மாங்கல்ய தோஷம்?

கணவன் ஓரிடம்.மனைவி வேறிடம்! இது மாங்கல்ய தோஷமா?

ஒரு ஜாதகத்தில் 8ம் இடம் தான் மாங்கல்ய ஸ்தானம். குறிப்பாக பெண் ஜாதகத்திற்கு மட்டுமே பெரும்பாலும் பார்க்கப்படும். அப்படியானால் ஆண்களுக்கு பார்க்கமாட்டார்களா? என்று யோசிக்கலாம்.

திருமணப் பொருத்தத்தின் போது “ பெண் ஜாதகத்திற்குத்தான் ஆண் ஜாதகம் பொருந்துகிறதா” என்று பார்க்கப்படுமே தவிர, ஆண் ஜாதகத்திற்கு பெண் ஜாதகத்தைப் பார்க்கக்கூடாது.

இரண்டுமே ஒன்றுதானே. என்னங்க இது.என்று யாரேனும் சொல்லலாம். ஆனால் பார்க்கப்படும் முறையானது இப்படித்தான்.

உதாரணமாக “பெண் பார்க்கப் போகிறோம்” என்று தான் கூறுவார்கள், மாப்பிள்ளை பார்க்கப்போகிறோம் என்று கேள்விபட்டிருக்கிறீர்களா?

மாப்பிள்ளை வீடு பார்க்க போகிறோம் என்றுதான் சொல்லுவோம். சொல்லுவார்கள்.

அதுபோலத்தான் “ பெண்ணுக்குத்தான் ஆணே தவிர, ஆணுக்குப் பெண் அல்ல”

மாங்கல்ய தோஷம் பெண்ணுக்குதான் முக்கியத்துவம் தரப்படுகிறது என்று.

என்ன செய்யும் மாங்கல்யதோஷம்.

திருமணத்திற்குப்பின் கணவனுக்கு “மாரக கண்டம் “ ஏற்படுத்தும் என்பதே, பெரும்பாலோர் சொல்லுவது!

இது உண்மையா? எட்டாம் இடம், அதன் அதிபதி கிரகத்தின் நிலை, நவாம்சநிலை இவையெல்லாம் கவனிக்கப்பட வேண்டும்.

மாரகம் மட்டுமே தான் தருமா? இல்லை,

கணவன் மனைவி சேர்ந்து வாழ்வதுதான் சிறப்பு. அதைவிடுத்து கணவன் ஒரு பக்கம், மனைவி ஒரு பக்கம் என வாழ்ந்தால் அதில் என்ன மகிழ்ச்சி இருக்கிறது?

இதுவும் மாங்கல்யதோஷம்தான்.

பெண் ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் எந்த இடத்திலும் சூரியனும் செவ்வாயும் சேர்ந்திருந்தாலும் அதுவும் மாங்கல்யதோஷம்தான்.

நிச்சயமாக அவருடைய கணவர் சம்பாத்தியத்திற்காக வெளியூர் அல்லது வெளிநாட்டில் தான் இருப்பார்.

ஆனால் தோஷத்தையும் சில தியாகங்கள் மூலமாக சரிசெய்ய முடியும்.

தோஷ பரிகாரம் என்பது ஆலய வழிபாட்டால்தான் சரியாகும் என்பதில்லை,

இப்படி சில தியாகங்களாலும் சரியாகும்.

அதாவது ஜாதகத்தில் ஒவ்வொரு கட்டமும் “பொருள்பற்று, உயிர்பற்று” என இரண்டு விஷயங்களை உள்ளடக்கியதாகும்.

பொருள்பற்று என்பது பொருளாதாரம் சார்ந்தது,

உயிர்பற்று என்பது வாழ்க்கை சார்ந்தது,

நிச்சயமாக, உறுதியாக இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் அனுபவிக்க கொடுத்துவைக்கப்படும். மற்றதை விலக்கியே வைக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

நோயற்று இருந்தால், பணம் தராது. பணம் தந்தால் எதையும் அனுபவிக்க உடல் ஒத்துழைக்காது. இது யதார்த்தமான உண்மை.

என் நண்பனின் திருமணத்தன்று மாங்கல்யம் காணமல் போனது.

இது ஏன்? எதனால்? பார்ப்போம்.

தாலி தானம் செய்யுங்கள்; தோஷம் நீங்கும்!

என் நண்பனின் திருமணம். அப்போது தாலி கட்டுவதற்கு முன்பு மாங்கல்யத்தை அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்க அனுப்பினார்கள். அதன்படி மண்டபத்தில் எல்லோரிடமும் ஆசி பெறப்பட்டது. பிறகு மணமேடைக்கு வந்து தாம்பூலத் தட்டைப் பார்த்தபோது, ஐயர் உட்பட சுற்றி நின்றவர்கள் அதிர்ந்து போனார்கள். ஆமாம். திருமாங்கல்யத்தைக் காணவில்லை!

ஆசிர்வாதம் செய்த எவரோ ஒருவர் மாங்கல்யத்தைக் களவாடிவிட்டார்.

வேறு வழியே இல்லை. அவசர அவசரமாக விரலிமஞ்சள் வைத்து மாங்கல்யம் தயார் செய்து தாலி கட்டினார் நண்பர்,

ஒருமாதம் கழித்து என்னைப் பார்த்தவர் “ ஏன் இப்படி நடந்தது? இது ஏதாவது அபசகுனமா?’’ என்றும் கேட்டார்.

இங்கே ஒரு விஷயம்.நண்பருடையது காதல் திருமணம். எனவே, ஜாதகம் ஏதும் பார்க்கப்படவில்லை.

நான் அவர் ஜாதகத்தையும் அவர் மனைவியின் ஜாதகத்தையும் பார்த்துவிட்டு ஒரே வரியில் சொன்னேன்.“ஒன்றும் பயப்பட வேண்டாம். இது “புனர்பூ தோஷம்”மட்டுமே. மாங்கல்ய தோஷம் ஏதும் இல்லை என்று சொல்லி, தைரியம் தந்து அனுப்பினேன்.

அவருக்கு திருமணம் முடிந்து தற்போது 27 வருடங்கள் ஆகிவிட்டன. இன்றளவும் நன்றாகத்தான் இருக்கிறார்கள்.

உண்மையில் என் நண்பரின் மனைவிக்கு மாங்கல்ய தோஷம் உள்ளது. ஆனாலும் அது தன் தோஷ வீரியத்தைக் காட்டியதால்தான் மாங்கல்யம் களவு போனது.

அவருக்கு 7 ஆம் இடத்தில் சூரியன், செவ்வாய் அமர்ந்து தோஷத்தைத் தந்தது. களவு போனதால் தோஷம் நீங்கியது.

களவு போகாவிட்டால் என்ன நடந்திருக்கும்?

இங்கே சில விளக்கங்கள் சொல்லியாகவேண்டும்.

சூரியன், செவ்வாய் சேர்க்கை என்பது 12 ராசிகளில் அமர்ந்திருக்கும் இடத்திற்கு தகுந்தாற்போல் வேலை செய்யும்.

நான் பெரிய விளக்கம் தந்து உங்களை குழப்பப்போவதில்லை,

1) இப்படி மாங்கல்யம் களவு போவது

2) மாங்கல்யத்தில் பின்னம் ஏற்பட்டு அதை சரி செய்து மீண்டும் அணிவது   ( எப்படியும் ஒருமுறையாவது கழட்டி மாட்டவேண்டி வரும்)

3) குறைந்தபட்சம் அடகு வைக்கப்படும் சூழல் உண்டாகும்.

4) திருடர்களிடம் பறிகொடுப்பது

5) ஏதோ ஒரு சூழ்நிலையில் வேண்டுதலுக்காக ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுப்பது.

இப்படி பல வகையிலும் தோஷம் தன் வீரியத்தைக்காட்டும்.

ஆனால் ஒருபோதும் யாருடைய விதியையும் முடித்துவிடாது.

விதி முடியாமல் யாரும் இறைவனை அடைய முடியாது.

எனவே மாங்கல்யதோஷம் என பெரிய பரிகாரங்கள் செய்ய வேண்டியதில்லை என்பதே என் கருத்து.

அப்படியானால் என்ன மாதிரியான பரிகாரங்கள் செய்யலாம்?

திருமணம் முடிந்து 3 வது மாதத்தில் தாலி கோர்த்தல் என்ற வைபவம் நடக்கும் அல்லவா! அப்போது அந்த திருமாங்கல்யத்தை ஏதாவது அம்மன் ஆலயத்தில் செலுத்திவிட்டு, புதிதாக மாங்கல்யம் செய்து அணிந்து கொள்ளலாம்.

ஏழைப்பெண்ணுக்கு அவர்களின் திருமணத்திற்கு உங்கள் செலவில் மாங்கல்யம் செய்து தாருங்கள், மிகப்பெரிய புண்ணியம் உண்டாகும்,

தர்மம் செய்வது (யாருக்கும் தெரியாமல்) எப்படிப்பட்ட தோஷத்தையும் இல்லாமல் செய்துவிடும்.

பலம் சேர்க்கும் அம்மன் வழிபாடு!

=====================================

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.