வர்கோத்தமம் என்றால் என்ன ?

வர்கோத்தம யோகம் என்றால் என்ன?

ஒருவர் ஜாதகத்தில் குறிப்பிட்ட ஒரு கிரகம் அவர்களது ராசியிலும், நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருந்தால் அதனை வர்கோத்தமம் அல்லது வர்கோத்தம யோகம் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

வர்கோத்தமம் என்பதும் ஒரு யோகம்தான்

1.   வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும்.

2.   ராசி, மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும்.

3.   ராசி கட்டத்தில் சிம்மத்தில் செவ்வாய் இருந்து, அம்சத்திலும் சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் அதற்கு வர்கோத்தம செவ்வாய் என்று பெயர்.

4.   சிம்மத்திற்கு செவ்வாய் யோககாரகன். அவன் வர்கோத்தமமும் பெற்றால் ஜாதகனுக்கு இரட்டிப்பு யோகங்களைக் கொடுப்பார். நல்ல பலன்களைக் கொடுப்பார்.

5.   இதுபோன்று ஒவ்வொரு கிரகத்திற்கும், ஒவ்வொரு லக்கினத்தின் யோககாரனுக்கும் வர்கோத்தமப் பலன்கள் உண்டு. கேட்டால், ஒரு வேளை உங்கள் ஜாதகத்தில் அப்படி யிருந்தால் அசந்துபோய் விடுவீர்கள். காற்றில் மிதப்பீர்கள். அப்படி ஒரு சந்தோஷமான மனநிலை ஏற்படும்.

6.   சாதாரணக் காருக்குப் பதிலாக உங்களுக்கு குளிரூட்டப்பெற்ற சொகுசுக்கார் கிடைக்கும். உங்களுக்குக் கிடைக்கும் பெண் (மனைவி) அழகி என்பதோடு, நன்கு படித்தவளாக, நல்ல வேலையில் (மாதம் இரண்டு லட்ச ரூபாய் சம்பளம்) இருப்பவளாகவும் அமைந்துவிடுவாள். சந்தோஷப் படுவீர்களா - இல்லையா?

7.   அப்படி வர்கோத்தமம் பெறும் கிரகம் வலிமை உடையதாக ஆகிவிடும். அந்த அமைப்பு ஜாதகனுக்கு அதிகமான அளவு நன்மையான பலனைக் கொடுக்கும்! இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும்.

8.   உதாரணத்திற்கு லக்கினம் வர்கோத்தமம் பெற்றால், ஜாதகன் நீண்ட ஆயுளூடன் இருப்பான்!

9.   லக்கினாதிபதி (1 ) , பாக்கியாதிபதி (9 ) , ஜீவனாதிபதி (10 ), சுகாதிபதி (4 ) ஆகிய கிரகங்கள் வர்கோத்தமம் அடைந்தால் ஆயுள் முழுவதும் சிறப்பான பலன்களை அந்த ஜாதகர் அனுபவிப்பார்.

ஒன்பது கிரகங்களுக்கும் தனித்தனியான பலன் உண்டு.

லக்கினம் வர்கோத்தமம் பெற்றால் :  ஜாதகன் நீண்ட ஆயுளூடன் இருப்பான்! மற்ற பலன்கள்:

சுக்கிரன் வர்கோத்தமம் பெறுவது அழகையும், கவரும் தன்மையையும் கொடுக்கும். ஜாதகத்தில் அவரது ஆதிபத்தியத்தை வலிமையாக்கி, சொகுசு வாழ்க்கையையும், நல்ல மனைவி, பெண் சுகம், அனைத்திலும் கவர்ச்சி, கலைத்திறன், ஏதேனும் ஒருதுறையில் பிரபலம் போன்றவைகளை சுக்கிர தசையில் கொடுக்கும்.

இயல், இசை, நாட்டியம், கலைத்துறை, சுக போகம், அழகு கவர்ச்சி, நளினம், கௌரவப் பதவிகள், இல்லறம், காமசுகங்கள். வசதி படாடோபமான உச்சபட்ச உயர்தரமான வாழ்க்கை என பலவகையான உயர் அந்தஸ்துக்களை வாரி வழங்கும் அசுர குருவாவார்.

சூரியன் வர்கோத்தமம் பெறின் இயல்பாகவே ஜாதகருக்கு தலைமை தாங்கும் பண்பு இருக்கும். எதிலும் ஒரு தன்னம்பிக்கையான போக்கும், சிறந்த நிர்வாகத் திறனும் உண்டு. தந்தையின் மூலம் நன்மைகளை அனுபவித்தலும், அரசியல் உயர்வும் ஜாதகருக்கு இருக்கும். சூரியன் வர்கோத்தமமாகி சுபத்துவ, சூட்சும வலுவோடு இருப்பின் அரசு வேலை, அரச லாபம் போன்றவைகள் ஜாதகருக்கு உண்டு.

உயர்ந்த கொள்கை, லட்சியம் உடையவர்கள். பொது வாழ்க்கை, பொதுத் தொண்டில் ஈடுபடுவார்கள். உயர்ந்த பதவிகள் இவர்களை தேடி வரும். அரசாங்கம், அரசியல் தொடர்புகள் உண்டாகும்.

சந்திரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத மன வலிமையைக் கொடுக்கும். எதையும் சட்டென்று புரிந்து கொள்ளும் தன்மையைக் கொடுக்கும் ஜாதகர் நல்ல தாயைக் கொண்டவராக இருப்பார். தாயாரால் அனைத்து மேன்மைகளும் உண்டு. ஜாதகரின் மனவலிமை மிக நன்றாக இருக்கும். எதிலும் உடனடி முடிவு எடுத்து அதனை நல்லவிதமாக செயல்படுத்தியும் காட்டுவார். பொதுநலத்தோடு இருப்பார். சமூக அக்கறை உண்டு. சந்திரன் நல்ல ஆதிபத்தியம் பெற்றிருந்தால் ஜாதகர் பிரபலமாக முடியும்.

பெண்கள், தாய் வழி ஆதரவு இருக்கும். அழகு, கவர்ச்சி இருக்கும். கதை, கவிதை, பாடல்கள், இசைத்துறை போன்றவற்றில் பிரபலமடைவார்கள். சிறந்த கலா ரசிகர்களாக இருப்பார்கள். தனிமையை விரும்புவார்கள். இயற்கையை நேசிப்பவர்கள்.

செவ்வாய் வர்கோத்தமம் அது ஜாதகனுக்கு அதீத ஆற்றலை, செயல் திறனைக் கொடுக்கும்.சகோதர உறவு மற்றும் சகோதர நிலை, சகோதரரால் லாபம் போன்றவைகள் நன்றாக இருக்கும். ஜாதகர் துணிச்சல் உள்ளவராகவும், உடற்பயிற்சியில் விருப்பம் கொண்டவராகவும் இருப்பார். எதிலும் ஒரு அதிகாரத் தோரணை, தைரியம், இளமையான தோற்றத்தில் ஆர்வம்  போன்றவைகள் இருக்கும். செவ்வாய் சம்பந்தப்பட்ட துறைகளால் லாபம் வரும். மருத்துவம், நெருப்பு, விளையாட்டு, அதிகாரம் போன்ற துறைகள் ஜாதகருக்கு அமையும்,

அதிகாரம், ஆற்றல், செயல்திறன் மிக்கவர்கள். பிடிவாதம் வளைந்து கொடுக்காத தன்மையுடையவர்கள் மன வலிமை, உடல் திறன் இருக்கும். விளையாட்டுத் துறையில் புகழ் பெறுவார்கள். ராணுவம், காவல்துறை, வனத்துறை, தீயணைப்புத்துறையில் பணிபுரியும் அமைப்பும் உண்டு.

புதன் வர்கோத்தமம் பெறுவதன் மூலம் ஜாதகர் புத்திசாலித்தனத்துடன் இருப்பார். பேச்சுத்திறமை நன்றாக இருக்கும். எதையும் சட்டென்று கிரகித்துக் கொள்ளும் குணத்தை புதன் தருவார். புதன் எந்த ஆதிபத்தியத்தை பெறுகிறாரோ அதன் மூலம் நன்மைகளோ, தீமைகளோ இருக்கும். கணிதம், சாப்ட்வேர் போன்ற துறைகளில் நிபுணராக இருப்பார். ஜோதிடம் வரும். எதிலும் வியாபாரக் குணங்கள் இருக்கும். பிறர் விரும்பும்படி நடப்பார்.

வித்தையின் நாயகன், கல்விக்கு அதிபதி, கணக்கன், பேச்சாற்றல், எழுத்தாற்றல், மூளை, புத்தி, சிந்தனை, செயல்திறன், மதிநுட்பம் என அனைத்திற்கும் காரண கர்த்தா. கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்கள். சாஸ்திரங்கள், ஆராய்ச்சிகள் என எங்கும் எதிலும் புதன் ஆளுமை இருக்கும்.

குரு:

குரு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத புத்திசாலித்தனத்தைக் கொடுக்கும்

தலைமைப் பதவி, நீதித்துறை, நிதித்துறை, வழக்கறிஞர்கள், நல்ல சிந்தனைகள், பக்தி, ஞானம், சாஸ்திர சங்கீதம், உயர்ந்த பதவிகள், கௌரவ பதவிகள், அறக்கட்டளைகள், பள்ளி, கல்லூரி சம்பந்தமான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும்.

சனி வர்கோத்தமம் பெற்றால் ஜாதகர் அதிக நிதானம் உடையவராக இருப்பார். பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் கொடுக்கும். மெதுவாகவும், பொறுமையாகவும் செய்யக் கூடிய வேலைகளில் திறன் உண்டு. அந்த வேலைகள் அவருக்குப் பிடிக்கும். எதிலும் அதிக யோசனை உள்ளவராக இருப்பார். சிறிய விஷயத்திற்கும் மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்வார். இரும்பு, இயந்திரம், தளவாடங்கள், எண்ணெய் வகைகள், கடின உழைப்பு, பொறுமை, சகிப்புத்தன்மை, தொண்டு உள்ளம், பொது சேவை, தலைமைப் பதவி, தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள் ஆயுள்காரகன் என பல வகைகளில் சனியின் அம்சம் இருக்கும்.

ஆதிபத்திய ரீதியில் சனி, லக்னசுபராகி சுபத்துவமும் சூட்சும வலுவும் பெற்றிருப்பின் அவரது வர்கோத்தம நிலைமை இந்த பலனை தலைகீழாக மாற்றும்.

ராகு-கேதுக்கள் வர்கோத்தமம் பெற்றிருப்பின், ராகு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதத் துணிச்சலைக் கொடுக்கும் கேது வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஞானத்தைக் கொடுக்கும். அவர்கள் இருக்கும் வீட்டின் அதிபதியின் நிலையை பொருத்து பலன்கள் இருக்கும். பெரும்பாலான நிலைகளில் இந்த ராகு-கேதுக்கள் தான் இருக்கும் வீட்டின் அதிபதியின் குணத்தையும், தன்னோடு சேர்ந்திருக்கும் கிரகங்களின் அமைப்பையும் பிரதிபலிக்கும் என்பதால் ராகு-கேதுக்களின் வர்கோத்தம நிலையினை அவர்கள் இருக்கும் வீட்டின் அதிபதியின் நிலையோடு ஒப்பிட்டு கணக்கிட வேண்டும்.

ராகு : 

வீரதீரச் செயல்கள், விளையாட்டுத்துறை, பிடிவாத குணங்கள், மன வலிமை, அதீத துணிச்சல், வாழ்க்கையில்  எதிர்பாராத உயர்வுகள் திருப்பங்கள், பதவிகள், கலைத்துறை, நிழற்படம், அனிமேஷன், தொலைத்தொடர்புத்துறை, வெளிநாட்டு தொடர்பு, வாசம், எதிர்பாராத அசுர வளர்ச்சியை தரக் கூடியவர்.

கேது:

ஆன்மிகம், சாஸ்திர ஞானம், இசை ஞானம், மருத்துவம், பட்டம், பதவி, ஆராய்ச்சி படிப்புக்கள், ரசாயணம், கோடீஸ்வர யோகத்தை தரக்கூடிய வல்லமைமிக்க கிரகமாகும். ஆன்மிகச் சிந்தனைகள், சொற்பொழிவாளர்கள், அறங்காவலர்கள். வேதம், வேதாந்தம், ஆலயம், அறக்கட்டளைகள் என பல விஷயங்களுக்கு காரகன். மதம், மடாதிபதிகள் மற்றும் ஞான மோட்சத்தை அருளக் கூடிய கரிகம்.

ஆயினும் ராகு-கேதுக்களுக்கென தனிக் காரகத்துவங்கள் இருப்பதால், அவற்றின் காரகத்துவ அமைப்புகள் சர்ப்பக் கிரகங்களின் வர்கோத்தம நிலையில் சிறப்பான பலன்களைத் தரும். உதாரணமாக ராகுவிற்கு நல்ல பலன்களைத் தரும் இடங்களாக சொல்லப்படும் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி ,மகரம் மற்றும் கேதுவிற்கு நல்ல இடங்களான கும்பம், விருச்சிகம், கன்னி ஆகிய இடங்களில் இவர்கள் வர்கோத்தமம் அடைந்து, மேற்கூறிய இடங்களில் சுபத்துவ, சூட்சும வலுவோடும் அமைந்திருப்பின், அமர்ந்த வீட்டின் ஆதிபத்திய நிலைகளின்படி பெரும் பொருள் தருவார்கள்.

ராகு என்பவர் சாமர்த்தியமாக ஏமாற்றும் குணமுடைய கிரகம் என்பதால் ஒருவருக்கு சாதுர்யமான, சுலப வழிகளில் பொருள் தருவார். குறுக்கு வழிகளில் செல்ல வைப்பார். பிரபலமும் அடையச் செய்வார்.

வர்கோத்தம நிலையில் ராகு-கேதுக்கள், ஒரு கேந்திர வீட்டில், திரிகோண அதிபதியுடனோ, ஒரு திரிகோண வீட்டில் கேந்திராதிபதியுடனோ அமர்வது மிகுந்த சிறப்பைத் தரும். தனித்து மூன்று. பதினொன்றாமிடங்களில் சுபத்துவ, சூட்சும வலுவோடு இருக்கும் நிலையில் மிக நல்ல பலன்களைத் தருவார்கள். சில நிலைகளில் ஆறாமிட ராகு,கேதுக்கள் நன்மைகளைத் தருவதில்லை.

1.   இது தவிர, வர்கோத்தமம் பெறும் கிரகம், ஜாதகத்தில் அது எந்த பாவத்திற்கு/வீட்டிற்கு உரியதோ, அந்த வீட்டிற்கான பலன்களை உரிய நேரத்தில் வாரி வழங்கும் இவை எல்லாமே பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகங்களுக்கு இந்தப் பலன்கள், மற்ற கிரகங்களின் பார்வை, சேர்க்கை, வக்கிர நிலைமை, அஸ்தமனம், போன்ற இதர விஷயங்களை வைத்துக் கூடலாம், அல்லது குறையலாம், அல்லது இல்லாமலும் போகலாம். அது அவரவர் வாங்கி வந்த வரத்தைப் பொறுத்தது.

2.   ஏழாம் வீட்டு அதிபதி, ராசி & நவாம்சம் இரண்டிலும் ஒரே இடத்தில் வர்கோத்தமம் பெற்றிருந்தால், ஜாதகனுக்கு, அசத்தலான மனைவி கிடைப்பாள். ஜாதகியாக இருந்தால் அசத்தலான கணவன் கிடைப்பான். இதே பலன், பத்தாம் வீட்டிற்கு எனும் போது, ராசியிலும், தசாம்ச சக்கரத்திலும்,

3.   பத்தாம் வீட்டு அதிபதி வர்கோத்தமம் பெற்றிருக்க வேண்டும். பெற்றிருந்தால், ஜாதகனுக்கு அசத்தலான வேலை கிடைக்கும் அல்லது அசத்தலான தொழில் அமையும்!

சுப மங்கள ராஜயோகம் - விபரீத ராஜயோகம்

காலநேரம் கூடி வரும்போது எல்லாம் நடக்கும். அவன் யோகம். மண்ணைத் தொட்டாலும் பொன்னாக குவிகிறது. இதெல்லாம் ஒருவரின் உயர்ந்த அந்தஸ்தைப் பற்றி நாம் ஒருவருக்கொருவர் பேசும் வழக்கு மொழியாகும். இந்த நேரம், காலம், அம்சம், அமைப்பு, பாக்கியம், அதிர்ஷ்டம், கொடுப்பினை, யோகம் என பலர் பல மாதிரி சொல்கிறார்கள். இது ஒருவரின் உயர்வான ராஜயோக வாழ்க்கையை குறிக்கிறது. அப்படி என்றால் அது ஏன் ஒரு சிலருக்கு மட்டும் வருகிறது. இன்னும் சிலருக்கு அள்ள அள்ள குறைவில்லாமல் கிடைக்கிறது. இதன் சூட்சமம் என்ன.

அவரவர் வினை வழி வந்தனர் யாவரும் என்பது திருமுறை வாக்கு. அதாவது நாம் வாங்கி வந்த வரம் என்று சொல்லலாம். விதைத்தது முளைக்கும். விதிப்படி நடக்கும். நிகழ்வுகள் யாவும் நிச்சயிக்கப்பட்டவை. அதை நமக்குரிய கால நேரத்தில் வழங்கி நம்மை அனுபவிக்கச் செய்வதுதான் ஜாதகம், கிரகங்கள், கட்டங்கள், தசாபுக்திகள் போன்ற இந்த விஷயங்களெல்லாம் நம் பூர்வ ஜென்ம கர்மவினைப்படி ஒருவருக்கு அமைவதாக யோகீஸ்வரர்கள், சப்த ரிஷிகள், இடைக்காடர் முதல் புலிப்பாணி மாற்றும் எண்ணிலடங்கா முனிவர்கள் ஜோதிடச் சுவடிகள் மூலம் தெரிவித்துள்ளார்கள்.

ஒரு சுப கிரகமும் இன்னொரு சுப கிரகமும் சேரும்போது, பார்க்கும்போது பல வகையான யோகங்கள் ஒருவருக்கு வேலை செய்கிறது.

ஒரு ஜாதகத்தில் 1,5,9 ஆகிய இடங்களை மிக சிறப்பாக சொல்வார்கள். அதாவது லக்னாதிபதி, பஞ்சமாதிபதி, பாக்கியாதிபதி ஆகிய இந்த மூன்று கிரகங்கள் நல்ல பலமான நிலையில் ஒருவருக்கொருவர் சம்பந்தம் பெறுவது நேரடியாக சுபமங்கள ராஜயோகமாகும்.

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.