கந்தர் அலங்காரம்

திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்

பாடல் 1 பேற்றைத் தவம் :

பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னைப் பிரபஞ்சம் என்னும்

சேற்றைக் கழிய வழிவிட்டவா! செம் சடா அடவிமேல்

ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்

கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் கிருபாகரனே.

பொருள் :

குமரப் பெருமானே, முக்தியைப் பெறுவதற்குரிய தவப்பயன் சிறிதேனும்

இல்லாத அடியேன், அசுத்தப்படுத்தும் பிரபஞ்சம் என்னும் சேற்றினை

விட்டு உய்யுமாறு உண்மையான வழியைக் காட்டியருளினீர்! அடர்ந்த

சிவந்த சடையின்மீது கங்கை நதியையும் நாகப் பாம்பினையும்

கொன்றை மலரையும் தும்பை மலரையும் சந்திரனது பிறையையும்

சூடிக் கொண்டுள்ள சிவபெருமானின் குமாரனாகிய தேவரீர்,

திருமுருகப்பெருமானாக மட்டுமன்றி, கருணைக்கு உறைவிடமான

கிருபாகரனாகவும் விளங்குகின்றீர்.

 

பாடல் 2 அழித்துப் பிறக்க :

அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியை அன்பால்

எழுத்துப்பிழை அறக் கற்கின்றிலீர் எரி மூண்டது என்ன

விழித்துப் புகை எழப் பொங்கு வெம் கூற்றன் விடும் கயிற்றால்

கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே.

பொருள் :

 

தீவினைகளை அழித்து இவ்வுலகில் மீண்டும் பிறவி எடுக்காமல் பேரின்ப

வீட்டை (முக்தியை) வழங்கவல்ல கூர்மையான வேலினைத் தாங்கிய

திருமுருகப்பெருமானைப் புகழும் திருப்புகழ்ப் பாடல்களை இன்றே

மெய்யன்புடன் எழுத்துப் பிழைகள் சிறிதுமின்றி கற்றுக் கொள்ளாமல்

(ஓதாமல்) இருக்கின்றீர்களே! நெருப்புமூண்டு எரிவதைப்போல கண்களை

உருட்டிப் பார்த்துப் புகை எழுமாறு சீறுகின்ற கொடிய இயமன் வீசுகின்ற

பாசக் கயிற்றினால் கழுத்திலே சுருக்குப் போட்டு உங்கள் உயிரைப் பற்றி

இழுக்கின்ற அந்த நாளிலா திருப்புகழ்ப் பாடல்களைக் கற்பது (ஓதுவது)

இயலும்?

 

பாடல் 3 தேர் அணி இட்டு:

தேர் அணி இட்டு புரம் எரித்தான் மகன் செம் கையில் வேல்

கூர் அணி இட்டு அணுவாகிக் கிரௌஞ்சம் குலைந்து அரக்கர்

நேர் அணி இட்டு வளைந்த கடகம் நெளிந்தது சூர்ப்

பேர் அணி கெட்டது தேவேந்திர லோகம் பிழைத்ததுவே.

பொருள் :

தேரை அலங்கரித்துச் செலுத்தி, ['ஆணவம்-மாயை-கன்மம்' என்னும்]

மூன்று கோட்டைகளைத் [தம் திருப்பார்வையினாலேயே] எரித்து அருளிய

சிவபெருமானுடைய திருக்குமாரர் திருமுருகப்பெருமானின் சிவந்த கையில்

உள்ள கூர்மையான வேலாயுதத்தால் தைக்கப்பட்ட கிரௌஞ்ச

மலையானது அணு அணுவாக துகள்பட்டு அழிந்தது. ஆரம்பத்தில் நேராக

அணிவகுத்துவந்து பின்னர் வட்டவடிவில் வளைந்து கொண்ட

அசுரர்களின் சேனை தளர்ந்து ஓடியது; சூரபன்மனுடைய பெரிய

நடுச்சேனையும் அழிந்தது. தேவர்கள் வதியும் அமராவதியும்

அசுரர்களிடமிருந்து உய்வு பெற்றது.

 

பாடல் 4 ஓர ஒட்டார் :

ஓர ஒட்டார், ஒன்றை உன்ன ஒட்டார், மலர் இட்டு உனது தாள்

சேர ஒட்டார் ஐவர்; செய்வது என் யான்? சென்று தேவர் உய்யச்

சோர நிட்டூரனை சூரனை கார் உடல் சோரி கக்கக்

கூர கட்டாரி இட்டு ஓர் இமைப் போதினில் கொன்றவனே!

பொருள் :

[ஐம்புலன்களாகிய] ஐவர், தேவரீரின் திருவடிப்பெருமைகளை

ஆராயவிடமாட்டார்; ஒரே பரம்பொருளாகிய தேவரீரை

நினைக்கவிடமாட்டார்; நறுமணமிக்க மலர்களால் அருச்சித்து

தேவரீரின் தாமரை மலர் போன்ற திருவடிகளைச்

சென்றடையவிடமாட்டார். அடியேன் என்ன செய்வது? அமரர்கள்

உய்யவேண்டி, திருட்டுத்தனமும் கொடூரமும் பொருந்திய சூரனை,

அவனுடைய கரிய உடலிலிருந்து இரத்தம் வெளிவருமாறு

கூர்மையான வேலாயுதத்தைச் செலுத்தி ஓர் இமைப் பொழுதிலேயே

அழித்தவரே!

பாடல் 5 திருந்த அம் :

திருந்த அம் புவனங்கள் ஈன்ற பொற்பாவை திருமுலைப்பால்

அருந்திச் சரவணப் பூந்தொட்டில் ஏறி அறுவர் கொங்கை

விரும்பிக் கடல் அழக் குன்று அழச் சூர் அழ விம்மி அழுங்

குருந்தைக் குறிஞ்சிக் கிழவன் என்று ஓதும் குவலயமே.

பொருள் :

அழகிய உலகங்கள் யாவையும் பெற்று அருளிய பொன்னிற உமாதேவியின்

ஞானப் பாலைப் பருகிய பின்னர், சரவணத் தடாகத்தில் உள்ள தாமரை

மலர்த் தொட்டிலில் ஏறி, கார்த்திகைப் பெண்களாகிய ஆறு செவிலியர்

பாலையும் உண்ண விழையவே, கடல் அழவும், கிரௌஞ்சமலை அழவும்,

சூரபன்மன் அழவும், தானும் விம்மிவிம்மி அழுத இளங் குழந்தையை

உலகமானது குரிஞ்சிக் கிழவன் என்று சொல்லும்!

=====================================