புனர்பூ தோஷம்

ஜாதகத்தில் “சனி பகவானும் சந்திர பகவானும் சேர்ந்திருந்தாலும், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலும், அவர் வீட்டில் இவரும், இவர் வீட்டில் அவர் இருந்தாலும் அதாவது பரிவர்த்தனை அடைந்திருந்தாலும், இந்த புனர்பூ தோஷம் வேலை செய்யும்.

அப்படி என்னென்ன செய்யும்?

இந்த தோஷம் திருமணத்தின்போது மட்டுமே வேலை செய்யும், அதாவது திருமணத்தின் போது சண்டை சச்சரவுகள் , மண்டபம் மாறுதல் என பல குழப்பங்களைத் தந்து திருமணமே நின்று போகும் அளவுக்கு பாதிப்பைத் தந்து மன உளைச்சலைத் தரும்.

புனர்பூ தோஷங்களைப் பார்த்தோம். அதற்கான பரிகாரங்களைப் பார்க்கலாம்.

1.   புனர்பூ தோஷம் என்பது சனி மற்றும் சந்திரன் இணைவதால் ஏற்படும் தோஷம்.

2.   சனி ஒரு ராசியைக் கடக்க இரண்டரை ஆண்டுகள் ஆகும்.

3.   சந்திரன் ஒரு ராசியைக் கடக்க வெறும் இரண்டே கால் நாட்கள் மட்டுமே ஆகும்.

4.   சந்திரன் “ மன காரகன் மனம் என்பது எவ்வளவு வேகமானது என்பதை நான் சொல்லத்தேவையில்லை. நீங்களே அறிந்ததுதான். இப்போது உங்களுக்கேப் புரிந்திருக்கும்.

5.   இரட்டை மாட்டு வண்டியில் ஒருமாடு வேகமானதாகவும், மற்றொரு மாடு மெதுவானதாகவும் இருந்தால் வேலைக்கு ஆகுமா?

அதுபோலத்தான் இந்தக் கிரக இணைவு.

மனம், எண்ணம் வேகமாக இருக்கும், ஆனால் உடல் ஒத்துழைக்காது.

இதைப் பரிகாரங்களால் மட்டுமே நிவர்த்தி செய்ய முடியாது.

உங்கள் பழக்கவழக்கத்தால் மட்டுமே மாற்றியமைக்க முடியும்.

மிக முக்கியமாக “ தியானம் பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்தும்.”

இதுவே சித்தர்கள் சொன்ன ரகசியம்.

ஆலயப் பரிகாரங்களை பார்க்கலாம்

திருமலையில் உள்ள சீனிவாசபெருமாள் சனி அம்சம் என கருதப்படுபவர், அதேசமயம் அந்த திருமலை சந்திர ஸ்தலம் என்று போற்றப்படுகிறது.

வளர்பிறை காலத்தில் திங்கட்கிழமை அன்று இரவு முழுவதும், அல்லது பௌர்ணமி நாளில் இரவு முழுவதும் திறந்தவெளியில் இருந்து பெருமாளை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்,

அதன் பிறகு ஏற்படும் அற்புதத்தைப் பாருங்கள்.

திருமலையில் ஶ்ரீவராகசாமி ஆலயம் திருக்குளத்திற்கு அருகே உள்ளது. அவரையும் தரிசித்து விட்டு, குளத்தில் உள்ள மூன்றாவது படியில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்யுங்கள், நீங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும்,

ஏன் அந்த படி?

அங்கே கொங்கணர் சித்தர் உள்ளார். ரசவாதம் அறிந்தவர். மக்கள் வறுமையில்லாமல் இருக்கவேண்டும் என்று ஒரு மலையையே தங்கமாக மாற்ற முயன்றவர். அந்த முயற்சி ஆரம்பிக்கும் போதே சிவனால் தடுக்கப்பட்டு திருமலைக்கு அனுப்பப்பட்டவர்.அவர் அங்கே ஜீவசமாதி ஆனவர்.

இப்போது புரிகிறதா! ஏன் திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படுகிறதென்று?

திருப்பதி சென்று வருகிறோம். வேறு ஏதாவது பரிகாரம் உண்டா? உண்டு.

சனி சந்திரன் சேர்க்கை என்பது மன உறுதியைக் குலைக்கும்,

ஶ்ரீஅனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபட மன உறுதி கிடைக்கும்.

சக்திவடிவான அம்மன் ஆலயங்களில் தொடர்ந்து வழிபாடு செய்ய நல்ல பலன் கிடைக்கும்,

ஐயப்பனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட நல்லது நடக்கும்.

எல்லை மற்றும் காவல் தெய்வங்களான அதிலும் பெண் தெய்வங்களை வழிபட அற்புதமானப் பலன்கள் கிடைக்கும் ( திரௌபதி அம்மன், மாரியம்மன், மாகாளி போன்ற தெய்வங்கள்).

மாற்றுதிறானாளிகளுக்கு முடிந்தவரை உதவுங்கள். வசதி இருந்தால் மூன்றுசக்கர வாகனம், ஊன்றுகோல், இன்னபிற வசதிகளை செய்து தாருங்கள்.

ஆன்மிக நடைப்பயணம் செல்பவர்களுக்கு வசதிகளைச் செய்து தாருங்கள். தண்ணீர் பந்தல், நீர்மோர் வழங்குதல் போன்ற தானங்களைச் செய்யுங்கள்; வாழ்க்கை சிறப்பாகும்.

விபத்து நடக்கும் இடம் என்ற அறிவிப்புப் பலகை, சாலையோரத்தில் இருக்கும், பார்த்திருக்கிறோம்தானே. அப்படித்தான் இதுவும்!

தோஷங்களையும் பிரச்சினைகளையும் பார்க்கலாம்.

திருமணத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இனிதாக நடந்து மாங்கல்யமும் கட்டி முடித்தார். ஆனால் மாங்கல்யத்தை மணமாலைக்கு உள்ளே விட்டு கட்டியதால், மாலைமாற்றும் வைபவத்திற்கு மாலையை எடுக்க முற்படும்போதுதான் இந்த விபரம் தெரிய வந்தது,

மாலையை எடுத்தால் மாங்கல்யமும் சேர்ந்தே வரும், என்ன செய்வது கட்டிய மாங்கல்யத்தை பிரிக்கக்கூடாது,

எனவே மாலையைப் பிரித்து மீண்டும் கட்டிவிட்டு இந்த மாலைமாற்றும் வைபவத்தைச் செய்தார்கள்,

இதில் கவனிக்கப்படவேண்டியது, எத்தனை விழிப்புடன் இருந்தாலும் கிரகங்கள் தன் கடமையை செய்யத் தவறுவதே இல்லை என்பதுதான்.

ஒரு பதட்டத்தை, குழப்பத்தை ஏற்படுத்துவதுதான் புனர்பூ தோஷத்தின் மகிமை.

இன்னும் ஒரு சம்பவம் சொல்கிறேன்.

நண்பரின் மகளுக்கு நடந்த திருமணம் பற்றியது இது.

அந்தப் பெண் ஒருவரைக் காதலித்தார். ஆனால் என் நண்பர் ஏற்றுக்கொள்ளவில்லை.

என்னிடம் ஆலோசனை கேட்டார். நான் இந்த புனர்பூ தோஷம் உங்கள் மகளுக்கு இருப்பதாலும், அவர் ஜாதகப்படி காதல் மணம்தான் நடக்கும் என்று சொன்னேன்,

ஆனால் அவர் இது கௌரவ பிரச்சினை எனக் கூறி, மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்து பத்திரிகையும் அடித்து விட்டார்.

ஆனால் அதன் பிறகு மாப்பிள்ளை வீட்டார் நடந்து கொண்ட விதம் சரியாக இல்லாததால் திருமணத்தை நிறுத்திவிட்டார்,

இப்போதும் என்னிடம் ஆலோசனை கேட்டவரிடம் காதலித்த பையனையே மணம் முடித்து விடுங்கள் என்றேன். ஆனால், கேட்கும் மனநிலையில் அவர் இல்லை.

அடுத்ததாக இன்னொரு வரனை நிச்சயம் செய்து மீண்டும் பத்திரிகை அடிக்கப்பட்டது, முதல் பத்திரிகையை, குலதெய்வத்தின் சந்நிதியில் வைக்க சொந்த ஊர் சென்றார்.

அப்போது மாப்பிள்ளை போன் செய்து ஏதோ கேட்க, குலதெய்வத்திற்கு பத்திரிக்கை வைக்காமல் அப்போதே திருமணத்தை நிறுத்திவிட்டார்.

இப்போது வாடிவதங்கி என்னிடம் வந்தவர், காதலித்த பையனையே பேசி முடிக்கிறேன். இருவர் ஜாதகமும் நன்றாக உள்ளதா எனக்கேட்டார். அற்புதமாக உள்ளது , சேர்த்து வையுங்கள் என பிரச்சினையை முடித்து வைத்தேன்.

யோசித்துப் பாருங்கள்.அவரின் வறட்டுப் பிடிவாதம் எவ்வளவு செலவு, அலைச்சல், மனநிம்மதி என பாதிக்கப்பட்டது. எப்படியெல்லாம் உளைச்சலுக்கு ஆளானார்.

என்னதான் முயற்சி செய்தாலும் கிரகங்களின் வீரியத்தைத் தடுக்க முடியாது என்பதை உணர்ந்தாலே, பரிகாரம் என்ற பெயரில் செலவு செய்வது வீண் என்பதை உணர்ந்துகொள்வோம். அப்படி நீங்கள் உணர்ந்தாலே, இந்தத் தொடரின் வெற்றி என மகிழ்வேன்.

பிரச்சினைகளைக் கண்டு பயந்து பரிகாரம் செய்கிறேன் என்று ஒளிவதை விட இறைவனின் துணையோடு அதை எதிர்கொண்டு கடந்து போவதே உண்மையான பரிகாரம்!

நாம் , “வாழ்க்கையில் என்ன செய்யும் இந்த புனர்பூ தோஷம்

ஒருவர் ஜாதகத்தில் சனிபகவானும், சந்திரபகவானும் சேர்ந்திருந்தாலும், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலும், அவர் வீட்டில் இவர், இவர் வீட்டில் அவர் என பரிவர்த்தனை அடைந்தாலும் இந்த புனர்பூ தோஷம் வேலை செய்யும்.

திருமணத்தில் தரும் பாதிப்பைப் பார்த்து விட்டோம். வேறு என்ன செய்யும்?

1.   இந்த தோஷம் இருப்பவர்கள், எந்த ஒரு விஷயத்திலும் முடிவெடுக்கத் திணறுவார்கள், முடிவெடுத்த பின் செயல்படுத்தவும் தயங்குவார்கள்.

2.   இதையெல்லாம் தாண்டி எடுத்த முடிவு.பாவம் முடிவுக்கே வராது இழுத்தடிக்கும். அதாவது நடைபெறாத முயற்சியாகவே இருக்கும்.

3.   இன்னும் என்ன? குழப்பவாதி, தானும் குழம்பி, மற்றவரையும் குழப்பிவிடுபவர், முடிவெடுக்க தயங்குபவர், தவறான முடிவுகளை எடுப்பவர் என்றெல்லாம் பெயர் சம்பாதிக்க நேரிடும்.

4.   அலைச்சல் மிகுந்த வேலை செய்பவர், (மார்க்கெட்டிங்) டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட் தொழில் செய்பவர், ஓட்டுநர், உணவுத்தொழில்,

5.   அடிக்கடி வேலை மாறிக்கொண்டே இருப்பவர்,

6.   அதாவது நிலையாக ஒரே இடத்தில் வேலையில் இருக்கமாட்டார்,

7.   எந்த வேலை அல்லது தொழில் செய்தாலும் மனநிறைவு இல்லாதவர், அடிக்கடி கன்னத்தில் கை வைத்துக்கொள்பவர்,

8.   ஜாதகம் பலமாக இருந்தால் நாடுநாடாக சுற்றி பொருள் ஈட்டுபவர்,

9.   மனசஞ்சலம் உடையவர், ஜாதகம் பலவீனமாக இருந்தால் மனநல பாதிப்பை அடைவார்,

10. இருளுக்கு பயப்படுவார், அமானுஷ்யத்தில் நம்பிக்கை உடையவராக இருப்பார்.

11. மதுப் பழக்கம் ஏற்பட்டால் மீளமுடியாதவர்.

12. இரவில் தூக்கம் இல்லாமல் தவிப்பவர்.

13. பகல் தூக்கம் விரும்புபவர்.

14. இளமையிலேயே நரைமுடி ஏற்படும், உடலில் நீர்ச்சத்து குறைபாடு உடையவர். அடிக்கடி வாயுதொல்லை ஏற்படும்.

இவற்றில் இருந்து விடுபடுவதற்கு, தானம் செய்யுங்கள். திருமலை திருப்பதிக்குச் சென்று தரிசியுங்கள். தியானம் பழகுங்கள்.

தண்ணீர்ப் பந்தல், மோர்ப்பந்தல் அமைத்து எல்லோருக்கும் வழங்குங்கள்

=====================================

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.