உச்சத்தில் இருக்கும் கிரகங்களின் பலன்கள்

சூரியன் மேஷத்தில் உச்சம் அடைகிறார். சூரியன் உச்சமாகப் பிறந்தவன் அரசாள்பவனாகவும் மிகுந்த பராகிரமம் நோய் இல்லாமையும் அங்கவீனம் இல்லாதவனாகவும் தனலாபமும் பலவித வாகனங்களையும் உடையவனாக விளங்குவான்.

சந்திரன் ரிஷபத்தில் உச்சம் அடைகிறார். சந்திரன் உச்சமாகப் பிறந்தவன் நல்ல மனமும் புத்திர விருத்தியும் சகலமான பேர்களிடத்தில் நட்பு பாராட்டுபவனாகவும் இருப்பான். அதிக யோகமும் தனலாபமும் உண்டாகும்.

செவ்வாய் மகரத்தில் உச்சம் அடைகிறார். செவ்வாய் உச்சமாகப் பிறந்தவன் மிகுந்த ஆயுள் விருத்தியும் அந்நியரிடத்தில் தயவும் பராகிரமமும் பெற்றவனாவான். பிதுர் பாக்கியமும் விவேகமுள்ளவனாகவும் இருப்பான். பித்த தேகமுடையவனாய் இருப்பான்.

புதன் கன்னியில் உச்சம் அடைகிறார். புதன் உச்சமாகப் பிறந்தவன் பல கலைகளை அறிபவனாகவும் மிகுந்த நற்குணம், நற்புத்தி உடையவனாகவும் விளங்குவான். பந்துக்களிடத்தில் விசுவாசமும் கணக்கில் தேர்ச்சியும் பெற்றவனாகவும் ஒப்பற்ற அரசனைப் போல நூறு வயது வரை வாழ்பவனாக இருப்பான்.

குரு கடகத்தில் உச்சம் அடைகிறார். குரு உச்சமாகப் பிறந்தவன் ராஜனைப் போல் அதிக ஐஸ்வரியமும் ஆடை ஆபரணமும் மிகுந்த யோகமும் உடையவனாக விளங்குவான். மிகுந்த கல்வியும் சகல வாகனங்களும் புத்திரர்களும் உடையவனாவான். 

சுக்கிரன் மீனத்தில் உச்சம் அடைகிறார். சுக்கிரன் உச்சமாகப் பிறந்தவன் அதிக் பொன் பொருள் உடையவனாகவும் படிப்பில் சிறந்தவனாகவும் சுகபோகங்களை அனுபவிப்பவனாகவும் இருப்பான்.

சனி துலாத்தில் உச்சம் அடைகிறார். சனி உச்சமாகப் பிறந்தவன் நீண்ட ஆயுளும் தேக சௌக்கியமும் நினைத்ததை அடைபவனுமாய் இருப்பான். பொன், பொருள் பெற்று இன்பம் அடைபவனாய் இருப்பான்.

ஒரு கிரகம் உச்சமாகப் பிறந்தவன் துன்பம் இல்லாமல் நல் வாழ்க்கை அடைவான். இரண்டு கிரகம் உச்சம் பெற்றவன் அரசனாகவோ அவனைப் போன்ற செல்வந்தனாகவோ விளங்குவான். மூன்று கிரகம் உச்சம் பெற்றவன் சிறந்த தலைவனாகவும் நான்கு கிரகம் உச்சம் பெற்றவன் லட்சுமி தாண்டவம் பெற்று செல்வந்தனாகவும் விளங்குவான். உச்சமாக இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தால் யோகம் குறையும். 6, 8, 12 இல் உச்சமானாலும் பூரண யோகம் உண்டாகாது.

=====================================

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.