துவிடுகிறோம்.

உண்மையில் அனைத்தும் கிரகங்களின் ஆளுமையே என்பதை மனதில் கொள்ளுங்கள்.

இன்று நீங்கள் உடுத்தும் உடை, உண்ணும் உணவு, சந்திக்கும் விஷயங்கள், பிரச்சினைகள் என அனைத்தும் கிரகங்களே தீர்மானிக்கின்றன.

யோசித்து பாருங்கள்.பாக்கெட் நிறைய பணம் இருந்தும், பசியில் இருந்திருப்பீர்கள்.

வீட்டில் இருந்து உணவு கொண்டு சென்றாலும் உண்ண முடியாத நிலையும் வந்திருக்கும்.

இவை அனைத்தும் கிரகங்களின் வேலைகளே!

தோஷத்தை கண்டு பயப்படாமல், அதனுடன் சேர்ந்து பயணிப்பதே நம் வாழ்வைச் சிறப்பாக்கும். செழிப்பாக்கும்!

ஒன்றை தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.

தோஷம் என்பது தோஷம்தான். ஆனால் இந்தத் தோஷத்தில் இருந்து முற்றிலுமாக விலகிவிடலாம் என்று சொல்கிற, செய்யச் சொல்கிற பரிகாரங்களால் ஏதும் நிகழப்போவதில்லை என்பதை உணருங்கள்.

மிகப்பெரிய ஹோமங்களோ பரிகாரங்களோ செய்துதான் தோஷ நிவர்த்தியாகவேண்டும் என்றில்லை. எல்லாப் பரிகாரங்களும் பூஜைகளும் தோஷங்களின் தாக்கத்தைக் குறைக்க உதவும் என்பதே உண்மை.

தினமும் வீட்டில் காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். பூஜையறையில் ஒருபத்துநிமிடமேனும் அமர்ந்து ஆழ்ந்த ஈடுபாட்டுடன் பிரார்த்தனை செய்யுங்கள். சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுங்கள். சொல்லப்போனால், ஆலயங்களுக்குச் சென்று தரிசித்து வழிபடுகிற சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

வழிபாடுகளும் தரிசனங்களும் பிரார்த்தனைகளும் தோஷங்களின் தாக்கத்தை வெகுவாகக் குறைத்துவிடும் சேமிப்பே பிரார்த்தனை, வழிபாடு என்பதை மறக்காதீர்கள்.

ராகு கேதுவைக் கண்டு பயப்படாதீர்கள். அவர்கள்தான் நம் மூச்சுக் காற்று என உணர்ந்தால், எல்லாம் நன்மையே.எல்லாம் நன்மைக்கே என்று கூறியிருந்தேன்.

தோஷங்களை அனுபவிக்க வேண்டும், பரிகாரம் செய்து தோஷ வீரியத்தை குறைத்துக்கொள்ளலாம் என்று நான் பதிவிட்டது நிறைய பேருக்கு குழப்பத்தைத் தந்திருக்கும்.

இதில் குழப்பம் வேண்டாம். கலவரப்படத் தேவையில்லை.

திருமணப் பொருத்தம் பார்க்கும் போது இந்த தோஷங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என்பதே என்னுடைய கருத்து. இதையே ஜோதிட சாஸ்திரமும் வலியுறுத்துகிறது

மற்றபடி, நம் வாழ்க்கையில் ஏற்படும் இடர்பாடுகளுக்கு, தோஷ விபரங்களைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற பரிகாரங்களைச் செய்து வந்தால், தோஷ வீரியத்தைக் குறைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.

திருமணம் நடைபெற பரிகாரங்கள் என்ற பெயரில் பெருமளவு பணத்தை வீண்டிக்காதீர்கள் என்பதே எனது வேண்டுகோள்.

ஆலயத்தில் ஏற்றப்படும் ஒரு விளக்கு, உங்கள் வாழ்விலே ஒளி வீசும், வழிகாட்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

முடிந்தவரை அன்னதானம் செய்யுங்கள். எத்தனையோ தானங்களை வாரிவாரிக் கொடுத்திருந்தாலும் கர்ணன் அன்னதானம் செய்யவில்லையே.என்று பின்னாளில் வருத்தப்பட்டதும் அந்தப் பெரும்பலன், தனக்குக் கிடைக்கவில்லையே என்று நொந்துகொண்டதும் புராணம் கூறும் உண்மை. ஆகவே, அன்னதானத்தைப் போல மிக உன்னதமான தானம் ஏதுமில்லை என்பதை மறக்காதீர்கள்.

வசதி இருப்பின் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். இன்னும் முடிந்தால், திருமணத்தையே நடத்திக் கொடுக்கலாம்!

கட்டில், மெத்தை என தானம் தருவது உங்கள் பிள்ளைகளின் திருமணத்தையும், திருமணத்திற்குப் பின் மகிழ்ச்சியான வாழ்க்கையையும் அமைத்துக் கொடுக்கும். சந்தான விருத்தி எனப்படும் குழந்தை பாக்கியத்தை விரைவில் தரும்.

தோஷம் தரும் வீடு எதுவோ, அதன் பஞ்சபூதத் தன்மைக்கு ஏற்றார் போல் தானம் வழங்குங்கள். நிச்சயம் நல்ல பலனைத் தரும்.

ராசிகளின் பஞ்சபூதத் தன்மை குறித்த விவரங்களை முன்பே சொல்லியிருக்கிறேன். ஆனாலும் மீண்டும் ஒருமுறை பார்த்துவிடுவோமா?

மேஷம், சிம்மம், தனுசு — நெருப்பு,

ஆலயங்களில் விளக்கேற்றுதல், அல்லது விளக்கேற்ற எண்ணெய் தானம் தருவது மிகவும் விசேஷமானது.

கோதுமை, மிளகு முதலான தானியங்களில் செய்த உணவை தானமாக வழங்குங்கள்.

வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு மிகவும் சக்திவாய்ந்தது. அல்லது வெள்ளெருக்கு விநாயகரை யாருக்கேனும் தானமாக வழங்குவது அதைவிட புண்ணியம்!

ரிஷபம், கன்னி, மகரம் — நிலம்

ஆலயங்களுக்கு தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் தானம் தருவது சிறப்பு. முக்கியமாக கும்பாபிஷேகத்தின் போது தானம் வழங்குங்கள்.

மரம் நடுதலும் அவற்றை தண்ணீரும் உரமும் இட்டுப் பராமரிப்பதும் தோஷங்களை விலக்கும் மாமருந்து. அதேபோல், விலங்குகளை பராமரித்தலும் தோஷங்களை நிவர்த்தி செய்யும். எப்போதெல்லாம் முடிகிறதோ.அன்னதானம் செய்துகொண்டே இருங்கள்!

மிதுனம், துலாம், கும்பம் —- காற்று

தெரிந்த மந்திரங்களைச் சொல்லி வழிபாடு செய்யுங்கள். தியானப் பயிற்சியில் ஈடுபடுங்கள். வீட்டில் வாயு மூலை கெடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதாவது வாயுமூலையில், காற்றானது வீட்டுக்குள் வந்துசெல்லும்படி கதவோ ஜன்னலோ இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அதேபோல், வீட்டு ஹாலில் சரம் போலான அமைப்பு கொண்ட, அழகிய வேலைப்பாடு கொண்ட மணியைத் தொங்கவிடுவது நல்லது. காற்றானது அதில் பட்டு, மெல்ல ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும். மனதுக்கு இதமும் அமைதியும் தரும் அந்த ஒலியும் காற்றும் சேர்ந்து தோஷங்களையெல்லாம் விரட்டிவிடும்.

மாணவர்களுக்கு பென்சில், பேனா, நோட்டு புத்தகங்கள் வழங்குதல், ஏழைகளின் கல்விக்கு உதவுங்கள். முடிந்தால் அவர்களின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்ளுதல் நன்மை தரும்.

கடகம், விருச்சிகம், மீனம் — நீர்

அபிஷேகப் பொருட்களை அதாவது பன்னீர், இளநீர், சந்தனம், திரவியப்பொடி முதலானவற்றை ஆலயங்களுக்கு வழங்குங்கள். கோடைகாலங்களில் தண்ணீர் பந்தல் அமைப்பதற்கு உதவுங்கள். முடிந்தால், தனியாகவே தண்ணீர்ப் பந்தல் அமையுங்கள்.வசதிகள் இருப்பின் ஏரி, குளம் தூர்வாருவதற்கு உதவுங்கள். ர உதவி செய்தல் இவையெல்லாம் உங்கள் தோஷத்தின் வீரியத்தைக் குறைக்கும். சந்தோஷத்தைப் பெருக்கும்!

வாழை மரத்துக்கு தாலி கட்டினால் தோஷம் போய்விடுமா?

ஒருவருக்கு இரு தாரம் எனும் தோஷம் இருக்கிறது.

இரு தார தோஷம் என்றால் என்ன?

மூன்று வகையாக இதைச் சொல்லலாம்.

முதலாவது.துணை (கணவன் அல்லது மனைவி) இறந்து போக, இன்னொருவரை மணம் புரிவது! அதாவது இரண்டாவதாகத் திருமணம் செய்வது!

இரண்டாவது.விவாகரத்து பெற்று, அடுத்து வேறொருவரை மணம் புரிவது!

மூன்றாவது.கணவன் அல்லது மனைவிக்குத் தெரியாமல், ரகசியமாக இன்னொரு துணையை தேடிக் கொள்வது.

இதையெல்லாம் ஒட்டுமொத்தமாக, இரு தார தோஷம் என்று சொல்கிறார்கள். இந்த தோஷத்துக்குப் பரிகாரம் உண்டென்றும் சொல்கிறார்கள். இதுதான் பரிகாரம் என்றும் சொல்கிறார்கள்.

என்ன செய்வது? அவருக்கு இரண்டு திருமணம் செய்விக்க முடியுமா? நடைமுறைக்கு சாத்தியமா? சட்டம்தான் ஏற்றுக்கொள்ளுமா?

இந்தப் பரிகாரங்கள் குறித்துதான் கேள்விகள் இருக்கின்றன.

வாழை மரத்துக்கு தாலி கட்டிவிட்டு, அதை வெட்டிச் சாய்த்துவிட்டால், தோஷம் போய்விடும் என்கிறார்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள். சிலர் பார்த்திருக்கவும் செய்யலாம். இன்னும் ஒரு சிலர்.அந்தப் பரிகாரத்தைக் கூட செய்திருக்கலாம்!

ஆனால் நடப்பதென்ன? பரிகாரம் செய்பவர்.ஒரு வாழை மரத்தை வெட்டி கொண்டுவந்திருப்பார். அந்த வாழை மரத்துக்கு தாலிகட்டி அந்த வாழைமரத்தை வெட்டி விடுவார், பரிகாரம் முடிந்தது. அப்படித்தானே!

ஏற்கெனவே வெட்டப்பட்ட மரம் எப்படி உயிரோடு இருக்கும்?

ஏற்கெனவே வெட்டப்பட்ட மரம் எனில், அது இறந்த மரம்தானே?

இறந்த மரத்திற்கா தாலி கட்டினார்? இறந்த மரத்தை மீண்டும் வெட்டி என்ன பயன்?

நான் இங்கே அபசகுன வார்த்தை பிரயோகிப்பதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

ஆனாலும் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டியிருக்கிறது.

எனக்கு தெரிந்து.வாழைத்தோப்பில் வைத்து குலை தள்ளாத மரத்திற்கு தாலி கட்டி, அதை வெட்டினால் தோஷம் நீங்கும் என்பதை எடுத்துக்கொள்ளலாம்,

அது என்ன குலை தள்ளாத மரம்? என நீங்கள் கேட்பது புரிகிறது, அதாவது குலை தள்ளாத மரம் கன்னிக்கு ஒப்பானது! கன்னித் தன்மைக்கு நிகரானது!

ஆனால் இதுவும் தவறுதான், இதனால் இரு தார தோஷம் நீங்கிவிடாது,

ஒரு பெண்ணின் பெற்றோர் தங்கள் பெண்ணுக்கு திருமணம் தடை பெற்றுக்கொண்டே இருக்கிறது என்றும், மகளுக்கு இரு தார தோஷம் இருப்பதாக ஒரு ஜோதிடர் சொன்னதால், அவரின் வழிகாட்டுதல் படி இந்த வாழைமர பரிகாரம் செய்ததாகவும் சொன்னார்கள்.

நான் வாயடைத்துப் போனேன், ஆணுக்கு இந்த பரிகாரத்தை பரிந்துரைப்பது போய், பெண்களுக்கும் இந்தப் பரிகாரத்தை வழிமொழியும் ஜோதிடர்களை என்னவென்று சொல்வது?

ஜோதிடம் என்பதே ஒருவரின் காலநிலையை அறியும் கலை. அவர் யார்? எப்படிப்பட்டவர்? அவருடைய எதிர்காலம் என்ன? அவர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? செழிப்பான வாழ்வா? போராட்ட வாழ்வா?

என காட்டும் மாயக்கண்ணாடிதான் ஜோதிடம்!

எனவே ஜோதிடம் என்பது வருவதை அறிந்து கொள்ளும் அற்புதக் கலையே தவிர, நாம் எதிர்கொள்ள இருக்கும் எதையும் மாற்றித் தரக்கூடியதல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த இரு தார தோஷத்திற்கு என்னதான் வழி? பரிகாரம் இருக்கிறதா?

எளிமையான பரிகாரம்தான்.

திருச்செங்கோடு நகரில் அமைந்துள்ள அர்த்ததாரீஸ்வரர் ஆலயத்திற்கு வருடாவருடம் செல்வதும், அந்த சிவசக்தி சொரூபப் படத்தை வைத்து வழிபடுவதும் சிறப்பு வாய்ந்தது.

ஸ்ரீராமபிரான் பட்டாபிஷேகத் திருவுருவப் படத்தை வைத்து வழிபடுவதும் இரு தார தோஷ நிவர்த்தியாகும்!

திருமலை வேங்கடவன் ஶ்ரீநிவாசப் பெருமாளை வருடாவருடம் தரிசிப்பதும் நல்ல பலனைத்தரும்.

இங்கே நன்றாக கவனியுங்கள்.

ஏதோ ஜோதிடர் கூறினார் என்பதற்காக ஒரே முறை ஆலய தரிசனம் செய்துவிட்டு தன் தோஷத்திற்குப் பரிகாரம் நடந்துவிட்டதாக நிறையபேர் நம்பிக்கொண்டிருக்கின்றனர். இது தவறு. அந்த ஆலய தரிசன பரிகாரம் வருடத்திற்கு ஒருமுறை அல்லது நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்றுவரவேண்டும்.

உதாரணமாக ராகு கேது தோஷத்திற்கு திருக்காளத்தி சென்று வந்தாலே, அதாவது காளஹஸ்தி சென்று வந்தாலே பரிகாரம் ஆகிவிடாது. ஆறுமாதங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாகச் சென்று வரவேண்டும் மற்றும் அருகில் உள்ள புற்றுக்கோயிலுக்கு வாராவாரம் சென்று வரவேண்டும்.

இது போன்ற பரிகாரங்களை விடுத்து, சிறிதும் நடைமுறைக்கு ஒப்பாத, விஷமத்தன பரிகாரங்களை செய்து உங்கள் பணத்தையும் நிம்மதியையும் கெடுத்துக்கொள்ளாதீர்கள்.

திருமணப் பொருத்தத்தில் எது முக்கியம்?

இரு தாரமோ ஒரு தாரமோ எந்த தோஷமாக இருந்தாலும் அந்தத் தோஷங்களைத் தாண்டி நமக்கெல்லாம் தேவை.சந்தோஷம்தான்! அந்த சந்தோஷம்.மன அமைதியில் இருந்து கிடைக்கிறது. மன அமைதி என்பது, தெய்வ வழிபாட்டின் மூலமே நமக்குக் கிடைக்கும். ஆகவே, தெய்வ வழிபாட்டைத் தொடர்ந்து கொண்டே இருங்கள்.

இரு தார தோஷங்கள் பற்றிப் பார்ப்போம்.

இது முதல் வகை தோஷமான களத்திர இறப்பும் அதனால் ஏற்படும் மறுமணம் என்னும் தோஷ விபரங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

திருமணப் பொருத்தத்தின் போது, பொதுவாக ஜோதிடர்கள் வெறுமனே பொருத்தம் மட்டும் பார்ப்பார்கள் என நினைக்க வேண்டாம்.

ஒரு ஜாதகத்தைப் பார்க்கும் போது முதலில் கவனிக்கப்படவேண்டியதும் கணிக்கப்பட வேண்டியதும் என்ன தெரியுமா? ஜாதகத்தில் என்ன தசாபுத்தி நடக்கிறது என்பதும், ஆயுள் ஸ்தானமும், அதன் அதிபதி நிலையும், திரேக்கணம் என்கிற ராசிக் கட்டத்தையும் தான் பார்ப்பார்கள்.

அதாவது ஆண், பெண் இருவர் ஜாதகத்திலும் மேலே சொன்ன அமைப்புகளை ஆராய்ந்த பிறகே பொருத்தம் பார்க்கப்பட வேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

அதாவது ஆயுளுக்கு பங்கம் இருக்கிறதா என்பதே முதல் கேள்வி. ஆகவே, ஆயுளுக்கு பங்கம் இல்லை என்றால்தான் மற்ற விஷயங்கள் பார்க்கப்பட வேண்டும்,

எத்தனை ஜோதிடர்கள் இதை கடைபிடிக்கிறார்கள்.எத்தனை ஜோதிடர்களை இவற்றையெல்லாம் கடைப்பிடிக்க வைக்கிறோம் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

அதிகம்பேர் வெறும் நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே பார்க்கிறார்கள். இந்த நட்சத்திரப் பொருத்தத்தைக் கொண்டே திருமணம் செய்யலாம் என்று சொல்லிவிடுகிறார்கள்.

திருமணம் அப்படியில்லைதானே! கல்யாணம் ஆயிரங்காலத்துப் பயிர் என்பது சத்திய வார்த்தை அல்லவா! வாழையடி வாழையென சந்ததி வளர்க்கிற ஆயுள் பரியந்த உறவு அல்லவா.. கணவன் மனைவி பந்தம்!

அப்படியிருக்க, ஆயுள் பரியந்தமான உறவுக்குள் நுழைவதற்கு முன்னதாக, ஆயுள் குறித்த விஷயத்தைப் பார்ப்பதுதானே சரியாக இருக்கும். இருக்கிறது என்று தெரிந்த பிறகுதானே அடுத்தடுத்த பொருத்தங்கள் பார்ப்பது முறையாக இருக்கும்.

உண்மையில், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் குறைந்தது 17 நட்சத்திரங்கள் பொருந்தும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஜோதிட வல்லுநர்களும் இதையே வலியுறுத்துகிறார்கள். அறிவுறுத்தி உள்ளார்கள். அப்படி இருக்க வெறும் நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே போதுமா? போதுமானதா?

ஜாதக ரீதியான பொருத்தம் பார்த்து, ஆயுளைக் கணித்து, மாரக திசை கவனித்து, அதன் பிறகே நட்சத்திரப்பொருத்தம் என்கிற தசவித பொருத்தத்தைப் பார்க்க வேண்டும்.

ஜோதிடத்திலும் ஜாதகத்திலும் ஜாதகப் பொருத்தங்களிலும் வேகமாக இருக்க வேண்டாமே! கொஞ்சம் ஆழ்ந்து நிதானித்து கூர்ந்து அலசி ஆராய்வதே உத்தமம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்!

எங்கெங்கயோ அலைஞ்சாச்சு. போகாத கோயில் இல்லை; பாக்காத பொண்ணு இல்லை. எப்படியாவது பிள்ளைக்கு திருமணம் நடந்தால் போதும். இனியும் நம்மால் அலைய முடியாது என்று ஒருவித அயர்ச்சியில் முடிவெடுக்கிறோம். இது சரியா? சரியாகுமா?

இன்னொரு விஷயம்.

அப்படிப்பட்ட திருமணங்களே இன்று நீதிமன்றத்திலும், இணைய முடியாமல் வீட்டிலும் என மனக்காயங்களுடன் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள் பலரும்! மனமொத்து வாழ்வதுதான் வாழ்க்கை. ஆனால் மனமொத்துப் பிரிகிறார்கள் என்பது வேதனையான் ஒன்றல்லவா!

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? சும்மா (சுமையில்லாமல் இருத்தல்) இருந்தாலே போதும்.

அதெப்படி சும்மா இருந்தால் திருமணம் நடக்குமா?

நடக்கும். நடந்தே தீரும். கல்யாணத்துக்கு மொய் செய்யச் சென்றவர், மாப்பிள்ளை ஆன கதைகள் நம்மூரில் நிறையவே உண்டு.

அது போலத்தான் கங்கணம் எனும் கல்யாண நேரம் வந்து விட்டால் , தானே திருமணத்தை தரும். திருமணம் இனிதே நடந்தே தீரும்.அதைவிடுத்து அலையோ அலையென்று நீங்கள் எவ்வளவு அலைந்தாலும், நடக்கும்போதுதான் நடக்கும் என்பது சத்தியம்!

இருதார தோஷம் இருக்கா? இல்லையா? இருந்தா என்ன செய்யணும்? என்ன பரிகாரம் செய்யணும்?

உங்களுக்கோ அல்லது உங்கள் பிள்ளைகளுக்கோ இருதார தோஷம் இருந்தால், உங்கள் வருங்கால மாப்பிள்ளை அல்லது மருமகள் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் மற்றும் 11 ம் இடம் பார்த்து மணம் செய்வதே பரிகாரம். இதுவே முதலும் முடிவும் முழுமையான பரிகாரம்! அப்படியொரு பரிகாரமே ஆகச் சிறந்தது. ஒரே வழி; நேர்வழி என்பார்களே. அது இதுதான்.இப்படித்தான்!

வேறு எந்த பரிகாரமும் வேலை செய்யாது என்பதே உண்மை.

ஆகவே அன்பர்களே! ஜாதகப் பொருத்தமே முக்கியம். மிக மிக முக்கியம். மிக மிக மிக முக்கியம்!

திருமணம் சீக்கிரமே நடக்க எளிய பரிகாரங்கள்!

பெண்களுக்கு திருமணம் நடக்கவும், நல்ல துணை அமையவும் “ ஆண்டாள் அருளிய திருப்பாவை தினமும் காலை, மாலை இரு வேளையும் படித்து வர நல்ல கணவன் அமைவார். அதாவது காலையிலும் மாலையிலும் வீட்டில் விளக்கேற்றுங்கள். திருப்பாவை பாராயணம் செய்யுங்கள். முடிந்ததும் ஆண்டாளுக்கு, அம்பாளுக்கு, மகாலக்ஷ்மிக்கு தீபாராதனை காட்டி பூஜை செய்யுங்கள்.

ஆண்கள் தினமும் அபிராமி அந்தாதி படியுங்கள். மனமொருமித்து அபிராமி அந்தாதி பாடி, சிவ பார்வதியை ஆத்மார்த்தமாகப் பிரார்த்தனை செய்யுங்கள். நல்ல பெண் வாழ்க்கை துணையாக அமைவார். மனைவி என்பவளே உங்களுக்கு வரமாவார்!

உங்கள் பிள்ளைகளுக்கு சீக்கிரம் நல்ல வரன் அமைய தினமும் காலையில் முருகப் பெருமானை வழிபடுங்கள்.சஷ்டி கவசம் படியுங்கள். தினமும் மாலையில் துர்கையை வழிபடுங்கள். துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றுங்கள். விரைவில் நல்லது நடக்கும். வீட்டில் கெட்டிமேளம் முழங்கும்!

இன்னொரு விஷயம்.

ஏழு சுமங்கலிகளை வீட்டுக்கு அழையுங்கள். அவர்களுக்கு புடவை, ஜாக்கெட், விரலிமஞ்சள், குங்குமம், வளையல் என மங்கலப் பொருட்களை வழங்குங்கள். சீக்கிரமே.மாங்கல்ய வரன் அமைந்துவிடும். மங்கல காரியங்கள் ஊரும்பேரும் சிறக்க கோலாகலமாக நடந்தேறும்.

கும்பகோணம் அருகே உள்ள திருமணஞ்சேரி, மதுரை மீனாட்சியம்மன் முதலான ஆலயங்களுக்குச் சென்று இறை தரிசனம் செய்யுங்கள். மனதார வேண்டிக் கொள்ளுங்கள். விரைவில் கல்யாண மாலை தோள் சேரும் என்பது உறுதி!

அனைத்து பிரச்சினைகளும் தீரவேண்டும் எனில்,

திருச்செந்தூர் ஆண்டவர் தான் கதியென்று கந்தவேலனைச் சரணடையுங்கள்.

செந்தில் வேலன் அங்கே சிவமயமாகவும் இருக்கிறார். குரு பகவானாகவும் திகழ்கிறார். தலையெழுத்தை மாற்றும் பிரம்மாவாகவும் அருள்பாலிக்கிறார். வாழ வைக்கும் திருமாலாகவும் அருளாட்சி செய்கிறார். சக்திவேல் தாங்கி சக்தி சொருபமாகவும் வீற்றிருக்கிறார். அவரைத் தரிசிப்பவர்களின் பிரச்சினைகளையெல்லாம் தீர்க்கும் வள்ளலாகவும் எழுந்தருளியிருக்கிறார்.

இவை அனைத்துமே எளிய பரிகாரங்கள். ஆனால் வலிமையான பரிகாரங்கள். அதிக பணம் பிடுங்குகிற பள்ளிக்கூடமே நல்ல பள்ளிக்கூடம் என்று நாம் நினைக்கிறோம் அல்லவா. அப்படித்தான்... அதிகம் செலவு செய்யும் பரிகாரங்களே சிறந்த பரிகாரங்கள் என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி நம்மை நினைக்க வைக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த எளிமையான அதேசமயம் சக்தி வாய்ந்த பரிகாரங்களைத் தந்திருக்கிறேன். பயன்படுத்தி நன்மை பெறுங்கள். நலமுடனும் வாழ்க்கைத்துணையுடனும் இனிதே வாழுங்கள்.

=====================================

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.